இயற்கை உரம்

வேம்புவில் உருவாகும் இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகள்

Organic fertilizer - இயற்கை பூச்சிவிரட்டி

தேவையானவை

  • கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ,
  • பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ,
  • துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ,
  • கொய்யா இலை 1/2 கிலோ,
  • கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ

செய்முறை

  • இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.
  • 1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும்.
  • நிழலான இடத்தில் மூடி வைக்க வேண்டும்.
  • இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
  • 5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக இலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு

  • இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.
  • வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
  • இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய் பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன.
  • மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயப் பயிர்கள்

  • நெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது.
  • வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது.
  • மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.
  • கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது.
  • அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலானது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது.
  • நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.

நன்மைகள்

  • வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
  • வேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன.
  • இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை.
  • வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை.
  • இதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம்.
  • வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு.
  • எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் .
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!