மேலை நாட்டினர் அதிகமாக விரும்பும் இறைச்சி பன்றி இறைச்சியாகும். ஆனால் நம் நாட்டில் மற்ற கால்நடைகளின் இறைச்சியை விட பன்றி இறைச்சி விலை மலிவாகக் கிடைக்கக்கூடிய புரதம் மிக்க இறைச்சி என்றாலும், அசுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படும் நாட்டுப்பன்றிகளை மிகவும் சுகாதாரமின்றி அறுக்கப்பட்டு விற்பனை செய்வதால் மக்கள் பன்றி இறைச்சி என்றவுடன் முகத்தைக் சுழிப்பதுடன் பன்றி இறைச்சியை உண்பதற்கும் தயங்குகிறார்கள்.
ஆனால் வெளிநாட்டு இனமான வெண்பன்றிகளை பண்ணைகளில் தீவனத்தைக் கொடுத்து சுத்தமாக நல்ல முறையில் பராமரித்து சுகாதார முறையில் சுத்தம் செய்யப்பட்டு விற்பனை செய்தால் வெண்பன்றி இறைச்சியினை ஒரு சில மதத்தினர் தவிர பலரும் விரும்பி உண்ண முன் வருவார்கள். தற்பொழுது நமது அண்டை மாநிலமான கேரளாவில் வெண்பன்றி இறைச்சிக்கு விற்பனை வாய்ப்பு அதிகமிருக்கிறது. போட்டி அதிகமில்லாத தொழிலை ஆரம்பிப்பதினால் நாளுக்கு நாள் பண்ணையை விரிவு படுத்துவதற்கும், வருவாய் நாளுக்கு நாள் அதிகமாவதற்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதனால் தற்போதைய சுழ்நிலையில் வியாபாரரீதியாக சுய தொழில் தொடங்கி நல்ல வருமானம் பெறுவதற்கு வெண்பன்றித் வளர்ப்புத் தொழில் மிகவும் ஏற்றது.
பன்றிவளாப் புத் தொழிலின் நன்மைகள்:
1. குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் தரக்கூடிய ஒரு சுய தொழிலாகும்.
2. பன்றிகள் வருடத்திற்கு இரு முறை 6 முதல் 12 குட்டிகள் வீதம் ஈன்று வெகுவேகமாக
வளரும் திறனுள்ளதால் குறுகிய காலத்தில் அதிகப்பலன் கிடைக்கின்றது.
3. காய்கறிக் கழிவுகளையும், சமையலறைக் கழிவுகளையும் உண்டு வேகமாக வளர்ந்து சத்தான
இறைச்சியை கொடுக்கும் திறன் கொண்டது. சுமார் 2 ½ கிலோ தீவனத்தை 1 கிலோ
இறைச்சியாக மாற்றும் சக்தி கொண்டது.
4. மலிவான கொட்டகை, உபகரணங்கள் போதுமானது.
5. பன்றியின் சாணம் நல்ல தரமான உரம்.
வெண் பன்றிகளைத் தேர்வு செய்தல்:
நமது தட்பவெப்ப சூழ்நிலையைத் தாங்கி நன்கு வளர்வதால் “வெள்ளை யார்க்ஸையா” என்ற அயல்நாட்டு இனப் பன்றிகள் பண்ணை முறையில் வளர்ப்பதற்கு தகுந்த இனமாகும். பெண் பன்றிகளைத் தேர்வு செய்யும் பொழுது அதிக பிறப்பு எடையுள்ள 6-8 மாத குட்டிகளைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். ஓர் ஈற்றில் அதிக குட்டிகள் ஈன்ற தாயிடமிருந்து ஆண் பன்றிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எளிதில் பயந்து ஓடிவிடும் பன்றிகள் மற்றும் சண்டைக் குணம் கொண்ட பன்றிகளைத் தவிர்க்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான 5 பெண் பன்றிகளுக்கு 1 ஆண் பன்றி என்ற விகிதத்தில் வளர்க்கவேண்டும்.
வெண்பன்றிகளுக்கான கொட்டகை அமைத்தல்:
பன்றிக் கொட்டகை அமைக்க அதிக முதலீடு தேவையில்லை. நல்ல காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி கொண்ட, மக்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து நீண்ட இடைவெளி விட்டு, நீர் தேங்காத இடத்தில் கிழக்கு மேற்காக கொட்டகை அமைக்க வேண்டும். தரையானது சிமெண்ட்டினால் பூசப்பட்டு சொரசொரப்பாக இருக்கவேண்டும்.
தரையிலிருந்து அரைமீட்டர் உயரமுள்ள 2 அங்குலம் கனமுள்ள இரும்புக் குழாய்களை 8 அங்குல இடைவெளியில் பொருத்தி பக்கச் சுவர் எழுப்பி அதற்கு மேல் 2 மீட்டர் திறந்த வெளியாக விட்டு கூரையின் கீழ் முகப்பு 2 மீட்டர் உயரம் இருக்கும் வகையில் சாய்வான கூரை அமைத்துக் கொள்ளலாம். கூரை வேய தென்னங்கீற்றுகள் அல்லது ஓடுகள் அல்லது அஸ்பெஸ்டாஸ் தகடுகளைப் பயன்படுத்தலாம். கொட்டகையின் நடுநடுவே 4 அடி சுவர் எழுப்பி, தேவைக்கேற்ப தனித்தனி அறைகளாகப் பிரிக்கப்படவேண்டும். கட்டிடத்தின் உயரம் குறைந்தது 3 மீட்டர் உயரம் இருக்கவேண்டும்.
கொட்டகையின் பாதி பரப்பு மேற்கூரை உடையதாகவும், பாதி திறந்த வெளியாகவும் இருக்கவேண்டும். தீவனம், தண்ணீர் தொட்டிகளை கொட்டகைக்குள்ளேயோ அல்லது திறந்த வெளியிலோ அமைக்கலாம். தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் குட்டிகளை ஆறுமாத வயது வரை சேர்த்தே வளர்க்கலாம். பொலி கிடாப் பன்றி ஒவ்வொன்றிற்கும் தனி அறை அமைக்கப்படவேண்டும். சினைப் பன்றிகளைச் சேர்த்து தனி அறையில் வளர்க்கலாம். ஒரு வளரும் பன்றிக்கு 15 சதுர அடியும், சினைப்பன்றிக்கு 50 சதுர அடியும,; குட்டி ஈன்ற பன்றிக்கு 60 சதுர அடியும், கிடாப்பன்றிக்கு 60 சதுர அடியும் இடவசதி கொடுக்க வேண்டும்.
வெண் பன்றிகளுக்குத் தீவனமளித்தல்
வெண் பன்றிகளுக்குக் காய்கறிக் கழிவுகள் மற்றும் உணவக மிகுதிகள் ஆகியவற்றுடன் அடர் தீவனமும் கொடுத்தால் பன்றிகள் நன்கு வளர்ச்சி அடைவதுடன், நல்லதரமான வெண்பன்றி இறைச்சியை உற்பத்தி செய்யலாம். மக்காச்சோளம், சோளம் போன்ற தானியங்கள் 50 சதவிகிதம், கடலைப்பிண்ணாக்கு 30 சதவிகிதம், தவிடு 19 சதவிகிதம், தாது உப்புக் கலவை 1 சதவிகிதம் கலந்து பன்றிகளுக்கான தீவனத்தை தயார் செய்து கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 12 கிலோ உடல் எடையுள்ள பன்றி 1 கிலோவும், 25 கிலோ உடல் எடையுள்ள பன்றி 1.5 கிலோவும், 45 கிலோ உடல் எடையுள்ள பன்றி 2.5 கிலோவும்; 60 கிலோ உடல் எடையுள்ள பன்றி 3 கிலோவும், 90 கிலோவிற்கு மேலுள்ள பன்றி 3.5 கிலோவும் அடர் தீவனம் உண்ணும். சுத்தமான தண்ணீர் எப்பொழுதும் கிடைக்குமாறு செய்யவேண்டும். பன்றிகளுக்கு வெப்பம் தணிக்கும் தொட்டி ஒன்று திறந்த வெளிப்பகுதியில் அமைத்தால் வெயில் காலங்களில் உடல் வெப்பத்தைத் தணிக்கஉதவும்.
இனப்பெருக்கப் பராமரிப்பு:
ஆண் பன்றிகள் 10 மாத வயதில் இனப்பெருக்கப் பருவத்தை அடைந்தாலும் ஒரு வருட வயதிற்குப் பின் தான் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும். ஆண் பன்றிகளை வாரத்திற்கு ஐந்து முறை இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தலாம். ஓர் ஆண் பன்றியை சுமார் 6 ஆண்டு காலம் வரை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம். பெண்பன்றிகள் 6 முதல் 8 மாதத்தில் பருவமடைந்தாலும் 9 மாதங்களுக்குப் பிறகு இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம்.
21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவத்திற்கு வரும். சினைப்பருவத்தில் பிறப்புறுப்புத் தடித்தும், சிவந்தும் காணப்படும். சளி போன்ற திரவம் பிறப்புறுப்பிலிருந்து வடியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். காதுகள் உயர்ந்து காணப்படும். பின்புறத்தை அழுத்தினால் உடம்பு வளைந்து காணப்படும். வெண்பன்றிகளைப் பருவத்திற்கு வந்த இரண்டாம் நாளில் இனச்சேர்க்கை செய்தல் வேண்டும்.
சினைப்பன்றிகள் பராமரிப்பு:
பன்றிகளின் சினைக்காலம் 114 நாட்கள். இதனை 3 மாதங்கள் 3 வாரங்கள் 3 நாட்கள் என்று நினைவில் வைத்துக்கொள்ளலாம். குட்டிகள் ஈனுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக சினைப்பன்றிகளை தனியான அறையில் வைத்து பராமரித்தல் அவசியமானது. குட்டி ஈனும் அறையின் தரையில் வைக்கோல் கொண்டு படுக்கை அமைக்கவேண்டும். 10 முதல் 12 குட்டிகள் ஈனுவதால் குட்டிகளை ஈன்றெடுக்க சுமார் 2 முதல் 3 மணி நேரமாகும்.
குட்டிகள் பராமரிப்பு:
பிறந்தகுட்டிகளின் மூக்கு, வாயில் உள்ள சளியினை அகற்ற வேண்டும். பிறந்த குட்டிகளின் நஞ்சுக் கொடியினைச் சுத்தமான கத்தரிக்கோலால் வெட்டி “டிங்சர் அயோடின” தடவ வேண்டும். குட்டிகள் பிறந்தவுடன் 30 நிமிடத்திற்குள் சீம்பால் தரப்படவேண்டும். குளிர் காலத்தில் குட்டிகளின் இறப்பைத் தடுக்க 200 வாட்ஸ் மின் விளக்கு பொருத்திய இளஞ்சூடான அறையில் மூன்று முதல் 10 நாட்கள் வரை குட்டிகளை வைக்க வேண்டும்.
குட்டிகளுக்கு இரத்தச் சோகை வராமல் தடுக்க இரும்புச் சத்து ஊசியினை குட்டிகளுக்கு வாரம் ஒருமுறை 3 தடவை போடவேண்டும். குட்டிகளை 3 வார வயதில் பால் மறக்கடிக்க வேண்டும். பால் மறக்கடித்த பின் வருகின்ற சினைப் பருவத்தில் தாய் பன்றிகளை இனவிருத்;தி செய்யவேண்டும். இனவிருத்திக்குத் தேவையற்ற கிடாக் குட்டிகளை மூன்றாவது வாரத்தில் கால்;நடை மருத்துவர் உதவியுடன் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.
வெண் பன்றிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்:
பன்றிக் காய்ச்சல். கோமாரிநோய், பன்றி இன்புளூயின்சா, அம்மைநோய், எரிசிபெலஸ், பன்றி காலரா, அடைப்பான் நோய் போன்ற நோய்கள் தாக்கக்கூடும். இவற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் போட்டு வந்தால், இந்நோய்கள் வராமல் பன்றிகளைக் காப்பாற்றலாம். குட்டிகளுக்கு வரும் இரத்தசோகை நோயை இரும்புச்சத்து ஊசி போடுவதன் மூலம் தடுக்க முடியும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவர் உதவியுடன் குடற்புழு நீக்க மருந்துகளை வெண்பன்றிகளுக்குக் கொடுப்பதன் மூலம் குடற்புழுக்களால் உண்டாகும் பிரச்சினைகளைத் தடுக்கமுடியும். வெண் பன்றிகளை நல்ல சுத்தமான காற்றோட்டமான கொட்டகையில் வளர்க்கவேண்டும். முறையான சத்தமான தீவனம் கொடுக்கப்பட வேண்டும். குட்டி போடும் அறை, தண்ணீர், தீவனத் தொட்டிகளை சுத்தமாக வைக்கவேண்டும். இவ்வாறு நல்ல பராமரிப்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் நோய்கள் வெண்பன்றிகளைத் தாக்குவதைத் தடுத்திடமுடியும்.