விருதுநகர் வேட்டை நாய்கள்

அனைவருக்கும் வணக்கம். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தாளிபட்டி கிராமத்திற்கு வேட்டை நாய்கள் குறித்த நேர்காணலுக்குச் சென்றோம். இதற்கான பயணம் காலை (09.07.2021) 7 மணிக்கு ஆரம்பமானது. இடையில் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு 2 மணி நேரத்திற்கு அந்த கிராமத்தை அடைந்தோம்.

திரு.காளிராஜ் அவர்கள் நமக்காக காத்திருந்தார். இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டினை அமூர் பிரபு அவர்கள் செய்திருந்தார். நமக்காக காத்திருந்த திரு.காளிராஜ் பைக்கைவிட்டு இறங்கிய நிமிடம் வடையும், தேனீரும் சாப்பிட்டாலே ஆச்சு என்று பிடிவாதமாக கூற, வேறு வழியில்லாமல் வடையுடன் தேனீர் அருந்தினோம்.

அதன் பிறகு அவரது வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு அவரது நண்பர்களும் நமக்காக காத்திருந்தனர். வேட்டை நாய்களை நாம் பார்த்தவுடன் அசந்து போய்விட்டோம். கிட்டதட்ட 12க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள். அழகழகாக வரிசையாக இருந்தது.

நேர்காணலுகூகு முன்னதாக கொஞ்ச நேரம் வழக்கம்போல் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். வழக்கம்போல் வீடியோ பதிவு செய்வதற்கான இடம் தேர்ந்தெடுக்கும் நேரம் அதிகம் எடுத்துக் கொண்டது. தென்னை மர நிழலில் முடிவாக பேட்டி பதிவுக்கு தயாரானது.

திரு.காளிராஜ் மிக எதார்த்தமாக பேசினார். அவரது பேச்சில் எந்த கர்வமும், ஆடம்பரமும் தெரியவில்லை. 15 ஆண்டுகள் வளர்ப்பில் உள்ள இவர் எந்த பந்தாவும் நம்மிடம் காட்டிக் கொள்ளவில்லை. எனக்கு நெல்லை பாசை அவ்வளவு பிடிக்கும். அதை அப்படியே திரு.காளிராஜ் பேச்சில் கேட்டு மகிழ்ந்தேன்.

முதல் வீடியோவாக அவரது அனுபவத்தையும், அவர் வளர்க்கும் நாய்குறித்தும் பேட்டியில் கேட்டுக் கொண்டோம். அன்றும் வெயில் மண்டையை பிளந்தது. நாய்களின் நாக்கு தரையை தொடும் அளவிற்கு பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. கிட்டதட்ட நாங்களும் அந்த நிலைக்குச் சென்றுவிட்டோம். ஏனெனில் சிவகாசி மிக அருகில், இங்கு பட்டாசு செய்யும் ஆலைகள் அதிகம். கந்தக பூமி அல்லவா.

சற்று நேரத்தில் பேட்டி சிறப்பாக முடிந்துவிட்டது. 30 இன்ஞ் உயரத்தில் பிரம்மாண்டமான ஒரு நாய் அவரிடம் இருந்தது. அதுதான் எங்கள் இருவரையும் கவர்ந்தது. அதனடுன் புகைப்படங்கள், நாய்களின் வீடியோ பதிவு என நிறைவுடன் 2 மணிக்கு பேட்டி முடிந்தது. அதற்கு பின் என்ன எங்களுக்காக காத்திருந்தது பிரியாணி.

திரு.காளிராஜ் அவர்களின் மனைவி, எங்களுக்காக சிறப்பான பிரியாணி செய்து கொடுத்தார். திரு.காளிராஜ் அவர்களின் மகள் ரித்திகா சுட்டியாக இருந்தாள். ஒரு சாக்லெட் கொடுக்க என்னோடு ஒட்டிக் கொண்டாள். பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டு, அரை மயக்கத்தில் வேப்பமரம் நிழலில் அமர்ந்து கொண்டு இளைப்பாறினோம்.

அதன் பிறகு மீண்டும் ஒரு பேட்டி கன்னிநாய் குறித்து நமது நேயர் கேட்ட கேள்விக்கான வீடியோ பதிவு செய்தோம். 5 மணி ஓடியதே தெரியவில்லை. மழை மேகமாக வானம் இருந்தது. அன்புடன் அங்கிருந்து விடைபெற்று கிளம்பினோம். பயணச் செலவுக்காக திரு.காளிராஜ் அவர்கள் ரூ.500 என்னிடம் வழங்கினார். பெட்ரோல் விலைக்கு அதை மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டு, இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்தடைந்தோம்.

திரு.காளிராஜ் அவர்களின் எதார்த்தமான கன்னிப் பேச்சினை பேட்டியில் கேட்டுவிட்டு உங்கள் கருத்தினை பதிவிடுங்கள். கன்னி பேச்சு ஏன் என்று கூறினேன் என்றால் ? முதன் முதலாக சேனலுக்கு பேட்டி கொடுப்பதால். இப்பொழுது இரவு மணி 3 ஐ கடந்துவிட்டது. தூக்கத்தில்தான் இதை டைப் செய்கின்றேன். எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும், திருத்திக் கொள்கின்றேன்.

மதுரையில் மழை என்பதால் பவர் கட், ஆதலால் இரவு பணி. கண்ணை கட்டுக்கிறது தூக்கம். இருந்தாலும் நாளை காலை 7 மணிக்காக காத்திருக்கும் திரு.காளிராஜ் அவர்களது நண்பர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, தூக்கத்தை தாண்டி எனது பயண அனுபவத்தை முடிக்கின்றேன்.

மீண்டும் திரு.காளிராஜ் அவர்களுடன் பயணம் தொடரும். வரும் ஞாயிற்றுக்கிழமை நேயரின் விருப்ப வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் திரு.காளிராஜ் கச்சிதமாக பேசியுள்ளார். அதுவரை காத்திருங்கள்.

நன்றிகள் ~~~

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்