வான்கோழி வளர்ப்பும், வருமானமும்

வான்கோழி வளர்ப்பு, அமெரிக்காவிலும் சில மேற்கிந்திய நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வியாபார ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சமீபகாலமாகத்தான் வான்கோழி வளர்ப்புத் தொழிலானது தமிழ்நாட்டில் விவசாயிகளிடையே பிரபலம் அடைந்து வருகிறது. ஏனெனில், வான்கோழி இறைச்சியை அனைத்து மதத்தினரும் விரும்பி உண்கின்றனர். வான்கோழி பிரியாணி என்பது நமது நாட்டில் பிரபலமான ஒன்று. அதனால் விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள வான்கோழிகளை நாட்டுக்கோழிகளைப் போன்றே வீட்டின் புறக்கடையில் வைத்து வளர்க்கலாம். கோழிகளைவிட 5-6 மடங்கு எடை அதிகம் பெறக்கூடியவை. இதற்கென சிறப்பு மேலாண்மை எதுவும் தேவையில்லை. இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எந்த விதமான சூழ்நிலையிலும் வான்கோழிகள் வெற்றிகரமாக வளர்ந்து அதிக இலாபத்தை தருவதால் நம் நாட்டின் எந்தப் பகுதியிலும் வான்கோழிகளை வளர்த்து பயன் பெறலாம்.

வான்கோழி இரகங்கள்:
வான்கோழிகளை நிறத்தாலும், உடல் எடையாலும் பல இரகங்களாகப் பிரிக்கலாம். நிறத்தின் அடிப்படையில் பிரான்ஸ், வெள்ளை ஹாலண்டு, போர்பன் சிவப்பு, கறுப்பு, சிலேட்டு, நாரா கென்சட், பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இரகங்களாகவும், உடல் எடையைக் கொண்டு அகல மார்பு கொண்ட பிரான்ஸ், அகல மார்பு கொண்ட பெரிய வெள்ளை மற்றும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை என்ற இரகங்களாகவும் பிரிக்கலாம். நம் நாட்டில் அகல மார்பு கொண்ட பிரான்ஸ், பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை வான்கோழி மற்றும் நாட்டினங்களும் வளர்க்கப்படுகின்றன.

வளர்ப்பு முறை:
வான்கோழிகளை வீட்டின் புறக் கடையில் அல்லது தோப்புகளில் அல்லது தோட்டத்தில் விட்டு வளர்க்கலாம். புறக்கடையில் உள்ள புல், பூண்டு, புழு, பூச்சிகளைத் தின்று வான்கோழி வளரும். வான்கோழிக்கெனச் சிறப்பான கட்டிடம் ஏதும் தேவை இல்;லை. அதிக எண்ணிக்கையில் வளர்;க்கும் பொழுது நிழலுக்கு ஒதுங்க, ஓய்வெடுக்க செலவு குறைவான ஒரு கீற்றுக் கொட்டகை தோட்டத்திலோ அல்லது புறக்கடையிலோ அமைக்கலாம். குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் எப்பொழுதும் கிடைக்கும் படி செய்ய வேண்டும். சில சமயங்களில் வான்கோழிகள் தண்ணீர் குடிப்பதில் ஈடுபாடு காண்பிக்காது. அச்சமயத்தில் தண்ணீர் பாத்திரங்களில் பல நிறங்களில் கூழாங்கற்களைப் போட்டால் வான்கோழிகள் கூழாங்கற்களை ஆவலாக கொத்தும் பொழுது தண்ணீரையும் குடிக்கும்.

இனப்பெருக்கம்:
ஓர் ஆண் வான்கோழிக்கு 5 முதல் 6 பெண் வான்கோழிகள் வரை வைத்திருக்கலாம். ஆண் வான்கோழிகளின் கால் நகங்களை வெட்டி விட வேண்டும். இல்லையென்றால் இனவிருத்திக் காலத்தில் பெண் வான்கோழிகளின் முதுகுத் தோலைக் கிழித்து விடும். ஆண் வான்கோழிகளின் உடல் எடை அதிகமாக இருப்பதால் இயற்கையாகப் பெட்டைகளுடன் இணைந்து இனவிருத்தி செய்வது சிரமம். எனவே, பொதுவாக வான்கோழிகளில் அதிக அளவில் கருமுட்டை பெற செயற்கை முறைக் கருவூட்டல் செய்வது மிகச் சிறந்தது.

பெண் வான்கோழி 28லிருந்து 30 வார வயதில் முட்டையிடத் துவங்கும். வருடத்தில் 90-100 முட்டைகள் வரை இடும். முட்டைகளை பெண் வான்கோழிகளை வைத்தே அடைகாக்கலாம். ஆனால் அடைகாக்க உபயோகப்படுத்தும் பெண் வான்கோழிகள் அதிக முட்டைகள் இடாது. சில பெண் வான்கோழிகள் அடைகாப்பதில் ஈடுபாடு காண்பிப்பதில்லை. அதனால் பெண் வான் கோழிகளுக்குப் பதிலாக அடைகாக்கும் பருவத்திலிருக்கும் நாட்டுக் கோழிகளை வைத்து வான்கோழி முட்டைகளை அடைகாக்கலாம். அல்லது இன்குபேட்டர் எனப்படும் மின்சாரக் குஞ்சு பொரிக்கும் கருவி கொண்டும் குஞ்;சு பொரிக்கலாம். 100 வான்கோழி முட்டைகளை அடைகாப்பதற்கென்றே சிறிய மின்சாரக் குஞ்சு பொரிக்கும் கருவிகள் கிடைக்கின்றன. அதில் நாம் 100 முட்டைகள் வரை எத்தனை முட்டைகளை வேண்டுமானாலும் அடைகாக்க பயன்படுத்தலாம். அடைகாப்பதற்கு முட்டைகளை கோழியின் 30 வார வயதிற்குப் பிறகே தேர்வு செய்ய வேண்டும். குஞ்சு பொரிக்கப்பயன்படுத்தப் படும் முட்டைகளின் எடை 60-72 கிராமாக இருக்க வேண்டும். வெயில் காலத்தில் முட்டைகளை 4 நாட்களுக்கும், குளிர் காலததில் 7 நாட்களுக்கும் சேமித்து வைத்து அடைக்குப் பயன்படுத்தலாம். அதனால் குஞ்சு பொரிக்கும் விகிதம் அதிகமாக இருக்கும்.

குஞ்சுகள் பராமரிப்பு:
இயற்கை முறையில் அல்லது செயற்கை முறையில் மின்சாரக் குஞ்சு பொரிக்கும் கருவியில் முட்டைகளை அடை வைத்த 28-29 நாட்களில் குஞ்சுகள் பொரித்து விடும். இயற்கை முறையில் குஞ்சுகள் பொரிக்கும் பொழுது குஞ்சுகள் 2 வாரம் வரை தாய்க் கோழியின் உடல் வெப்பத்தைப் பெற்று வளரும். தாய்க்கோழி இல்லாமல் செயற்கை முறையிலும் வெப்பம் அளித்தும் வளர்க்கலாம். இதற்கு புரூடர் அட்டைகளைக் கொண்டு வட்ட வடிவில் புரூடர் அமைக்க வேண்டும். 1.5 மீட்டர் விட்டம் கொண்ட புரூடர் வட்டத்தில் 100 குஞ்சுகள் வளர்க்கலாம். வட்டத்திற்குள் உமியைப் பரப்பி அதன் மேல் பேப்பரை விரித்து குஞ்சுகளை விட வேண்டும். ஒரு வான்கோழிக் குஞ்சுக்கு ஒரு வாட் என்ற அளவில் செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும். ஊதாரணமாக 100 வான் கோழிக் குஞ்சுகள் இருந்தால் 100 வாட்ஸ் பல்பை தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் கட்டித் தொங்க விட்டு வான்கோழிக் குஞ்சுகளுக்கு கதகதப்பு கொடுக்க வேண்டும். குஞ்சுகளுக்கு சுத்தமான குடிநீர் எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளுக்கு அதிக புரதச் சத்து தேவைப்படும் என்பதால் வேக வைத்த முட்டையின் வெள்ளைக் கருவைக் கொடுக்க வேண்டும்.

பொதுவாக கிராமங்களில் கிடைக்கக் கூடிய பொடுதலைக் கீரையை முட்டையுடன் சேர்த்து பொரித்துக் கொடுக்கலாம். அல்லது பொட்டுக்கடலையை மாவாக்கியும் பொடுதலைக் கீரையுடன் கலந்து கொடுக்கலாம். இந்தத் தீவனத்தை 5 முதல் 7 நாட்களுக்குக் கொடுக்கலாம். இது குறைந்த எண்ணிக்கையில் வான்கோழிக்குஞ்சுகள் இருந்தால் சாத்தியமாகும். 10 குஞ்சுகளுக்கு மேல் இருந்தால் முட்டைகளைப் பொறித்துக் கொடுப்பது சாத்தியமாகாது. அதனால் அதிக எண்ணிக்கையில் வான் கோழிக் குஞ்சுகள் இருக்கும்; பொழுது வான்கோழிக் குஞ்சுகளுக்கு நாமே அதிகப் புரதச் சத்து மிக்க தீவனத்தை தயாரித்து கொடுத்தால் நல்;ல வளர்ச்சி அடையும். இறப்புகளும் அதிகமிருக்காது. புரூடரில் பேப்பரை தினமும் மாற்ற வேண்டும். வெயில் காலமாக இருந்தால் 7 நாட்கள் வரையும் குளிர் மற்றும் மழை காலமாக இருந்தால் 10 நாட்கள் வரையும் வான்கோழிக் குஞ்சுகள் புரூடர் வட்டத்தில் இருக்க வேண்டும்.

வான்கோழித் தீவனம்:
வான்கோழிக்கெனத் தனியாகத் தீவனம் கடைகளில் கிடைப்பதிலலை;. வான்கோழிக்குஞ்சுகளுக்கு அதிக புரதச் சத்துக் கொண்ட தீவனம் தேவைப்படும். கடைகளில் கிடைக்கும் இறைச்சிக் கோழித் தீவனத்தைக் கொண்டு நாமே அதிக புரதச் சத்து கொண்ட தீவனமாக மாற்ற முடியும். குஞ்சுகளுக்கு 10 கிலோ கோழி ஆரம்பத் தீவனத்துடன் 1 கிலோ எள்ளுப் பிண்ணாக்கும் ஒரு கிலோ உப்பு இல்லாத மீன் தூளையும் சேர்த்து கலந்து கொடுக்கலாம். இரண்டு வாரம் கழித்து குஞ்சுகள் வெளியே மேய ஆரம்பிக்கும். தீவனம் போதுமான அளவு தோட்டத்தில் புற்ககடையில் கிடைத்தால் தீவனம் போட வேண்டிய அவசியமில்லை. மேய்ச்சல் குறைவாக உள்ள காலத்தில் கோழித் தீவனம் 2 பங்கும் கோதுமைத் தவிடு 3 பங்கும், அரிசித் தவிடு 3 பங்கும் கலந்து தரலாம்.

விற்பனை வயது:
வான்கோழிகள் 16 முதல் 20 வாரத்தில் இறைச்சி விற்பனைக்குத் தயாராகி விடும். 20 வாரத்தில் நாட்டினப் பெண் வான்கோழி 3 ½ முதல் 3 கிலோவும், நாட்டின ஆண் வான்கோழி 4 ½ முதல் 5 ½ கிலோவும், உயரினப் பெண்வான்கோழி 6 முதல் 8 கிலோவும், உயரின ஆண் வான்கோழி 12 கிலோவும் உடல் எடை இருக்கும். விற்பனை வாய்ப்பைப் பொறுத்து வான்கோழிகளை 16 வார வயதில் எடைக்கு ஏற்றாற் போல் விற்பனை செய்து கொள்ளலாம்.

நோய்களும் தடுப்பு முறைகளும்:
வான்கோழிகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் நோய்த் தாக்குதல் குறைவு. பொதுவாக வான்கோழிகளை வெள்ளைக் கழிச்சல், கோழி அம்மை, கோழிக் காலரா, நீலக் கொண்டை, கருஞ்சிரம், இரத்தக் கழிச்சல் போன்ற நோய்கள் தாக்கக் கூடும். குடற்புழு தாக்குதல்களும் இருக்கும். கோழிக்காலரா, கோழி அம்மை, வெள்ளைக் கழிச்சல் நோய்கள் இருப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலம். குடற்புழு தாக்குதலுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தை கால் நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும். பொதுவான சுகாதாரமான மேலாண்மை முறைகள் மூலம் வான்கோழிகளை நோயிலிருந்து தடுக்கலாம்.

வான்கோழி வளர்ப்பின் எதிர்காலம்:
வருங்காலாத்தில் வான்கோழி இறைச்சி, விழாக் காலஙகளில் மட்டும் உண்ணும் உணவாக இல்லாமல் எல்லாக் காலமும், அனைத்துத் தரப்பு மக்களாலும் உண்ணக்கூடிய உணவாக மாறும் வாய்ப்புள்ளது. அப்போது தேவைக்கேற்ப இன்னும் அதிக அளவில் உற்பத்தி செய்ய்ப்பட வேண்டும். ஆகவே வான்கோழிப் பண்ணைத் தொழிலுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். இத் தருணத்தில் வான்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு ஒரு நல்ல இலாபகரமான மாற்றுத் தொழிலாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்