வாத்துகளை தாக்கும் பிளேக் நோயும், தடுக்கும் முறைகளும்

கோழிகளுக்கு அடுத்த அளவில் அதிகமாக வளர்க்கப்படும் பறவையினம் வாத்துக்களாகும். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளம், ஏரிகள், நீரோடைகள் மற்றும் கால்வாய்கள் மிகுந்துள்ள பகுதிகளிலும் நெல் சாகுபடி அதிகமுள்ள பகுதிகளிலும் வாத்துக்கள் பெருமளவில் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. நமது நாட்டில் மொத்த கோழிகள் உற்பத்தியில் வாத்துக்களின் பங்கு 8.5 சதவிகிதமாகும். நம் நாட்டில் வளர்க்கப்படும் வாத்துக்களில் 95 சதவிகிதம் நாட்டின வாத்துக்களாகும். அவை இயற்கையிலேயே நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதால் கோழிகளை தாக்கக்கூடிய பல நோய்கள் வாத்துக்களை தாக்குவதில்லை.

எனினும் வாத்துக்களை அதிகமாக தாக்கி அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான ஒரு நோய் வாத்து பிளேக் நோயாகும். சில சமயங்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட வாத்துக்களில் இறப்பு விகிதம் 100 சதவிகிதமாக இருப்பதால் வாத்துக்களை வளர்ப்பவர்களுக்கு பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே வாத்துக்களை வளர்ப்போர் வாத்து பிளேக் நோயைப் பற்றியும் தடுக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து சிறந்த பராமரிப்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்நோய் பாதிப்பிலிருந்து வாத்துக்களைக் காப்பாற்றி பொருளாhதார இழப்பைத் தவிர்க்க முடியும்.

வாத்துப் பிளேக் நோயக்கான காரணம் மற்றும் பரவும் முறை:
வாத்துப் பிளேக் நோயானது, வாத்து ஹெர்பஸ் வைரஸ் – 1 எனப்படும் நச்சுயிரி கிருமிகளால் ஏற்படக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்த நோயானது பாதிக்கப்பட்ட வாத்துக்களிலிருந்து தண்ணீர் மூலமாகவும், தொடுதல் மூலமாகவும் பிற வாத்துகளுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது. ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு சென்று குளம், குட்டைகள் மற்றும் வயல்களில் வளர்க்கப்படும் வாத்துக்கள் மூலம் தான் அதிக அளவில் இந்ந நோய் பரப்பப்படுகிறது.

நல்ல ஆரோக்கியமான வாத்துகளில் நோய்த்தொற்று ஏற்பட்ட 3 முதல் 7 நாட்களுக்குள் நோய்க்கான அறிகுறிகளை காட்டுகின்றன வாத்துக்குஞ்சுகள் முதல், முட்டையிடும் வாத்துகள் வரை எல்லாப் பருவத்திலும் உள்ள வாத்துகளை இந்நோய் பாதிக்கும். இது வேகமாப் பரவும் தன்மையுடைய ஒரு கொடிய தொற்று நோயாகும். நோயுற்ற வாத்துக்கள் ஒன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இறந்து விடும். இறப்பு விகிதம் ஆரம்பத்தில் மிக அதிகமாகவும் தொடர்ந்தும் காணப்படும்.

அறிகுறிகள்:
நோய்க்கிளர்ச்சியின் பொழுது, சில வாத்துக்கள் நோய்க்கான அறிகுறியை வெளிப்படுத்தாமல் இறக்க நேரிடும். சரியாகத் தீவனம் உட்கொள்ளாது. தண்ணீர்; அதிகமாக உட்கொள்ளாது. நோயினால் பாதிக்கப்பட்ட வாத்துக்கள் அமைதியின்றிக் காணப்படும். இறகுகள் சிலுப்பிக் கொண்டிருக்கும். நடப்பதற்கும், நீந்துவதற்கும் விருப்பம் கொள்ளாமலிருக்கும். அலகு நீலம் தோய்த்துக் காணப்படும். மூக்குத் துவாரத்திலிருந்து நீர் வடியும். மூக்குத் துவாரங்கள் அழுக்கடைந்து காணப்படும். வாத்துக்கள் சிரமப்பட்டுச் சுவாசிக்கும். வெளிச்சத்தை வெறுக்கும் தன்மை காணப்படும்;. ஆசனவாய், ஈரமாகி அழுக்குடன் காணப்படும். ஆண் வாத்துக்களில் ஆணுறுப்பு வீங்கியும், வெளியில் தொங்கிக் கொண்டுமிருக்கும்.

நோயுற்ற வாத்துக்களில் பச்சையும், மஞ்சளும் கலந்த கழிச்சல் காணப்படும். சில சமயங்களில் இரத்தக் கழிச்சலும் காணப்படும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் வாத்துக்களில் கண்களிலிருந்து சாறு வடியும். முட்டையிடும் வாத்துக்களில் முட்டை உற்பத்தி 40 சதவிகிதம் வரை குறைந்து விடும். பிளேக் நோயினால் இறந்த வாத்துக்களைப் பரிசோதித்தால் குடல் பாகத்தில் இரத்தம் நிறைய காணப்படும். இது தவிர உடலின் பல உறுப்புகளிலும், திசுக்களிலும் இரத்தம் தோய்ந்து காணப்படும்.

சிகிச்சை முறைகள்:
வாத்து பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட வாத்துக்களைக் குணப்படுத்துவதற்கென்று எந்த மருந்துகளும் இல்லை. ஆனாலும் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீரிலோ அல்லது தீவனத்திலோ கலந்து காலை மாலை என இரு வேளையாக ஐந்து நாட்களுக்குக் கொடுப்பதன் மூலம் வேறு நுண்ணுயிரிகளினால் ஏற்படும் தீவிரத்தையும் இறப்பையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

நோய்த்தடுப்பு முறைகள்:
இந்நோய், பெரும் பொருளாதார இழப்பை விளைவிக்கும் ஒரு கொடிய தொற்று நோய் என்பதால் முறையாகத் தடுப்பூசி போட்டு வரு முன் தடுப்பதே மிகவும் சிறந்ததாகும். இனப்பெருக்கத்திற்காக உபயோகப்படுத்தப்படும் வளர்ந்த வர்த்துகளுக்கு, வாத்துப் பிளேக் தடுப்பூசியை உரிய காலத்தில் முறைப்படி போட்டால் அவற்றின் முட்டையிலிருந்து பொரிக்கும் வாத்துக் குஞ்சுகளுக்கு முதல் 2 மாதம் வரை இந்நோய் பாதிக்காது. வாத்துக்கள் ஒரு முறை வாத்துப் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட பிறகு இந்த நோயினால் மீண்டும் பாதிப்புக்குள்ளாவதில்லை.

எனினும், நோயுள்ள காலத்தில் வாத்துக்களுக்கு வாத்துப் பிளேக் தடுப்பூசி போட்டு ஓரளவு இறப்பையும், முட்டை உற்பத்திக் குறைப்பையும் கட்டுப்படுத்தலாம். வாத்துக்களுக்கு 3 முறை தடுப்பூசிகள் அளித்திட வேண்டும். முதல் தடுப்பூசி 2வது வாரத்திலும், 2வது தடுப்பூசி 10வது வாரத்திலும், மூன்றாவது தடுப்பூசி 24வது வாரத்திலும்; போடுதல் வேண்டும். அதன் பின் வாத்துக்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும்.

புதிய வாத்துக்களைப் பண்ணையில் சேர்க்கும் பொழுது, தனியிடத்தில் ஒரு வாரத்திற்கு வைத்திருந்து விட்டு வாத்துக்கள் நோயற்றவை எனத் தெரிந்து கொண்ட பின்னரே, பண்ணையில் மற்ற வாத்துக்களுடன் கலக்க வேண்டும். வாத்துக்களுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் உணவுப் பாத்திரங்களைக் கழுவி சுத்தமாக பயன்படுத்த வேண்டும். பொரிக்காத முட்டைகளை வாத்துக் குஞ்சுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கக்கூடாது. பாதிப்படைந்து பின்னர் குணமடைந்த வாத்துக்களையோ அல்லது வாத்துக் குஞ்சுகளையோ உடனே பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். அல்லது தனியாகப் பராமரிக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்