புறக்கடை கோழி வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் சிறிய அளவில் 10 முதல் 12 நாட்டினக் கோழிகளை எந்தவொரு பெரிய முதலீடும் இல்லாமல் வீட்டிற்குத் தேவையான இறைச்சி மற்றும் முட்டைக்காகவும், மக்களின் திடீர் செலவுகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் வீட்டின் வெளிப்புறத்தில் பண்டைய காலத்திலிருந்து வளர்க்கப்பட்டு வரும் முறையாகும். இந்திய நாட்டுக் கோழியினங்களான அசீல், சிட்டகாங், கடக்நாத் மற்றும் பஸ்ரா, தமிழ்நாட்டுக் கோழியினங்களான குருவுக்கோழி, கிராப்கோழி, சண்டைக்கோழி, கருங்கால்கோழி மற்றும் கழுகுக்கோழி ஆகியன புறக்கடை வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நாட்டின கோழி இனங்களாகும்.
அதிக இலாபம், மிகக்குறைந்த முதலீடு, குறைவான இடத்தேவை, நல்ல விற்பனை மதிப்பு, சுற்றுச்சூழலுக்கு இசைந்து போகும் தன்மை, அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் சுவையான இறைச்சி போன்றவை நாட்டுக்கோழி வளர்ப்பின் சிறப்பம்சங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் குஞ்சுகளில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இறப்பு, புறக்கடை வளர்ப்பில் ஊட்டச்சத்து குறைபாடு, குறைவான முட்டை உற்பத்தி , மெதுவான வளர்ச்சி, குறைந்த வெள்ளைக்கழிச்சல் நோயைத் தாங்கும் தன்மை போன்றவை நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள இடர்பாடுகளாகும். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஐதராபாத்திலுள்ள கோழியின ஆராய்ச்சித் திட்ட இயக்குநரகம் நாட்டினக்கோழி இனங்களை ஒத்த அதே சமயம் உற்பத்தியில் தரம் உயர்த்தப்பட்ட வனராஜா மற்றும் கிராமப்பிரியா கோழியினங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வனராஜா:
வனராஜா கோழியினமானது சிவப்பு கார்னிஸ் இனத்தை ஆண் வழியாகவும், வண்ண பிராய்லர் இனத்தை பெண் வழியாகவும் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். கவர்ச்சியான பல வண்ண இறகுகளையும், நல்ல உயிர்வாழும் திறன், அதிக நோய் எதிர்ப்புத் திறனும் கொண்ட வனராஜா கோழிகளில் உடல் வளர்ச்சி துரிதமாக உள்ளதால் இறைச்சிக்காகவும், முட்டை உற்பத்தித் திறன் அதிகமாக உள்ளதால் முட்டை உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவ்வினக்கோழிகள் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான நோக்கில் வளர்க்க ஏற்றவை.
கிராமப்பிரியா :
கிராமப்பிரியா கோழியினமானது வண்ண பிராய்லர் இனத்தை ஆண் வழியாகவும், வெள்ளை லெக்கார்ன் இனத்தை பெண் வழியாகவும் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். பல வண்ண இறகுகளையும் அதிக நோய் எதிர்ப்புத் திறனும், தற்காப்புத் திறனும் கொண்ட கிராமப்பிரியா கோழிகள் அதிக முட்டை உற்பத்தித் திறன் கொண்டவை ஆகும். திறந்த வெளி வளர்ப்பிற்கு ஏற்றது. பழுப்பு நிற முட்டைகள், சிறந்த உயிர்வாழும் திறன், நடுத்தர உடல் எடை, நீளமான கீழ்க்கால் உடையதால் கழுகு, காகம் போன்ற கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பிக்கும் திறன் ஆகிய பண்புகளைக் கொண்டது. இவை ஆண்டிற்கு 200 முதல் 230 முட்டைகள் வரை இடும் திறன் கொண்டதோடு பழுப்பு நிற முட்டை ஓட்டையும் கொண்டுள்ளன. இவ்வினக்கோழிகள் முட்டை உற்பத்திக்கான நோக்கில் வளர்க்க ஏற்றவை. இளஞ்சேவல்கள் தந்தூரி தயாரிப்பிற்கு மிகவும் பொருத்தமானது.
வனராஜா, கிராமப்பிரியா மற்றும் நாட்டினக் கோழியினங்களின் உற்பத்தித் திறன் ஒப்பீடு :
பண்புகள் | வனராஜா | கிராமப்பிரியா | நாட்டினக்கோழி |
உடல் எடை ( கிலோ) | 4.0 | 2.5 – 3.0 | 2.0 |
முட்டை எடை (கிராம்) | 52-58 | 57-58 | 45-50 |
முதல் முட்டை இடும் வயது (நாட்கள்) | 175-180 | 160-165 | 185-190 |
ஆண்டு முட்டை உற்பத்தி திறன் | 100-110 | 200-230 | 60-80 |
முட்டை ஓட்டின் நிறம் | பழுப்பு | பழுப்பு | பழுப்பு |
உயிர் வாழும் திறன் (சதவீதம்) | 98 | 99 | 70-75 |
கொட்டகை அமைப்பு:
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தரமான, தனியான வீடு அமைக்க வேண்டிய அவசியமில்லை. இரவு நேரங்களில் தங்குவதற்கு மக்கள் வசிக்கும் வீடுகளை ஒட்டியே மரத்தாலான பெட்டி அல்லது சிறிய மண்வீடு அல்லது அகலமான பலகைக் கற்களைக் கொண்ட 2 அடி உயரம், 4 அடி நீளம் மற்றும் 3அடி அகலம் என்ற அளவில் அமைத்து அதில் ஆழ்கூளத்தைப் பரப்பியோ அல்லது மண்தரையிலோ அடைத்து வைக்கலாம். புhம்பு, கீரி, பூனை போன்ற விலங்கினங்கள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
இளங்குஞ்சுகள் பராமரிப்பு:
முதல் நாள் முதல் 2 வார வயது வரை இளங்குஞ்சுப் பருவம் என்று கூறுகிறோம். குஞ்சுகளை செயற்கை வெப்பம் கொடுத்து வளர்க்கப் புரூடர் தகடுகள் அட்டைகள் அல்லது பந்திப்பாய்களை வட்ட வடிவில் அமைத்து அதனுள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி அல்லது கடலைத் தோல் அல்லது மரத்தூள் பரப்பி கூளத்தின் மேல் பழைய செய்தித் தாள்களை பரப்பி விட வேண்டும். பிறகு 60 வாட் மின் விளக்குகளை தேவையான உயரத்தில் தொங்க விட்டு குளிர்காலங்களில் 10 நாட்களுக்கும் கோடை காலங்களில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் கொடுத்து குஞ்சுகளை பராமரிக்க வேண்டும். தினமும் செய்தித்தாள்களை மாற்றி விட வேண்டும். மேலும் இப்பருவத்தில் குஞ்சுகளுக்குத் தேவையான தடுப்பூசி, தரமான தீனி மற்றும் போதுமான அளவு தண்ணீர் கொடுத்தல் வேண்டும். குஞ்சுகளுக்கு முதல் 5 நாட்களுக்குத் தண்ணீருடன் எதிருயிரி மருந்தும், பி காம்பள்க்ஸ் மருந்தும் கொடுக்க வேண்டும்.
வளர்பருவம் முதல் முட்டையிடும் பருவம் வரை:
3 வாரங்கள் முதல் 22 வாரங்கள் வரை உள்ள வளர்குஞ்சுகளை பகலில் வெளியில் தானாக மேயவிட வேண்டும். வியாபார ரீதியாக வளர்க்கும் கோழிகளை ஒப்பிடும் பொழுது புறக்கடைக் கோழி வளர்ப்பதற்கு எந்தத் தீனியும் தேவையில்லை. பொதுவாக இக்கோழிகள் வீட்டைச் சுற்றியும் புறக்கடையிலும் மேய்ந்து தனக்கான உணவைத் தானே தேடிக்கொள்கின்றன. புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு புரதச்சத்து மிகக்குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி கோழிகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். போதுமான தீவனம் கிடைக்கவில்லை எனில் கோழித் தீவனம் கலந்து தர வேண்டும். சுத்தமான தண்ணீர் எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். மேலும் இப்பருவத்தில் முட்டையிடும் இடத்தைத் தயார்ப்படுத்தி வைத்தல் வேண்டும்.
கோழித் தீவனம் தயார் செய்தல்:
10 கிலோ தீவனம் தயாரிப்பதற்கு அரிசி, குருணை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள் 5 கிலோ, அரிசித்தவிடு 1.6 கிலோ, கடலைப்பிண்ணாக்கு, எள்ளுப்பிண்ணாக்கு, சூரியகாந்தி பிண்ணாக்கு ஆகியவை 3 கிலோ, தாது உப்புக் கலவை 200 கிராம் மற்றும் கிளிஞ்சல்கள் 200 கிராம் என்ற அளவில் கலந்து கோழிகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
இனப்பெருக்க முறைகள்:
புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்கும் பொழுது 10 கோழிகளுக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் பராமரிக்க வேண்டும். முட்டையிடும் கோழிகளுக்கு முட்டையிடும் பெட்டிகளை வைத்தல் வேண்டும். முட்டையிடும் இடமானது அமைதியாக எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் இருத்தல் வேண்டும். முட்டைகளைச் சேகரித்த பின் மண்பாண்டங்கள் அல்லது திடமான பாத்திரத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வனராஜா மற்றும் கிராமப்பிரியா கோழிகள் முட்டைகளை அடைகாக்கும் திறன் அற்றவை. அதனால் முட்டைகளை நாட்டுக்கோழிகளைக் கொண்டு அல்லது சிறிய அடைக்கும் இயந்திரம் கொண்டு அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்யலாம்.
நோய்களும் தடுக்கும் முறைகளும்:
புறக்கடை முறையில் வளர்க்கும் கோழிகள் வெள்ளைக் கழிச்சல், கோழி அம்மை போன்ற நச்சுயிரி நோய்களாலும், ஈகோலை, சால்மோனெல்லா, கோழிக்காலரா போன்ற நுண்ணுயரி நோய்களாலும், இரத்தக் கழிச்சல், மற்றும் உருண்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் போன்ற அக ஒட்டுண்ணிகளாலும், பேன், உண்ணி, தெள்ளுப்பூச்சி மற்றும் கொசு போன்ற புற ஒட்டுண்ணிகளாலும் நோய்ப் பாதிப்பிற்குள்ளாகி இறக்க நேரிடுகின்றன. கோழிகளுக்கான தடுப்பூசிகளை தகுந்த வயதில் கொடுப்பதன் மூலம் கோழிகளுக்கு நோய் வராமல் தடுக்க முடியும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழுக்களுக்கான மருந்து மற்றும் பேன், தெள்ளுப்பூச்சிகளுக்கான மருந்தைக் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி கோழிகளுக்கு கொடுக்க வேண்டும்.
தடுப்பூசி அட்டவணை:
வயது | தடுப்பூசியின் பெயர் | அளிக்கும் முறை |
7வது நாள் | வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி – எப்.1 வகை (லசோட்டா) | மூக்கு அல்லது கண்ணில் சொட்டு மருந்தாக |
28வது நாள் | வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி – எப்.1 வகை (லசோட்டா) | குடி தண்ணீரில் |
6வது வாரம் | கோழி அம்மைத் தடுப்பூசி | இறக்கை அடியில் |
8வது வாரம் | வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆர்.டி.வி.கேஃ ஆர்2 பி வகை |
இறக்கைத் தோலுக்கடியில் ஊசி மூலம் |
பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை | வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆர்.டி.வி.கேஃ ஆர்2 பி வகை |
இறக்கைத்தோலுக்கடியில் ஊசி மூலம் |
விற்பனை:
புறக்கடையில் வளர்க்கப்படும் வனராஜா மற்றும் கிராப்பிரியா கோழிகளின் மூலம் கிடைக்கும் முட்டைகளையும் கோழிகளையும் நமது தேவைக்கேற்ப விற்றுப் பணம் சம்பாதிக்கலாம். எனவே தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்களான வனராஜா மற்றும் கிராமப்பிரியா இனங்கiளை புறக்கடை வளர்பு முறையிலும், அதிக எண்ணிக்கையில் தீவிர மற்றும் மிதத் தீவிர பண்ணை முறையிலும் வளர்ப்பதன் மூலம் அதிக இலாபம் பெறலாம்.