முயல்கள் என்றதும் அனைவரின் மனதையும் மகிழ்ச்சி உண்டாக்கக்கூடிய அழகான துள்ளிக் குதித்து ஓடக்கூடிய சிறிய பிராணி உடனே நினைவுக்கு வந்து முகத்தில் சந்தோசத்தை ஏற்படுத்தும். முயல்களைக் கண்டதும் அதைத்தாவிப் பிடித்து தூக்கவும் விளையாடவும் மனம் விளையும். முயல்களை தூக்க வேண்டும் என்றால் காதுகளைப் பிடித்துத் தூக்க வேண்டும் என்பது பொதுவாக மக்களிடையே நிலவி வரும் கருத்து. ஆனால் அதுமுறையன்று. முயல்களை ஒருபோதும் காதுகளை மட்டும் பிடித்துத் தூக்கக் கூடாது. அப்படிக் காதுகளை மட்டும் பிடித்துத் தூக்கினால் காதின் அடிப்பாகத்தில் உள்ள தசைப்பகுதி அறுபட்டு சேதமடைந்து காதுகள் தொங்கிப்போக நேரிடும். அதனால் தான் முயல் பண்ணைகளில் நிறைய முயல்களில் ஒருகாதோஅல்லது இரு காதுகளோ தொங்கிப் போயிருப்பதைக் காணலாம்.
காதுகளின் அடிப்பக்கதசைப்பகுதி சேதமடைந்து தொங்கிப் போயிருக்கும் முயல்களின் காதுகளில் வலி அதிகமாக இருக்கும். அதனால் முயல்கள் சரிவர தீவனம் உட்கொள்ளாமல் உடல்நலம் கெட்டு உடல் மெலிந்து சில சமயம் முயல்கள் இறக்க நேரிடும். முயல்களைக் கையாளும் முறைகள் அவற்றின் வயது மற்றும் எடையால் வேறுபடுகிறது. அதனால் முயல்களை வளர்ப்போர் அல்லது முயல்களைக் கையாள நினைப்பவர்கள் முயல்களின் வெவ்வேறு நிலைகளுக்குத் தக்கவாறு முயல்களை முறையாகக் கையாண்டால் முயல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.
பெரிய முயல்களைக் கையாளுதல்:
பெரிய பருவமடைந்த முயல்களை இரு காதுகளின் அடிப்பாகத்தைப் பிடித்து தடவிக் கொடுத்து தோள்பட்டையின் தோலையும் ஒருகையால் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அடுத்தகையினால் இடுப்பு பகுதியினை பிடித்து தூக்க வேண்டும். இவ்வாறு தூக்குவதால் முயல்களின் காதுகள் சேதமடைவதைத் தடுக்க முடியும். முயல்களைப் பிடித்து தூக்கும் பொழுது அதனுடைய நகத்தினால் கையாள்பரைக் கீறிவிடும் வாய்ப்பு உள்ளது. முயல்கள் கையாள்பரைக் கீறுவது தன்னுடைய தற்காப்புக்காகவேயாகும். இளம் குட்டிகளாக இருக்கும் சமயத்திலிருந்தே முயல்களை நாம் தூக்கிப் பழகினோமானால் பயம் தெளிந்து நாம் கையாளும் பொழுது கீற முற்படாது. முயல்களைத் தூக்கும் பொழுது தடவிக் கொடுத்துபேசி, தைரியமாகவும், இலாவகமாகவும் பிடிக்கும் முறையைநாம் பழகிக் கொள்ள வேண்டும்.
சினை முயல்களைக் கையாளுதல்:
சினை முயல்களைத் தூக்கும் பொழுது மிகவும் கவனமாக கையாளவேண்டும். வயிற்றுப் பகுதியினை மிகவும் அழுத்தாமலும் காதுகளையும், தோள்பட்டை தோலினையும் மட்டும் பிடித்து தூக்காமல் முதுகு மற்றும் தொடைப் பகுதியில் கையை வைத்து தூக்க வேண்டும். சினை முயலை சோதனை செய்வதற்கு மட்டுமே பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் சினை முயல்களைத் தூக்கிப் பிடித்து துன்புறுத்தக்கூடாது.
குட்டிபோட்ட முயல்களைக் கையாளுதல்:
குட்டிபோட்டிருக்கும் முயல்களைப் பிடித்துத் தூக்கும் பொழுதுமிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூண்டிற்குள் திடீரென்று கையைவிட்டால் முயல் தன் குட்டிகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து நம்மை தாக்க முற்படும். ஆகவே குட்டி போட்ட முயல்களை பண்ணையைப் பராமரிப்பவர் அல்லது தீவனம் வைப்பவர் மட்டுமே கையாள வேண்டும். குட்டிபோட்ட முயல்களைக் கையாளும் பொழுது அதன் குட்டிகளுக்கு எந்தவித அபாயமில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்த மெதுவாக தாய் முயல்களிடம் பேசிக் கொண்டு தீவனம் வைத்தபின் மெதுவாகதாய் முயலைத் தடவிக் கொடுத்து சாந்தப்படுத்திய பிறகு குட்டி போட்ட முயல்களைப் பிடிக்கலாம்.
இளம் குட்டிகளைக் கையாளுதல்:
குட்டிகளைத் தொடுமுன் தாய் முயலைத் தடவிக் கொடுத்துவிட்டு பிறகுதான் குட்டிகளைப் பிடிக்க வேண்டும். இளம் குட்டிகள் கண் திறக்காமல் இருக்கும் சமயத்தில் அதனுடைய பக்கவாட்டில் வயிற்றுப் பகுதியில் கை விரல்களைக் கொடுத்து கீழே விழுந்துவிடாதபடி எடுத்து கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கையிலிருந்து நழுவி விடாமல் இருக்க நம்முடன் நெஞ்சுடன் அணைத்துவைத்துக் கொள்வது நல்லது. இதேபோல் பத்துநாள் வயதிற்குப் பிறகு கண்களை திறந்த குட்டிகளையும், 6 வார வயது வரை உள்ள முயல்களையும் கையாளலாம். எட்டு வார வயதுக்குட்பட்ட இளம் முயல்களை விலாப்புறத்தில் கை வைத்து தூக்கலாம்.
முயல்களைக் கையாளும் பொழுதுகவனத்தில் கொள்ள வேண்டியவை:
முயல்களைத் தூக்குவதற்கு அணுகும் பொழுதுமிக அமைதியாக அணுக வேண்டும். முயல்கள் மிகவும் அமைதியான பிராணிகள் என்பதால் அவற்றை மிகக் கவனமாகவும், மென்மையாகவும் கையாள வேண்டும். முயல்களைக் கையாள்பவர் தினமும் தன் கையினால் தீவனம் கொடுப்பவராகவும், பண்ணை பராமரிப்பு செய்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் பழகிய நபராக இருந்தால் முயல்களைக் கையாளும் பொழுது எவ்விதபயமும் இல்லாமல் முயல்கள் சாதுவாக இருக்கும். பண்ணையில் வளர்க்கப்படும் முயல்களை நாம் தினமும் கையாளுவததால் கூடிய விரைவில் முயல்கள் சாதுவாகவும், தாக்கக் கூடியதன்மை இல்லாமலும் இருக்கும். புதிய நபர்கள் முயல்களை கையாள நேர்ந்தால் முயல்கள் பயந்து தாக்க நேரிடும். எனவே புதிய நபர்கள் முயல்களை கையாளும் பொழுது மிகவும் கவனமாக பேசி தடவிக் கொடுத்து பிறகு கையாள வேண்டும். முயல்களைத் தேவைப்படாமல் கையாளுவதோ அல்லது அந்நியர்கள் கையாளுவதோ தடுக்கப்ப டவேண்டும். பலர் முயல்களை அடிக்கடிகையாளுவது அவைகளுக்கு தொந்தரவு அளிப்பதுபோல் ஆகிவிடக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.