மாட்டுப் பாலில் கொழுப்புச் சத்து அதிகரிக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

நம் நாட்டில் கறவை மாடுகள் வளர்ப்பானது விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானம் அளிக்கக் கூடிய சுய தொழிலாக அமைந்திருக்கிறது. விவசாயம் பொய்க்கும் காலங்களில் பெரும்பாலான விவசாயக் குடும்பங்களை பொருளாதார ரீதியில் காப்பாற்றுவதில் கறவை மாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்பொழுது பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவைக் கொண்டு தான் பாலின் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது.

கறவை மாடுகள் வளர்ப்போர் பால் அதிகம் உற்பத்தி செய்தாலும் சில பராமரிப்புக் குறைபாடுகள் காரணமாக பாலின் கொழுப்புச் சத்து குறைந்து விடுவதால் பாலுக்;குப் போதிய விலை கிடைப்பதில்லை. தீவனச் செலவினங்களும் மற்ற பராமரிப்புச் செலவுகளும் உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழ்நிலையில் பாலுக்கு நல்ல விலை கிடைத்தால் மட்டுமே மாட்டுப் பண்ணையை இலாபகரமானதாக நடத்த முடியும்.

அதனால் கறவை மாடுகள் வளர்ப்போர் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாவதற்கான தகுந்த பராமரிப்பு முறைகளைத் தெரிந்து தமது பண்ணைகளில் நடைமுறைப்படுத்தினால் பாலில் கொழுப்புச் சத்தும் அதிகமாகி பாலுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.

பாலில் கொழுப்புச் சத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

1. இனம்: நாட்டு மாடுகளில் 4.7 முதல் 5.0 சதவிகிதம் வரையும், ஜெர்ஸி கலப்பினத்தில் 4.5 முதல் 5.2 சதவிகிதம் வரையும,; பிரீசியன் கலப்பின மாடுகளில் 3.6 சதவிகிதம் வரையும் கொழுப்புச் சத்து இருக்கும். அதனால் நாம் ஓர் இனத்தின் அதிக பட்ச கொழுப்புச் சத்திற்கு மேல் அதிகப் படுத்த முடியாது.

2. பால் கறவையின் அளவு: பால் அதிகம் கறக்கும் மாடுகளின் பாலில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். உதாரணமாக அதிக பால் கறக்கும் பிரீசியன் கலப்பின மாடுகளின் பாலில் மற்ற கலப்பின மற்றும் நாட்டு மாடுகளை விட கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும்.

3. பால் கறவை: மாடுகளில் 8 மாத கறவைக்குப் பின் சிறிது சிறிதாக பால் கறவையை நிறுத்தும் சமயத்தில் பாலில் கொழுப்புச் சத்தானது அதிகம் இருக்கும். ஏனெனில் இச்சமயத்தில் பாலின் அளவு குறைவதால் கொழுப்புச் சத்தானது கணிசமான அளவில் அதிகரிக்கும். மேலும் நாட்டு மாடுகள் குறைவாகவே பால் கறப்பதால் நாட்டு மாடுகளின் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும்.

4. மரபுப் பண்பு: சில மாடுகளின்; பாலில் குறைந்த அளவு கொழுப்புச் சத்து இருப்பது அதன் மரபுப் பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முடியாது.

பாலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்:

1. கன்று ஈனுவதற்கு முன் போதிய எரிசக்தி தீவனம் அளித்தல்:

பாலில் கொழுப்புச் சத்தின் அளவானது கன்று ஈனுவதற்கு முன் நாம் கறவை மாடுகளுக்கு அளிக்கும் எரிசக்தி தீவனத்தைப் பொறுத்து அமையும். ஏனெனில் கன்று ஈனுவதற்கு 2 – 3 வாரங்களில் நாம் அளிக்கும் எரிசக்தித் தீவனமானது உடலில் கொழுப்புச் சத்தாக மாறி இருக்கும். கன்று ஈன்றவுடன் இந்தக் கொழுப்புச் சத்துக் கொஞ்சம் கொஞ்சமாக பால் சுரப்புக்கு பயன்படுத்தப்பட்டு பாலில் கொழுப்புத் சத்து அதிகம் இருக்கும்.

உடலில் கொழுப்புச் சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும் பொழுது கன்றுகள் ஈன்ற பிறகு பாலில் கொழுப்புச் சத்து குறைந்து இருக்கும். அதனால் பாலில் கொழுப்புச் சத்து அதிகரிக்க கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன் பருத்திக் கொட்டை, சோயா, சூரிய காந்தி போன்ற எரிசக்தி மிக்க தீவனங்கள் போதிய அளவு மாடுகளின் தீவனத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. பால் கறவையில் உள்ள மாடுகளுக்கு போதிய எரிசக்தி தீவனம் அளித்தல் :

மாடுகள் பால் கறவையில் இருக்கும் பொழுது போதிய எரிசக்தி தீவனம் அளிக்காமல் இருந்தாலும் உடலில் கொழுப்புச் சத்து குறைவதால் பாலிலும் கொழுப்புச் சத்துக் குறையும். அதனால் கறவை மாடுகளின் உடலில் எரி சக்தி குறைந்து போகாமல் இருக்க கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிக்க தானியங்கள் போதிய அளவில் தீவனத்தில் கலந்து தர வேண்டும்.

கறவை மாடுகளின் கலப்புத் தீவனத்தில் தானியங்கள் 33 சதவிகிதம், பிண்ணாக்கு 35 சதவிகிதம், தவிடு வகைகள் 30 சதவிகிதம், தாது உப்புக் கலவை 1 சதவிகிதம் மற்றும் உப்பு 1 சதவிகிதம் இருக்க வேண்டும். இந்தக் கலப்புத் தீவனத்தை கறவை மாடுகளின் பால் உற்பத்திக்கேற்றவாறு ஒவ்வொரு 3 லிட்டர் பாலிற்கும் 1 கிலோ கலப்புத் தீவனம் என்ற அளவில் தர வேண்டும்.

3. போதிய அளவு நார்ச்சத்து தீவனம் அளித்தல்:

கறவையில் உள்ள மாடுகளுக்கு போதிய அளவு நார்ச்சத்து அதிகமுள்ள பசுந்தீவனம் மற்றும் காய்ந்த வைக்கோல் தர வேண்டும். ஏனெனில் மாடுகளின் “ரூமன்”; எனப்படும் பெரிய வயிற்றில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மூலம் நடக்கும் நொதித்தல் நிகழ்வின் மூலம் கொழுப்புச் சத்து உற்பத்தி செய்ய காரணிகள் சுரக்கப்படுகின்றன.

நார்ச்சத்து குறைவாக இருந்தாலோ அல்லது செரிமானத்தன்மை குறைவாக உள்ள நார்த்தீவனம் அளித்தாலோ நொதித்தல் தடைபட்டு, கொழுப்புச் சத்து உற்பத்தி செய்ய பயன்படும் காரணிகள் உற்பத்தி ஆவதில் தடை ஏற்பட்டு பாலில் கொழுப்பின் அளவு குறையும்.

அதனால் பாலில் கொழுப்புச் சத்து அதிகரிக்க தினமும் ஒரு மாட்டிற்கு பசுந்தீவனம் 15 முதல் 20 கிலோ மற்றும் காய்ந்த தீவனம் 4 முதல் 5 கிலோ என்ற அளவில் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

நல்ல தரமான காய்ந்த தீவனம் எப்போதும் மாடுகள் சாப்பிடுவதற்கு கிடைக்குமாறு இருந்தால் மாடுகளி;ன் பெரிய வயிற்றில் நொதித்தல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அதனால் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும்.

4. தீவனத்தில் தானியங்களின் அளவு: 

கலப்புத் தீவனத்தில் உள்ள தானியங்கள் பெரிய துகள்களாக இருத்தல் வேண்டும். அடர் தீவனத்தில் மக்காச் சோளம், சோளம், கம்பு போன்ற எரிசக்தியை அளிக்கக் கூடிய தீவனத்தை பெரிய துகள்களாக நாம் தீவனத்தில் கொடுக்கும் பொழுது செரிமானம் மெதுவாக ஏற்பட்டு வயிற்றில் உள்ள நன்மை செய்யும் நுண்ணியிரிகள் மூலம் நொதித்தல் நன்கு நடைபெற்று பாலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கும்.

5. தாது உப்புக் கலவை கொடுத்தல்:

ஒரு மாட்டிற்கு 30 கிராம் என்ற அளவில் தாது உப்புக் கலவையை தீவனத்தோடு கலந்து தினமும் கொடுத்தால் சத்துக் குறைபாடுகள் நீக்கப்பட்டு பாலில் கொழுப்புச் சத்து அதிகம் ஏற்படும்.

6. தீவனத்தில் சோடா உப்பு கலந்து கொடுத்தல்:

ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும் பொழுது வயிற்றில் அமிலத்தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுவதால் நன்மை தரும் நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்பட்டு நொதித்தல் தடையின்றி நடைபெறும். அதனால் பாலில் கொழுப்புச் சத்தும் அதிகரிக்கும்.

7. மடிநோய் வராமல் பாதுகாத்தல்:

பண்ணையைச் சுத்தமாக வைத்தல், பால் மடியை கறவைக்கு முன்னும் பின்னும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவுதல் மற்றும் கறவைக்குப் பின் மாடுகளை 10 நிமிடங்களுக்கு கீழே படுக்காமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற மடி நோய் வராமல் தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையில் மேற்கொண்டு கறவை மாடுகளில் மடி நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேற்கூறிய முறைப்படி கறவை மாடுகள் வளர்ப்பில் பண்ணையாளர்கள் எளிதாக கடைபிடிக்கக்கூடிய பாராமரிப்பு முறைகளை மேற்கொண்டால் பாலின் கொழுப்புச் சத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் பாலுக்கு அதிக விலை பெற்று கறவை மாடுகள் மூலம் அதிக இலாபம் பெற முடியும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
7
+1
6
+1
1
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்