மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் வீட்டில் மாடு வளர்ப்பவர்கள் மாடு கன்று ஈனும் பொழுது என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் மாடுகளில் கன்று ஈனுவதற்கான அறிகுறிகளை சரிவர கவனிக்காமல் விட்டு விட்டு, கன்று ஈனுதலில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பொழுது குறித்த நேரத்தில் கன்று ஈனுவதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் கன்று கருப்பையினுள் இறந்து விடும். கர்ப்பப்பை நோய் ஏற்பட்டு சினைப்படுவதில் தாமதமும் நிரந்தர மலட்டுத் தன்மையும் ஏற்படும். சில சமயம் நல்ல தரமான அதிக பால் தரும் மாடுகளைக் கூட இழக்க நேரிடலாம். அதனால் மாடுகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கன்று ஈனுதலைப் பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியமாகிறது.
கன்று ஈனுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு மாடு சரிவர தீவனம் எடுப்பதில்லை. அமைதியிழந்து காணப்படும். வாலை அடிக்கடி சுற்றும். வாலின் பின் பகுதியை நக்கவும், காலால் தரையை மெல்ல உதைத்துக் கொள்ளவும் செய்கிறது. மாறி மாறி படுப்பதும், எழுந்திருப்பதுமாக இருக்கும். அடிக்கடி தனது பின்பாகத்தினை, தலையைத் திருப்பிப் பார்த்துக் கொள்ளும். அமைதியின்றி, ஆழமாக மூச்சு விடும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். முதன் முறையாக சினை பிடித்த கிடேரிகள் வயிற்றுப் பாகத்தில் உதைத்துக் கொள்ளும். மாட்டின் இடுப்பில் உள்ள தசைநார்கள் குறிப்பாக இடுப்பின் தட்டுக்கள் மிகவும் இளகிய நிலையில் தளர்ந்து இருக்கும்.
இவ்வாறு இருப்பதால் கன்று சுலபமாக கருப்பையின் வாய் வழியாக வெளியே வருவதற்கு உதவுகிறது. மாட்டின் வெளி பிறப்புறுப்பானது இயற்கையான அளவை விட 2 முதல் 6 மடங்கு தடித்தும் தளர்ந்தும் இருக்கும். கருப்பையின் வாயில் இருக்கின்ற கெட்டியான சளி போன்ற திரவம் நீராக மாறி கருப்பை வாய் வழியாக வழிந்து கொண்டு இருக்கும். மடியானது தடித்தும் பெரியதாகவும் காணப்படும்.
கன்று ஈனுவதற்கு சில மணி நேரங்கள் இருக்கும் போது சில மாடுகளில் மடியிலிருந்து சீம்பால் தானாகக் கசியும். இந்த அறிகுறிகள் தென்படும் பொழுது சினை மாடுகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாதவாறு தனியாக தொழுவத்தில் கட்ட வேண்டும். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும். மாடு கன்று ஈனும் முறையை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை:
கருப்பையின் தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும் மற்றும் கருப்பையின் வாய் விரிவடையும். இந்த இரு நிகழ்ச்சிகளும் ஹார்மோன்கள் எனப்படும் கணநீர்களின் தூண்டுதலினால் நடைபெறுகின்றன. கன்று ஈனுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு முன்னால் கருப்பையின் தசைகள் அதிகமாகச் சுருங்கி விரிவடைவதால் பனிக்குடம் மற்றும் திரவம் மிகவும் இளகிய நிலையில் கருப்பையின் வாய் வழியாக வெளித்தள்ளப்படுகிறது. இந்த முதல் நிலையின் இறுதியில் கருப்பையின் வாயானது கன்று எளிதில் வெளியே வரும் அளவிற்கு மிகவும் விரிவடைந்திருக்கும்.
இரண்டாம் நிலை:
நன்றாக விரிவடைந்த கருப்பையின் வாய் வழியாக, கன்றானது வெளியே தள்ளப்பட்டு முதல் பனிக்குடம் உடைகிறது. பிறகு இரண்டாம் பனிக்குடம் வெளிப்பிறப்புறுப்பில் தென்படும். இந்தச் சமயத்தில் மாட்டின் வயிறானது வேகமாகச் சுருங்கி விரிகிறது. இதனால் கன்றின் கால்கள் மாட்டின் வெளி பிறப்புறுப்பின் வழியாக வந்தவுடன் இரண்டாம் பனிக்குடம் உடையும். முதல் பனிக்குடம் உடைந்தபிறகு இரண்டாம் பனிக்குடம் உடைவதற்கு சுமார் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரமாகும். இந்த இரண்டாம் பனிக்குடம் தானாக உடையும் வரை காத்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் சிலர் இரண்டாம் பனிக்குடத்தைக் கையால் உடைத்துக் கன்றை வெளியே எடுக்க முயலுவார்கள். இது மிகவும் தவறாகும். இவ்வாறு செய்தால் கன்றானது சுவாசிக்க முடியாமல் இறந்து விடக்கூடும். இரண்டாம் பனிக்குடம் உடைந்த பிறகு கன்றின் தலை, வயிறு மற்றும் தொடைப்பகுதி மாட்டின் இடுப்புப் பகுதிக்கு வருவதால் மாட்டின் வயிறு வேகமாக விரிவடைந்து சுருங்கும். கன்று வெளியே வருவதற்கு சுமார் அரை மணியிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும்.
இந்த நிலை மூன்று மணி நேரத்திற்கு மேலே நீடித்தால் உடனே கால்நடை மருத்துவரை நாடுவது நல்லது. ஏனெனில் கருப்பையிலுள்ள கருவைச் சுற்றியுள்ள சவ்வும் தொப்புள் கொடியும் அறுத்துக் கொண்டு, கன்றானது தாயின் கருப்பையின் உட்சுவரிலிருந்து பிரித்துக் கொள்கின்றன. இதனால் கன்றிற்கு தாயிடமிருந்து உயிர்வளியோ, மற்றச் சத்துக்களோ கிடைப்பது துண்டிக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக கன்று பிறக்கவில்லையென்றால், உயிர்வளி அற்ற நிலை ஏற்பட்டு கன்றுக்கு ஆபத்து ஏற்படும்.
மூன்றாம் நிலை:
கன்று ஈன்ற பிறகு நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்து வெளியே வந்து விழும். இந்த நஞ்சுக் கொடி கன்று போட்ட சுமார் 8 மணி நேரததிற்குள் தானாகவே விழுந்து விடும். அவ்வாறு விழவில்லையென்றால் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். நஞ்சுக்கொடியை 8 மணி நேரத்திற்கும் மேலாக எடுக்காமல் தாமதப்படுத்தினால் கர்ப்பப்பையில் நோய் ஏற்பட்டு பிறப்புறுப்பின் வழியாக மிகுந்த துர்நாற்றத்துடன் இரத்தம் கலந்த திரவம் அல்லது சீழ் வழிந்து கொண்டிருக்கும். மாட்டின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மாடுகளில் பால் கறவையும் சினைப் பிடிப்பதும் பாதிக்கப்ட்டு மாடும் மலடாகி விடும்.
நஞ்சுக்கொடியானது உரிய சமயத்தில் தானாக விழுந்து விட்டாலோ அல்லது கால்நடை மருத்துவர் கொண்டு வெளியே எடுத்து விட்டாலோ கர்ப்ப்பை நோய் ஏதும் ஏற்படாமல் கருப்பையானது 40 அல்லது 45 நாடகளில் சுருங்கி பழைய நிலைக்கு வந்து விடும். மாடும் வெகு சீக்கிரத்தில் சினைக்கு வந்து விடும். பாலும் நன்றாகக் கறக்கும். இந்த நஞ்சுக் கொடி வெளியே வந்து விழுந்தவுடன் மாடுகள் சாப்பிட்டு விடாதவாறு உடனே அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் மாட்டின் வயிறானது நஞ்சுக் கொடியைச் சீரணிக்கும் தன்மையற்றது. மாடுகள் நஞ்சுக்கொடியை சாப்பிட்டு விட்டால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு மாடுகள் சரியாகத் தீவனம் எடுக்காது. அதனால் பாலும் நன்றாகக் கறக்காது.
எனவே மாடு கன்று ஈனும் பொழுது கால தாமதம் ஏற்பட்டாலும் கன்று போட்ட பிறகு நஞ்சுக் கொடி 8 மணி நேரத்திற்குள் போடாவிட்டாலும் அதற்கு முறையான சிகிச்சை செய்வதில் காலதாமதம் செய்யாமல் உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகினால் கன்று ஈனும் நிலைகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனே தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு கன்று ஈனுதலை எளிதாக்க முடியும்.
தகுதியற்றவர் கொண்டு கன்றை கயிறு கட்டி இழுப்பதையோ கைகளை கர்ப்பப்பையில் விட்டு கன்றுக்குட்டியை வெளியே இழுப்பதையோ தவிர்க்க வேண்டும். அதனால் மாடுகள் வளர்ப்போர் கன்று ஈனுவதை நன்கு அறிந்து கொள்வதன் மூலம் மாடுகள் கன்றுகளை எளிதில் ஈனச் செய்வதுடன் மாடுகள் மலட்டுத் தன்மை அடைவதிலிருந்து பாதுகாத்து ஒரு மாட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு ஒரு கன்றை பெற்று மாடு வளர்ப்பின் மூலம் நல்ல பலன் பெற முடியும்.