மாடுகளைத் தாக்கும் சப்பை நோயும், தடுப்பு முறைகளும்

சப்பை நோயானது மழைக்காலங்களில் மாடுகளை அதிகம் பாதித்து உயிர்ச்சேதத்தை உண்டாக்கி மாடுகளை வளர்ப்போருக்கு பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஒரு நோயாகும். இந்நோய் வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளிலுள்ள மாடுகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. இந்நோயானது 6 மாத வயது முதல் 3 ஆண்டு வயது வரை உள்ள நல்ல ஆரோக்கியமான, இளம் மாடுகளை அதிகம் பாதிக்கிறது. மழைக்காலம் தொடங்கியிருக்கும் இச்சமயத்தில் மாடுகளை வளர்ப்போர் சப்பை நோய் பற்றி தெரிந்து தகுந்த தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டால் இந்நோயின் பாதிப்பிலிருந்து தமது மாடுகளை காப்பாற்ற இயலும்.

நோய்க்கான காரணங்கள் :
இந்நோயானது “கிளாஸ்ட்;ரிடியம் செவாய்” என்னும் பாக்டீரியா நுண்ணுயிரிக் கிருமிகளால் உண்டாகிறது. இந்நுண்ணுயிரிகள் மாடுகளில் காயங்கள் ஏற்படும் போது காயத்தின் வாயிலாக உள் சென்று பல்கிப் பெருகி அருகில் உள்ள சதையைப் பாதித்து சப்பை நோயை உண்டாக்குகின்றன. காயங்கள் துருப்பிடித்த இரும்பினால் ஏற்பட்டிருந்தால் தரையில் உள்ள மற்ற நுண்ணுயிரிகளும் இரும்பிலிருந்து உதிரும் துரும்பும் சேர்ந்து காற்று அழுத்தம் இல்லாத சூழ்நிலையை உண்டாக்கி அருகில் உள்ள சதையினைப் பாதிக்கின்றன. இத்தகைய சூழ்நிலை சப்பை நோய் உண்டாக்க வழிவகுக்கிறது.

இக்கிருமிகள் சுற்றுப்புறச் சூழ்நிலை சாதகமாக இல்லாத பொழுது தம்மைச் சுற்றி உறை போன்ற அமைப்பை உண்டாக்கி “ஸ்போர்களாக” மாறி சுற்றுப்புறச் சூழ்நிலை மாறுபாடு மற்றும் கிருமி நாசினிகளுக்குக் கட்டுப்படாமல் பல வருடங்கள மண்ணில் இருக்கக் கூடியவை. சாதகமான சூழ்நிலை உண்டாகும் பொழுது மாடுகளின் காயங்கள் வழியாக உட்சென்று நோயை உண்டாக்குகின்றன.

சப்பை நோய் பரவும் விதம்:
சப்பை நோய் மண்ணின் மூலம் பரவக்கூடியது. காயங்கள் வழியாக, குறிப்பாக ஆண்மை நீக்கம், குட்டி ஈனும் போது, வால் வெட்டுதல் மற்றும் சண்டை போடுதல் போன்ற முறைகளினால் உண்டாகும் காயங்களால் பரவுகிறது. நோய்க்கிருமிகள் உடலுக்குள் உட்சென்று ஒன்று முதல் ஐந்து நாட்களுக்குள் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் கூர்மையான முளைக்கும் பற்களால் உண்டாகும் புண்களினாலும், மாசுபட்ட தீவனம் உண்பதாலும் இந்நோய் உண்டாகும்.

மழைக்காலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். விவசாயத்திற்காக மண்ணைத் தோண்டுவதன் மூலம் மண்ணின் கீழ் உள்ள ஸ்போர்கள் வெளியேறி அவைகளின் மூலமும் இந்நோய் ஏற்படலாம். உடலுக்குள் சென்ற நோய்க்கிருமிகள்; பல்கிப் பெருகும் பொழுது நச்சுக்கள் உருவாகி அவற்றின் மூலம் தசைகளில் இறப்பு ஏற்படுகிறது. இந்த நச்சு, இரத்தம் மூலம் உடலில் பல பாகங்களுக்குச் சென்று கல்லீரல், மண்ணீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கின்றது.

அறிகுறிகள்:
திடீரென்று கடுமையான காய்ச்சல், சோர்வு மற்றும் பசியின்மை ஏற்படும். தொடை அல்லது முன் கால் சப்பையிலோ அல்லது கழுத்து போன்ற சதைபிடிப்புள்ள மற்ற பகுதிகளிலோ வெப்பம் மிகுதியாகவும் வலியோடு கூடியதும், கடினமான தன்மையுள்ள பெருத்த வீக்கம் காணப்படும். இதன் காரணமாக மாடுகள் நடக்க முடியாமல் நொண்டும். பாதிக்கப்படட சதைப்பாகம் அல்லது சப்பை பாகத்தில் விரல் கொண்டு அழுத்தும் போது காற்றடைத்த பலூனை உள்ளங்கையால் தேய்த்தால் எவ்விதச் சத்தம் வருமோ அதே போன்று நறநறவென்ற சத்தம் வரும்.

சதையில் திசு இறப்பு ஏற்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்திலுள்ள தோலின் நிறம் கருப்பாக மாறும். மேலும் பாதிக்கப்பட்ட சதைப்;பகுதியில் கெட்டுப்போன தயிர் போன்று நாற்றம் அடிக்கும். மூச்சுத்திணறல் ஏற்படும். மூக்குத் துவாரத்திலிருந்து நுரை கலந்த திரவம் கசியும். கால்நடை மருத்துவர் கொண்டு தகுந்த சிகிச்சை உடனடியாக அளிக்;காவிட்டால் நோய் கண்ட மாடுகள் 3 முதல் 7 நாட்களில் இறந்து விடும்.

சிகிச்சை முறைகள்:
நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாடுகளிலிருந்து பிரித்து தனியாக சிகிச்சை அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் தகுந்த “ஆன்டிபயாடிக்” எனப்படும் நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகள் கொண்டு உடனடியாக மருத்துவம் செய்தால் மாடுகளை இறப்பிலிருந்து காப்பாற்றி விட முடியும்.

தடுப்பு முறைகள்:
மழைக்காலத்திற்கு சுமார் 1 மாதத்திறகு முன்பே ஒவ்வொரு ஆண்டும் மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். சப்பை நோய் தடுப்பூசியை கன்றுகளுக்கு முதலில் 6 வது மாதத்தில் போட வேண்டும். பிறகு வருடந்தோறும் பருவமழை தொடங்குவதற்கு முன் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்வது நல்லது.

நோயால் இறந்த கால்நடைகளை ஆழமாக குழி தோண்டி சுண்ணாம்பு இட்டு புதைத்தோ அலாது எரித்தோ அப்புறப்படுத்த வேண்டும். இறந்த இடத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் உள்ள மாடுகளில் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்க நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மாடுகளை வெளியே ஓட்டிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்