முழங்கால் சில்லு எலும்பானது முழங்கால் மூட்டில் உள்ள ஏலும்புகளை இணைக்கும் தசை நார்ப்பகுதியல் மாட்டிக் கொள்வதால் சுண்டு வாதம் என்னும் நிலை ஏற்படுகிறது. இது பசுமாடுகள், எருமை மாடுகள், மற்றும் வேலை மாடுகளில் காணப்பட்டாலும் வேலை மாடுகளில் அதிகம் காணப்படுகிறது. சுண்டு வாதத்தினால் மாடுகளின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் மாடுகள் நடக்கும் பொழுது கால்களை இழுத்து இழுத்து நடப்பதால் நடையை அதிகம் பாதிக்கிறது. இதனால் மாடுகளின் விலை மதிப்பு பெருமளவு குறைந்து அடிமாட்டின் விலையை பெறும் நிலை ஏற்படுகிறது. சுண்டு வாதம் என்பது சரி செய்யக் கூடிய ஒரு நிலை என்பது தெரியாமல் பலர் தமது மாடுகளை மிகக் குறைந்த விலைக்கு விற்று நஷ்டமடைகின்றனர். மிகக் குறைந்த விலைக்கு சுண்டு வாதம் உள்ள மாடுகளை வாங்கும் இடைத் தரகர்கள் அதை சரி செய்து மீண்டும் நல்ல விலைக்கு விற்று அதிக இலாபம் பெறுகின்றனர். எனவே சுண்டு வாதம் பற்றி மாடுகள் வைத்திருப்போர் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
சுண்டு வாதம் ஏற்பட காரணங்கள்
- உடல் பலவீனம்
- பின் முழங்கால் மூட்டில் செயல்படும் தசையில் ஏற்படும் பலவீனம்.
- அதிகப்படியாக கால்களை இழுத்தல்
- காலில் அடிபடுதல், அதிக வயது, அதிக குளிர் போன்றவை அறிகுறிகளை அதிகப்படுத்தும். எனவே குளிர்காலங்களிலும், வேலைக்குப் பயன்படும் மாடுகளிலும் இது அதிகம் காணப்படுகிறது.
அறிகுறிகள்
சுண்டு வாதமானது ஒரு பின்னங்காலிலோ அல்லது இரு பின்னங்கால்களிலோ ஏற்படலாம். ஆனால் மாடுகளில் ஒரு கால் மட்டும் பாதிக்கப்படுவது அதிகமாக காணப்படுகிறது. மாடுகள் நிற்கும் பொழுது எந்த வித அறிகுறிகளும் தென்படாது. அதிகாலையில் கொட்டகையிலிருந்து அவிழ்க்கும் பொழுதும் பகல் பொழுதில் வெகுநேரம் ஓய்விலிருந்து விட்டு நடக்கும் பொழுதும் பாதிக்கப்பட்ட பின்னங்காலை முன்புறமாகக் கொண்டு வர முடியாமல் சிரமப்படும். பின் மிகுந்த சிரமத்துடன் காலை முன் வைத்து நடக்கும் பொழுது மாடுகள் கால்களை இழுத்து இழுத்து நடப்பது போல் தென்படும். காலை முன்புறம் கொண்டு வரும் பொழுது சடக்கென்று சத்தம் பின்கால் மூட்டிலிருந்து வரும். பதினைந்து அல்லது 20 அடிகள் நடந்தவுடன் நடப்பது சாதாரணமாகி விடும்.
மாடுகளை பின்னால் நடக்க வைக்க முயன்றால், மாடுகள் கால்களை பின்னால் எடுத்து வைத்து நடக்க மறுக்கும். படுக்கும் பொழுது பாதிக்கப்பட்ட காலை நீட்டியபடியே படுக்கும் சில சமயங்களில் சில மாடுகளில் கால்களை இழுத்து இழுத்து நடப்பதனால் காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் ஒழுகும். சில மாடுகள் பாதிக்கப்பட்ட காலை வெளியே இழுத்துக் கொண்டே நடக்கும். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் நடப்பதற்கு மிகுந்த சிரமப்படும். சினை மாடுகளில் தசை நார்கள் தளர்ந்த நிலையில் இருப்பதால் சுண்டு வாதத்தின் அறிகுறிகள் அதிக தீவிரமாக காணப்படும்.
சிகிச்சை முறை
சுண்டு வாதத்தை இரண்டு வகையான சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்தலாம். ஓன்று மருத்துவ சிகிச்சை முறை மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. மருத்துவ சிகிச்சை முறையில் “டிங்சர் அயோடின” அல்லது “லூகால்ஸ் அயோடின” என்ற மருந்தானது பாதிக்கப்பட்ட பின்னங்காலில் உள்ள தொடை எலும்பு மற்றும் சில்லு எலும்பு சேரும் மூட்டில்; ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால் மருந்து செலுத்தப்பட்ட மூட்டில் முதலில் வீக்கம் ஏற்பட்டு பின் படிப்படியாக வீக்கம் குறைந்து ஓரிரு வாரங்களில் சரியாகி விடும். இந்த முறையில் சுண்டு வாதத்தை குணப்படுத்தும் பொழுது மாடுகளுக்கு இரண்டு முதல் 3 வாரம் வரையில் கண்டிப்பாக ஓய்வு கொடுக்க வேண்டும்.
அறுவை சிகிச்சை முறை மூலம் குணப்படுத்தும் பொழுது முழங்கால் மூட்டில் இருக்கும் தசை நாரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் சுண்டு வாதம் சரியாகி உடனே மாடுகள் நல்ல முறையில் நடக்க ஆரம்பித்து விடும். சுண்டு வாதத்திற்கு செய்யக் கூடிய அறுவை சிகிச்சையானது செலவு அதிகமாகாத, எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும். எந்த முறையில் சிகிச்சை செய்தாலும் கால்நடை மருத்துவர் மூலமே குறிப்பாக சுண்டு வாத சிகிச்சையில் தேர்ச்சி பெற்றவர் மூலமே சிகிச்சை செய்ய வேண்டும். எனவே மாடுகள் வளர்ப்போர் தங்களின் மாடுகளில் சுண்டு வாதம் ஏற்பட்டால் தங்களின் விலை மதிப்பு அதிகம் உள்ள மாடுகளை அடிமாடு விலைக்கு விற்காமல்;, சுண்டு வாதம் பற்றிய பயம் கொள்ளாமல் தகுந்த சிகிச்சை செய்து எளிதில் குணப்படுத்தி விடலாம்.