மாடுகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசத்தை தடுக்கும் முறைகள்

மாட்டின் வயிற்றில் மிக அதிகமான வாயு அடைத்துக் கொள்வதற்கு வயிற்று உப்புசம் என்று பெயர். மாடுகள் பயறு வகைத் தீவனங்களை அதிக அளவில் உண்ணும் பொழுது இப்பயிர்களில் உள்ள சில வகைப் புரதங்கள் மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு போன்ற வாயுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. மாடுகளின் முன்வயிற்றில் உணவு சேமித்து வைக்குமிடத்தில் இந்த வாயுக்கள் அடைத்துக் கொள்ளும் பொழுது மாடுகள் திரும்ப உணவை வாய்க்கு கொண்டு வந்த அரைக்க முடியாமல் அவதிப்படும். வாயுக்கள் நுரை போல் முன்வயிற்றில் கட்டிக் கொள்வதால் தீவனத்தைச் செரிக்க இயலாமலும் மாட்டின் பெரு வயிற்றில் உற்பத்தியாகும் வாயுக்கள் வெளியேற முடியாமலும் வாயுக்கள் வயிற்றில் தங்கி வயிற்று உப்புசம் ஏற்படுகிறது.

வயிற்று உப்புசம் வந்த பின் முறையான சிகிச்சை தகுந்த சமயத்தில் அளிக்காமல் இருந்தாலோ அலலது கவனிக்காது அஜாக்கிரதையாக விட்டாலோ பெரு வயிறு ஊதி இதயம் மற்றும் நுரையீரல் அழுத்தப்படுவதால் மாடுகள் இறந்து விடக்கூடும். அதனால் மாடுகளை வளர்ப்போர் வயிற்று உப்புசம் ஏற்படும் காரணங்களை தெரிந்து கொண்டு வயிற்று உப்புசம் வராமல் தடுக்கும் பராமரிப்பு முறைகளையும் வயிற்று உப்புசம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளை கையாண்டால் மாடுகளை இறப்பிலிருந்து காக்க முடியும்.

வயிற்று உப்புசம் ஏற்படக் காரணங்கள்:
வயிற்று உப்புசம் இரண்டு வகைப்படும். ஒன்று சாதாரண வயிற்று உப்புசம், மற்றொன்று “நுரை வயிற்று உப்புசம்”. சாதாரண வயி;ற்று உப்புசத்தில் வாயு மட்டும் வயிற்றில் அடைத்து இருக்கும். நுரை வயிற்று உப்புசத்தில் வயிற்றில் உட்கொண்ட உணவில் நிலையான நுரை காணப்படும். இந்த நிலையான நுரை கிருமிகளால் உண்டாகும் வாயுவை உள் இழுத்துக் கொள்ளும்.

சாதாரண வயிற்று உப்புசம் பல காரணங்கால் வருகிறது. நன்றாக அரைத்த தீவனத்தை உட்கொள்ளும் போது வாயு உற்பத்தி அதிகமாக இருக்கும். சில மாடுகள் ஆப்பிள், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை உட்கொள்ளும் போது உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூ;சசுத் திணறும். அடைப்பு இருப்பதால் வாயு வெளியேற முடியாமல் வயிறு உப்புசம் ஏற்படும்.

இதற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வெளியில் சென்று மேய்கிற மாடுகள் கூர்மையான பொருட்களான ஆணி, கம்பி போன்றவற்றை தீவனத்துடன் விழுங்கி விடுவதால் அவை இரைப்பை மற்றும் உதரவிதானத்தைத் துளை போட்டு இதய மேல் உறையைத் துளைத்து இதய மேல் உறை நோயை உண்டாக்குகிறது. இதனால் மாடுகளில சாதாரண வயிற்று உப்புசம் திரும்பத் திரும்ப வருபவையாக இருக்கும்.

அதிக நுரையை உற்பத்தி செய்யும் பயறு வகைப் பசுந்தீவனங்களை அதிக அளவில் உண்பதாலும், மழையில் நடைந்த குறுவை வைக்கோலை உட்கொள்வதாலும், அதிக இளந்தளிரை உண்டாலும், அதிக அளவு சில வகை பாக்டீரியா நுண்கிருமிகள் மாட்டின் வயிற்றில் இருக்கும் போதும் நுரை வயிற்று உப்புசம் வருகிறது.

அறிகுறிகள்:
வயிற்றின் மேல் பாகத்திலிருந்து கீழ் வரை வயிற்றுப்பகுதி முழுதும் உப்பிக் காணப்படும். வயிற்று உப்புசத்தால் பாதிக்கப்பட்ட மாடுகள் அசௌகரியத்துடன் அடிக்கடி உடகார்ந்து எழுந்திருக்கும். நடக்க சிரமப்படும். வயிற்றை உதைத்துக் கொள்ளும். சில சமயம் தரையில் உருளும். மேலும் மூச்சு விடுவதில் சிரமம், நாக்கை வெளியே துருத்திக் கொண்டு தலையை நீட்டிக் கொண்டிருத்தல், வலியின் காரணமாக பற்களை கடித்தல், வாய் மூலம் மூச்சு விடுத்ல், அசை போடாதிருத்தல், பால் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

முதலுதவிகள்:
மாடுகளின் வாயில் ஒரு குச்சியினை எப்பொழுதும் இருக்குமாறு வைத்து விட வேண்டும். இதனால் வாயில் உற்பத்தியாகும் அதிகப்படியான எச்சில் வயிற்றுக்குள் சென்று வாயு உற்பத்தியைக் குறைக்கும். நுரைப்புத் தன்மையினைத் தடை செய்யும் தாவர எண்ணெய்களான நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை 100 முதல் 250 மி.லி என்ற அளவில் மாடுகளின் வாயில் புரை ஏறாமல் ஊற்ற வேண்டும்.

மாட்டை முடிந்த அளவிற்கு நடக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாடுகளுக்கு முதலுதவி செய்து விட்டு உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி வயிற்று உப்புசத்திற்கான காரணத்தை சோதித்துத் தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாடுகளை எளிதில் குணப்படுத்தி விடலாம்.

தடுப்பு முறைகள்:
மாடுகளுக்கு புரதச் சத்து மிகுந்த பயறு வகை பசுந்தீவனங்களை அதிகமாக அளிக்கக்கூடாது. மாடுகளுக்கு அளிக்கப்படும் பசுந்தீவனத்தில் மூன்றில் இரு பங்கு புல்வகை மற்றும் மர வகைத் தீவனங்களும் மூன்றில் ஒரு பங்கு பயறு வகை பசுந்தீவனமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் விடுவதற்கு முன்பு வைக்கோலைத் தீவனமாக அளிக்க வேண்டும். இளம் பசுந்தீவனங்கள் கொடுப்பதைத் தவிர்த்து நன்கு வளர்ந்த பசுந்தீவனங்களை தீவனமாகக் கொடுக்க வேண்டும். மாடுகளுக்குத் தானியங்களைத் தீவனமாகக் கொடுக்கும் பொழுது குறுணை அளவில் இருக்குமாறு அரைத்துக் கொடுக்க வேண்டும். நன்றாக மாவு போன்று அரைத்துக் கொடுக்கக்கூடாது.

மாடுகளைக் குப்பைத் தொட்டி மற்றும் வீதியிலுள்ள கழிவுப்பொருட்களில் மேய அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவற்றிலுள்ள பாலித்தீன் பைகள், பீட்ரூட், ஆப்பிள், உருளைக்கிளங்கு மற்றும் ஆணிகள் போன்றவற்ளைத் தவறுதலாக உட்கொள்ள நேரிடும். இதனால் வயிற்று உப்புசம் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

புளித்த கஞ்சி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கழனித் தண்ணீர்; மற்றும் அரிசி கஞ்சி சேகரிக்கும் பொழுது அதில் கெட்டுப்போன காய்கறிகள் மற்றும் அவற்றின் தோல்கள் கத்தரிக்காய் இருந்தால் அவற்றை நீக்கி விட்டு மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

 

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
பகிருங்கள்