மாடுகள் படுத்த நிலையில் இருந்து எழுந்து நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, நாட்கணக்கில் ஒரே இடத்தில் படுத்திருக்க நேர்ந்தால் அவற்றின் உடம்பில் படுக்கைப் புண்கள் உண்டாகின்றன. தகுந்த சிகிச்சை அளிக்காமலும், பராமரிப்பு இல்லாமலும் இருந்தால் படுக்கைப் புண்களில் புழு வைத்து விட்டாலோ அல்லது புண்களில் நோய்த் தொற்று ஏற்பட்டாலோ படுத்த படுக்கையாக இருக்கும் நல்ல உற்பத்தித் திறனுடைய மாடுகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி விரைவில் இறக்க நேரிடும். இதனால் நமக்கு பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும்.
படுத்த படுக்கையாக உள்ள மாடுகளை குணப்படுத்துவதற்கு மாடுகளை வைத்திருப்பவர் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தகந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகளை மேற்கொண்டால் மாடுகளை விரைவில் குணப்படுத்தி விட முடியும். எனவே படுக்கைப் புண்கள் பற்றியும் அவற்றைப் பராமரிக்கும் முறைகளைப் பற்றியும் மாடுகள் வைத்திருப்போர் அறிந்து கொள்வது மிக்க அவசியம்.
படுக்கைப் புண்கள் உண்டாகக் காரணங்கள்:
மாடுகளை நாட்கணக்கில் ஒரே இடத்தில் படுத்திருக்கச் செய்யக்கூடிய காரணங்களனைத்தும் படுக்கைப் புண்கள் உண்டாகக் காரணங்களாகும். உதாரணமாக மாடுகளில் நிறைமாத சினையின் போது தீவனப் பற்றாக் குறையால் மற்றும் இதர காரணங்களால் ஏற்படும் “டவுனர் கவ் சின்ட்ரோம” எனப்படும் எழ முடியாத நிலை, கன்று ஈன்ற பின் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் உண்டாகும் பால் சுரம், மக்சீசியச் சத்துக் குறைவு, முடக்கு வாதம், தீவிர கர்ப்பப்பை நோய், மடி நோய், அதிகமான வயிற்றுப் போக்கு, இடுப்பெலும்பு முறிந்து போதல், இடுப்பு மூட்டு விலகுதல், விபத்துக்களினால் மிக மோசமாக அடிபடுதல், கால் எலும்பு முறிவு ஏற்படுதல், எலும்பு முறிவுக்கு சரிவர சிகிச்சையளிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் மாடுகளில் படுக்கைப் புண்கள் உண்டாகின்றன.
அறிகுறிகள்:
மாடுகள் எழுந்திருக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும். மாடுகள் மிக இளைத்து எலும்புகள் துருத்த ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக படுத்திருக்கும் மாடுகளில் எலும்புகள் அழுத்தும் இடங்களில் புண்கள் காணப்படும். புண்கள் நீர்ப்பசையின்றி காய்ந்து இருக்கும். சரியாக பராமரிக்காத புண்களில் புழுக்கள் அல்லது சீழ் பிடித்து காணப்படும். இத்துடன் நோய்த்தொற்றும் இருந்தால் மாடுகளில் காய்ச்சல் ஏற்படும். தீவனம் சரிவர உட்கொள்ள முடியாமல் மாடுகளின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து பிறகு இறந்து போகும்.
தடுப்பும், பராமரிப்பு முறைகளும்:
மாடுகள் எழுந்திருக்க முடியாத காரணத்தை கண்டறிந்து கால்நடை மருத்துவர் உதவி கொண்டு தகுந்த சிகிச்சை அளித்து மாடுகளை விரைவில் எழுந்திருக்கச் செய்வது தான் படு;க்கைப் புண்கள் வராமல் தடுக்கக் கூடிய முக்கியமான வழி முறையாகும்.
மாடுகளை வெறும் தரையில் படுக்க வைக்காமல் அதிகமான வைக்கோல் அல்லது மணலை மெத்தை போல் பரப்பிய இடத்தில் படுக்க வைக்க வேண்டும். இதனால் எலும்புகள் தரையில் அழுத்துவதால் உண்டாகும் படுக்கைப் புண்களை தடுக்கலாம். மேலும் மாடுகள் எழுந்து நிற்க முயற்சி செய்யும் பொழுது கீழே விழுந்து விட நேரிடும் பொழுது அடிபடாமல் பாதுகாக்கும்.
சுத்தமான தண்ணீர், சத்தான தீவனம் எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே இடத்தில், ஒரே நிலையில் அதிக நேரம் படுக்க விடாமல் மாடுகளை மூன்று மணி நேரத்திற்கொரு முறை நிலை மாற்றி படுக்க வைக்க வேண்டும். ஓவ்வொரு முறை நிலை மாற்றி படுக்க வைக்கும் பொழுதும் கால்களை நன்கு நீட்டி மடக்கச் செய்ய வேண்டும்.
படுத்திருக்கும் மாடுகளை ஆட்களின் துணை கொண்டு நிற்க வைக்க முயல வேண்டும். சில மாடுகள் தானே எழுந்திருக்க முடியாத போது ஆட்களின் உதவியால் எழுந்திருக்க உதவி செய்தால் பிறகு தானே எழுந்து நிற்கக் கூடும். படுத்தே இருக்கும் மாடுகளில், தொடைப்பகுதி, மற்றும் கால்கள் மரத்துப் போய் எழுந்திருக்க தெம்பில்லாமல் இருக்கும். இந்நிலை வராமல் தடுப்பதற்கு அடிக்கடி கால்களை மடக்கி, நீட்டச் செய்ய வேண்டும்.
கைகளைக் கொண்டு உடம்பையும், கால்களையும் அழுத்தி தேய்க்க வேண்டும். மணல் அல்லது, தவிடை லேசாக வறுத்து கால்களிலும், தொடைப்பகுதியிலும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது மாடுகளின் கால்களுக்கும் உடம்பிற்கும் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி மாடுகள் விரைவில் எழுந்து நிற்க உதவி செய்யும். மாடுகளின் உடம்பில் போரிக் பவுடரை ஒரு நாளைக்கு மூன்று வேளை போட்டால் படுக்கைப் புண்கள் உண்டாவதைத் தடுக்கலாம்.
படுக்கைப் புண்கள் ஏற்பட்டு விட்டால் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரால் அல்லது சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரால் கழுவி விட்டு வேப்ப எண்ணெயில் போரிக் பவுடரை கலந்து படுக்கைப் புண்களில் தடவலாம். இது புண்களில் ஈக்கள் மொய்த்து புழு வைக்காமல் இருக்கவும் புண்கள் விரைவில் ஆறவும் உதவும். கறவையில் உள்ள மாடாக இருந்தால் அடிக்கடி பாலைக் கறந்;து விட வேண்டும். இது மடிநோய் வராமல் பாதுகாக்கும்.
மாடுகள் எழுந்திருக்க முடியாத நிலையின் காரணத்தை கால்நடை மருத்துவரின் உதவியுடன் கண்டறிந்து, அதற்குரிய தகுந்த சிகிச்சை மேற்கொண்டும், படுக்கை புண்கள் வராமல் மாடுகளை நன்கு பராமரித்தும் 10 நாட்களுக்கள் சிறிது கூட பலனளிக்காமல் படுத்த படுக்கையாக இருந்தால் மாடுகளை பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும். ஏனெனில் சிகிச்சை பலனளிக்காத மாடுகளை காப்பாற்றுவது மிகவும் சிரமம்.