கால்நடைகள்தீவனங்கள்

மாடுகளுக்குத் தீவனமாகும் நிலக்கடலைச் செடி

Ground nut waste as dry fodder for livestock

சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உலக நிலக்கடலை உற்பத்தியில் உள்ளது. மேலும் இந்திய நிலக்கடலை உற்பத்தியில் தமிழ்நாடு குஜராத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பணப்பயிராக இவை பயிரிடப்பட்டு வருகின்றன. இதிலிருந்து கிடைக்கும் நிலக்கடலை எண்ணெய் மிகச் சிறந்த சமையல் எண்ணெயாகவும், கடலைப்பிண்ணாக்கு மிகச் சிறந்த புரத வகையாக அனைத்துக் கால்நடை மற்றும் கோழித் தீவனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கடலைச் செடியானது வெயிலில் காயவைக்கப்பட்டுச் சிறிய அளவில் கடலைபோராக அடுக்கி வைக்கப்பட்டு விவசாயிகள் தமது கால்நடைகளுக்கு குறைந்த அளவில் உலர் தீவனமாக கொடுத்து வருகின்றனர். நிலக்கடலைச் செடியில் உள்ள சத்துப் பொருட்கள், பதப்படுத்தும் முறை மற்றும் கொடுக்க வேண்டிய அளவு முறை பற்றி விவசாயிகள் தெரிந்து கொண்டால் தமது நிலங்களில் விளையும் அல்லது தமது கிராமங்களில் மலிவாகக் கிடைக்கக் கூடிய நிலக்கடலைச் செடிகளை சிறந்த முறையில் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்க முடியும்.

நிலக்கடலைச் செடி சிறந்த தீவனமாவதற்கான காரணங்கள்:
மாடுகளுக்கு பொதுவாகக் கொடுக்கப்பட்டு வரும் வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் குறைந்த புரதம் மற்றும் அதிகமான செரிமானத் தன்மையற்ற நார்ச்சத்தும் உள்ளதால் கால்நடைகள் அவற்றை பெரும்பாலும் விரும்புவதில்லை. மேலும் அவ்வகை உலர் தீவனங்களை அதிக அளவு கொடுக்கும் பொழுது பால் உற்பத்தி குறைவும் உடல் வளர்ச்சி பாதிப்பும் எளிதில் சினைப் பிடிக்காத தன்மையும் உண்டாகிறது. ஆனால் பயறு வகைத் தீவனமான நிலக்கடலைச் செடியில் அதிக அளவு புரதமும் எளிதில் செரிக்கும் தன்மையும் உள்ளதால் கால்நடைகள் பெரிதும் விரும்பி உண்ணும் உலர் தீவனமாக உள்ளது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பால் தற்போது அதிக விளைச்சலுடன் கூடிய நீண்ட தண்டுடன் அதிக இலை வளர்ச்சியும் உள்ள இரு பலன் கொண்ட இனங்கள் பெருகி வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானமும் தங்கள் காலநடைகளுக்குத் தேவையான சத்துள்ள கடலைச் செடிகளையும் பெற முடிகிறது.

நிலக்கடலைச் செடியில் உள்ள சத்துக்கள்:
நிலக்கடலைச் செடியில் கால்நடைகளுக்குத் தேவையான சத்துக்கள் செரிந்துள்ளன. நன்கு பதப்படுத்தப்பட்ட நிலக்கடலைச் செடியில் 91.3மூ உலர்பொருள் உள்ளது. இதில் 11 மூ முதல் 17மூ வரை புரதச் சத்தும், 30மூ முதல் 35மூ வரை நார்ச்சத்தும,; 1.5மூ முதல் 2.5மூ வரை கொழுப்புச் சத்தும், 10.5 மூ சாம்பல் சத்தும், 17.8 மூ கால்சியம் சத்தும் 1.5மூ பாஸ்பரஸ் சத்தும் உள்ளன. இந்த சத்துக்கள் கடலைச் செடியின் இனத்திற்கு இனம் சிறிது மாறுபடும்.

நிலக்கடலைச் செடியினைப் பக்குவப்படுத்தும் முறைகள்:
நிலக்கடலையினை பிரித்தெடுத்த பிறகு நிலக்கடலைச் செடியினை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த செடியின் ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலை அல்லது மாலை வேளைகளில் கடலைச் செடியினைப் பிரித்து உலர்த்த வேண்டும்.  இதன் மூலம் நாம் தேவையற்ற இலை உதிர்வைத் தடுக்க முடியும்.  உலர்ந்த கடலைச் செடிகளைக் கட்டுகளாகக் கட்டி மழையில் நனையாதவாறு கூடங்களில் அடைக்கலாம் அல்லது முறையாகப் பரண் அமைத்தும் நல்ல உயரமான இடங்களில் போர் அமைத்தும் அதன் மேல் பாயையோ அல்லது தார்பாலின் கொண்டோ மூடி வைத்து மழையில் நனைந்து விடாமலும், பனிக் காலங்களில் காய்ந்த நிலக்கடலைச் செடியில் ஈரப்பதம் மிகாமலும் பாதுகாத்து வைக்க வேண்டும். நன்றாகக் காய வைக்காத செடிகள் மழையில், பனியில் நனைந்து செடிகளின் ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால் இவற்றை போராக அடுக்கி வைக்கும் பொழுது பூஞ்சைக்காளான் தாக்கி அவற்றில் நஞ்சினை உருவாக்குகிறது. இதனால் காலநடைகளில் செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டுக் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.

கடலைச் செடிகளை உலர் தீவனமாகக் கொடுக்கும் அளவு:
அனைத்து வகையான காலநடைகளும் காய்ந்த நிலக்கடலைச் செடிகளை உலர் தீவனமாக விரும்பி உண்ணுவதால் கால்நடைகளின் தேவைக்ககேற்ப கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு கன்று அல்லது கிடேரிக்கு 4 கிலோ, ஓர் எருதுக்கு 6 கிலோ, ஒரு கறவைமாட்டிற்கு 8 முதல் 10 கிலோ, ஒரு வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக்கு 4 கிலோ என்ற அளவில் தினமும் கொடுக்கலாம். கறவை மாடுகளுக்கு இவ்வகைத் தீவனத்தை அளிக்கும் பொழுது தேவையான அளவு புல் வகைகளையும் சேர்த்து அதன் வைட்டமின் ‘ஏ’ தேவையைப் பூர்த்தி செய்யலாம். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு எந்தவொரு அடர் தீவனமும் கொடுக்காமல் உலர்ந்த நிலக்கடலைச் செடிகளையே கொடுத்துக் கொட்டில் முறையில் வளர்க்கலாம்.

நிலக்கடலைச் செடிகளை உலர்தீவனமாகக் கொடுக்கும் பொழுது கால்நடைகளுக்கு வேறு எந்த உலர் தீவனமும் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு விவசாயிகள் தமது தோட்டத்தில் கிடைக்கக்கூடிய நல்ல தரமான புரதச் சத்து மிக்க எளிதில் செரிக்கும் தன்மையுள்ள நிலக்கடலைச் செடிகளைப் பக்குவமாக உலர வைத்து கால்நடைகளுக்கு உலர் தீவனமாக அளித்தால் கால்நடைவளர்ப்பில் அடர் தீவனச் செலவினைக் குறைத்து, கால்நடைகளின் உற்பத்தியைப் பெருக்கி கால்நடை வளர்ப்பு மூலம் அதிக இலாபம் பெற முடியும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

டாக்டர். இரா.உமாராணி

டாக்டர். இரா. உமாராணி பேராசிரியர், கால்நடைப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், திருப்பரங்குன்றம், மதுரை- 625 005.
Back to top button
error: Content is protected !!