பால் பண்ணைத் தொழில் இலாபகரமாக அமைய இளம் வயதுடைய, நல்ல உற்பத்தித் திறனுடைய, நல்ல தரமான கறவை மாடுகளைத் தெரிவு செய்வது மிக முக்கியமானதாகும். இரண்டாவது ஈற்றில் உள்ள மாடுகள் அல்லது 4 நிரந்தரப் பற்கள் கொண்ட மாடுகளை வாங்க வேண்டும். சில சமயங்களில் மாடுகள் வாங்கும் பொழுது மாடுகளின் வயது அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு முறை தான் கன்று ஈன்றிருக்கும். இவ்வாறு வயது அதிகமான மாடுகளை வாங்குவது நமக்கு நட்டத்தைத் தான் தரும்.
இடைத் தரகர்கள் சொல்வதை மட்டும் நம்பி வயது முதிர்ந்த மாடுகளை அதிக பணம் கொடுத்து வாங்கும் பொழுது அநேக நேரங்களில் மாடுகளை வாங்குபவர்கள் ஏமாந்து போக நேரிடுகிறது. அதனால் மாடுகளின் வயதைக் கண்டறியும் முறையை நாம் அறிந்திருந்தால் தரகர்கள் உதவியுடன் மாடுகள் வாங்கினாலும் நாம் ஏமாறாமல் நல்ல இளம் வயது மாடுகளை வாங்க முடியும்.
பொதுவாகப் பல் வரிசையைக் கொண்டும் கொம்புகளின் வளையங்களைக் கொண்டும் தோராயமாக மாடுகளின் வயதை நிர்ணயிக்கலாம். பற்களில், தற்காலிகப் பற்கள் மற்றும் நிரந்தரமான பற்கள் என்று உண்டு. அவைகளில் முன் வெட்டுப் பற்கள், முன் கடை வாய்ப்பற்கள் மற்றும் கடைவாய்ப்பற்கள் என்று மூன்று வகை உண்டு.
மாடுகளில் நிரந்தரப் பற்களாக கீழ்;த்தாடையில் 4 ஜோடி முன் வெட்டுப் பற்கள், 3 ஜோடி முன் கடைவாய்ப்பற்கள் மற்றும் 3 ஜோடி கடைவாய்ப்பற்கள் இருக்கின்றன. மாடுகளுக்குக் கோரைப்பற்கள் கிடையாது. மேலும்; மேல் தாடையில் முன் வெட்டுப் பற்களுக்குப் பதிலாக வெறும் ஈறு மட்டுமே காணப்படும். முன் கடைவாய்ப் பற்களும், கடைவாய்ப்பற்களும், கீழ்த்தாடையில் உள்ளவை போலவே மேல் தாடையிலும் இருக்கின்றன. மாடுகளில் தற்காலிக மறறும் நிரந்தரப் பற்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டிற்கு மேலுள்ளவை மேல் தாடையிலும், கோட்டிற்கு கீழுள்ளவை கீழ்த்தாடையிலும் உள்ளவை.
பால் பற்கள் : 2 ( 0/4, 0/0,3/3, 0/0) = 20
நிரந்தரப் பற்கள் : 2 ( 0/4, 0/0,3/3, 3/3) = 32
மாடுகளில் கீழ்த்தாடையிலுள்ள 4 ஜோடி முன் வெட்டுப் பற்களைக் கொண்டு வயது நிர்ணயிக்கப்படுகிறது. கீழ்த்தாடையின் உதடுகளை சிறிது விலக்கினாலே பற்கள் தெரிந்து விடுவதால் மாடுகளின் வயதை எளிதில் தீர்மானிக்கலாம். கீழ்த்தாடையிலுள்ள ஒவ்வொரு ஜோடி நிரந்தர முன் வெட்டுப்பற்கள் புதிதாகத் தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வயதில் தான் நடைபெறும். கிடேரிக்கு கிடேரி இது மாறுபடுவதில்லை. ஆனால் ஒவ்வொரு ஜோடி புது நிரந்தரப்பற்களும் முளைப்பதில் சில மாதங்கள் வித்தியாசம் இருக்கலாம். ஆகவே, ஒரு மாட்டின் வயதை சில மாதங்கள் வித்தியாசத்தில் கூற முடியும். பொதுவாக ஆறு மாதங்கள் வித்தியாசப்படலாம்.
பிறந்த கன்றுகளில் ஒன்று அல்லது இரண்டு ஜோடி தற்காலிக முன் வெட்டுப்பற்கள் கீழ்தாடைகளில் மட்டும் காணப்படுகின்றன. ஒன்று அல்லது இரண்டு மாத வயதிற்குள், நான்கு ஜோடி முன் பற்களும் தோன்றி விடுகின்றன. ஒரு வருட வயதில் கீழ்த்தாடையில் உள்ள தற்காலிக வெட்டும் பற்களில் அதிக தேய்மானம் காணப்படும். தற்காலிக பால்பற்கள் உளி போன்ற தோற்றமுடையதாய், சிறியதாய், இளவயது மாடுகளின் சிறிய தாடைக்கு அடக்கமாய் இருக்கும்.
தற்காலிக பால்பற்கள் இரண்டரை வயதில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். தற்காலிக பால்பற்கள் விழும்பொழுது ஜோடி ஜோடியாய் ஒரு வருட இடைவெளியில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும.; மாடுகளில் நிரந்தர முன்வெட்டுப்பற்கள் 2, 4, 6, 8, என்று இருந்தால் அவற்றின் வயது முறையே 2 ½, 3 ½, 4½ , மற்றும் 5 வயதிற்கு மேல் எனத் தெரிந்து கொள்ளலாம். மொத்த நிரந்தரப் பற்களும் முளைத்து விட்ட மாடுகளில் பற்களின் தேய்வைக் கொண்டு வயது ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது.
ஆறு வருட வயதில் நடுவில் உள்ள முதல் ஜோடி நிரந்தர முன்பற்கள் தேய்ந்து மற்ற முன் வெட்டுப்பற்களை விடக் குறைவான உயரத்துடன் காணப்படும். இது போன்று ஒவ்வொரு ஜோடியாகத் தேய்ந்து கொண்டு போக 10 -12 ஆகும் பொழுது எல்லா முன் பற்களுமே அதிகமாகத் தேய்ந்த நிலையில் காணப்படும். மாடுகளில் 12 வருட வயதானவற்றை வயதில் முதிர்ச்சி அடைந்தவை என்று பொதுவாகக் குறிப்பிடுகிறோம். மாடுகள் வயதாகி விட்டால் ஒரு சில பற்கள் அல்லது அனைத்துப் பற்களும் உதிர்ந்து விடும். பொதுவாக 3 வயதில் கொம்பின் அடிப்பாகத்தில் வட்டமாகக் கொம்பைச் சுற்றி ஒரு வளையம் தோன்றும். பிறகு வருடத்திற்கு ஒரு வளையம் வீதம் தோன்றும். கொம்புகளைச் சீவி விட்டால் பின் வயதைக் கணக்கிடுவது கடினம்.