தொற்று நோய் என்பது ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவி அதிக அளவு பொருளாதார இழப்பு மற்றும் இறப்;பினை ஏற்படுத்தும் நோயாகும். தொற்று நோய் வெவ்வேறு வகையான கிருமிகளால் ஏற்படுகிறது. தோற்று நோய் என்பது எல்லா வித தட்பவெப்பநிலைகளிலும், அனைத்துக் காலங்களிலும், வயது வித்தியாசமில்லாமல் அனைத்து மாடுகளையும் கன்றுகளையும் பாதிக்கக்கூடியது. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை அதன் அறிகுறிகளிலிருந்து மாடுகளை வளர்ப்பவர்கள் எளிதில் கண்டறிந்து கொள்ள முடியும். அவ்வாறு தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை கண்டறிந்து கால்நடை மருத்துவரின் உதவியுடன் தகுந்த சிகிச்சையை விரைவில் மேற்கொள்வதன் மூலம் தொற்று நோயால் ஏற்படும் பொருளாதார இழப்பிலிருந்து மாடுகளைக் காப்பாற்றி விட முடியும்.
தொற்று நோய்க்கான அறிகுறிகள்:
நோயுற்ற கன்றுகள் மற்றும் மாடுகளில் அதிக அளவு காய்ச்சல் இருக்கும். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கன்றுகள் மற்றும் மாடுகள் மற்றும் மிகவும் சோர்ந்து, ரோமம் சிலிர்த்துக் காணப்படும். அசை போடாது, தீவனம் எடுக்காது. கறவை மாடுகளில் பால் வெகுவாகக் குறைந்து விடும். கண்கள் சிவந்து, கண்களிலிருந்து நீர் வடியும். சில சமயம் மூச்சுத் திணறல் ஏற்படும். மூக்கு வறண்டு, சில சமயம் வெடிப்பும் ஏற்படும். மூக்கு, வாய் போன்றவற்றில் நீர் வடியும். சில சமயம் துர்நாற்றத்துடன் சளி வடியும். சாணம் இறுகிக் கட்டியாகவோ அல்லது இளகிக் கழிச்சலாகவோ வெளிவரும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். அதிக எண்ணிக்கையிலான மாடுகள் ஒரே சமயத்தில் பாதிக்கப்படும்.
பொதுவான நோய்த் தடுப்பு முறைகள்:
கறவை மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். நோய் எதிர்ப்புத் திறன் அதிகமுள்ள மாடுகள் மற்றும் கன்றுகள் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. இதற்கு மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் தவறாமல் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய காலத்தில், தக்க நோய்த் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கன்றுகளுக்கும் மாடுகளுக்கும் தகுந்த இடைவெளியில் குடற்புழு நீக்க மருந்துகள் கொடுப்பதால் கன்றுகள் மற்றும் மாடுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதால் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் குறையும். தரமான நச்சுத் தன்மையற்ற தீவனம், போதுமான இடவசதியுடன் கூடிய சுகாதாரமான கொட்டகை, மோசமான தட்பவெப்பநிலைகளிலிருந்து பாதுகாப்பு போன்றவற்றை அளிக்க வேண்டும். கன்றுகளுக்கு சீம்பால் கொடுக்க வேண்டும். இதனால், இளங்கன்றுகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கிறது.
சத்துப்பற்றாக்குறையால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாடுகளுக்கு அதன் உடல் நலத்திற்கும், உற்பத்திக்கும் போதுமான சத்தான தீவனம் அளிக்கப்பட வேண்டும். நோய்க்கிருமிகள் மற்ற பண்ணைகளிலிருந்தும் வர வாய்ப்பிருக்கிறது. உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்கள் மூலம் கிருமிகள் பண்ணைக்குள் வரக்கூடும். நோயுற்ற பசுக்களை வாங்கி பண்ணைக்குள் விடுவது, பார்வையாளர்களைக் கட்டுப்பாடில்லாமல் அனுமதிப்பது, பறவைகள், எலி, பூனை போன்ற விலங்கினங்கள் பண்ணைக்குள் புகுந்து நோய்க் கிருமிகளைப் பரப்ப வாய்ப்புள்ளது.
பண்ணையில் பயன்படுத்தப்படும் உயிரற்ற பொருட்கள், உதாரணமாக லாரிகள் போன்ற வண்டிகள், தீவன மூட்டை, வாளி போன்ற பொருட்கள் மூலமாகக் கிருமிகள் பண்ணைக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. பண்ணையின் பொதுச் சுகாதாரம் சரியாகப் பராமரிக்கப்பட வில்லையெனில் நோய்கள் பரவும். அதே சமயத்தில் கிருமி நாசினி மருந்து கொண்டு தினமும் தொழுவத்தையும், சுற்றுப் புறத்தையும் சுத்தம் செய்தால் இக்கிருமிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.
கிருமிநாசினி மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தரை, மாடு நிற்கும் இடம் போன்றவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் கிருமி நாசினி மருந்தின் முழுப் பயனையும் பெற முடியாது. கிருமி நாசினி மருந்துகளில் பீனால், லைசால், பொட்டாசியம் பெர்மாங்கனேட், பார்மலின், சுண்ணாம்புத் தூள், ப்ளீச்சிங் பவுடர், சேவ்லான் போன்றவை முக்கியமானதாகும்.
அடுத்துப் பண்ணைக்குள் நுழையும் வாயிலில் கிருமி நாசினி மருந்து கலந்த தண்ணீரில் பண்ணைக்குள் நுழையும் அனைவரும் பாதங்களை நனைத்துப் பின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். வாகனங்களைப் பண்ணைக்கு வெளியே நிறுத்தி விடுவது நல்லது. இவ்வாறு செய்வதால் நோய்க்கிருமிகள் பண்ணைக்குள் வருவதைத் தடுக்கலாம். தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறையாவது தண்ணீர் தொட்டிக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும். சாணத்தை 300 அடிக்கு அப்பால் எடுத்துச் சென்று உரக்குழியில் கொட்டுதல் அவசியம்.
பால் கறக்கும் போது பால் தரையில் சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்த நேர்ந்தால் உடனே கழுவி விட வேண்டும். இல்லையேல் ஈ மொய்த்து நோய் பரவ வாய்ப்புண்டு. அதே போல் பால் கறக்கும் போது மடியை நன்கு கழுவுதல் மிகவும் அவசியம். பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது நல்லது. பால் கறக்கும் நபர் கைகளைக் கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்த பிறகே பால் கறக்க வேண்டும்.
பால் கறக்கும் இயந்திரம் பயன்படுத்தும் போது கறவை முடிந்தவுடன் பால் இயந்திரத்தின் இரப்பர் பாகம் அனைத்தையும் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பால் காம்பைக் கறக்கும் முன்பும் கறந்த பின்பும் 0.5 சதவிகிதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமி நாசினி கலவை கொண்டு கழுவ வேண்டும். தீவனக் கிடங்கிற்குள் எலி நுழையாமல் இருக்க வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
நோயுற்ற பசுக்களைப் பிரித்துத் தனியாகப் பராமரிக்க வேண்டும். புதிதாக மாடுகளை வாங்கும் போது இரத்தப் பரிசோதனை செய்தும் கால்நடை மருத்துவர் கொண்டு பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. புதிதாக வாங்கிய மாடுகளைக் குறைந்தது 15 நாட்களுக்குத் தனியாக வைத்துப் பராமரித்து நோய் இல்லையென முடிவு செய்த பின்பு மற்ற மாடுகளோடு சேர்த்து வளர்க்கலாம். முடிந்தவரை பண்ணையிலுள்ள மாடுகள் வெளியில் சென்று மேய்வதையும், மற்ற மாடுகளோடு கலப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். அதே போல் வெளி மாடுகளையும் பண்ணைக்குள் நுழைய விடக் கூடாது. மாடுகள் நோயுற்றால் உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகித் தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.