விவசாயிகள் பால் பண்ணைத் தொழிலில் அதிக இலாபம் பெற ஒரு மாட்டிலிருந்து வருடம் ஒரு கன்று பெற வேண்டும். அதற்கு மாடுகளை வளர்ப்போர் மாடுகளின் சினைப் பருவகால அறிகுறிகளைக் கண்டறிந்து, சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளுக்கு தகுந்த சமயத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் செய்தல் மிகவும் இன்றியமையாததாகும்.
சினைப்பருவ அறிகுறிகள்
பருவமடைந்த கிடேரிகள் மற்றும் பசுக்கள் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப் பருவ அறிகுறிகளைக் காட்டும். சினைப்பருவத்திலிருக்கும் மாடுகள் அமைதியின்றிக் காணப்படும். அடிக்கடி அடிவயிற்றை எக்கி கத்திக் கொண்டே இருக்கும். அருகிலுள்ள மாடுகள் மேல் தாவுவதோடு காளைகளோ அல்லது மற்ற மாடுகளோ தன் மீது தாவுவதற்கு அனுமதிக்கும்;. குறைந்த அளவு தீவனத்தை உட்கொள்ளும். அடிக்கடி சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும். வாலை ஒதுக்கிக்கொண்டு நிற்கும். பசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்தும் வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும். கண்ணாடி போன்ற திரவம் பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வழிந்து தொங்கிக் கொண்டு இருக்கும். கறவையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு இரண்டு மூன்று நாட்களுக்குக் குறையும்.
கருவூட்டல் செய்ய சிறந்த நேரம்
மாடுகளில் சினைப்பருவ காலம் சுமார்; 24 மணி நேரம் வரை நீடிக்கிறது. இந்தப் பருவத்தை முன் சினைத் தருணம், மையசினைத் தருணம் மற்றும் பின் சினைத் தருணம் என மூன்று காலங்களாகப் பிரிக்கலாம். அதிகமான பசுக்களுக்கு சினைபிடிப்பது மையச் சினைப்பருவத்தில் தான். ஏனென்றால் பருவம் ஆரம்பித்து 8 முதல் 10 மணி நேரத்தில் தான் சூலகத்திலிருந்து கருமுட்டை வெளிப்படுகிறது. அதனால் காலையில் சினைப்பருவத்திற்கு வரும் மாடுகளை மாலையிலும், மாலையில் சினைப்பருவத்திற்கு வரும் மாடுகளை அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்யும் பொழுது சினைப்படும் விகிதம் அதிகமாகும். காலம் தாழ்த்தி கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பு விகிதம் குறைந்து விடும்.
கருவூட்டல் செய்தல்
சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளை பொலிகாளைகளைக் கொண்டு இனச் சேர்க்கை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பொலிகாளைக்கு நோய் இருந்தால் மாட்டிற்கு கர்ப்பப்பை நோய் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளுக்கு செயற்கை முறைக் கருவூட்டல் செய்வது தான் சிறந்த முறையாகும். கருவூட்டல் செய்வதற்கு முன் சினைப்பருவத்திலிருக்கும் மாடுகளைக் குளிக்க வைப்பதன் மூலம் உடல் சூடு தணிவதால் சினைப் பிடிப்புத் திறன் அதிகரிக்கும். தூரத்திலிருந்து சினை ஊசி போடுவதற்காக மாடுகளை ஓட்டிச் செல்லும் பொழுது கட்டுப்படாமல் சண்டித்தனம் செய்யும் அடிக்கக்கூடாது. கருவூட்டல் செய்யும் இடத்திற்குச் சென்ற பின் மாடுகளை 15 நிமிடங்களாவது மரத்தடியில் கட்டிப்போட்டு இளைப்பாற விட்டு உடல் சூடு தணிந்த பின் செயற்கை முறை கருவூட்டல் செய்ய வேண்டும். பிறகு மாடுகளை சிறிது நேரம் மரநிழலில் நிமிடங்கள் கட்டிப்போட்ட பின் அழைத்துச் செல்ல வேண்டும்.
இன்றும் சில கிராம மக்கள் சினை ஊசி போட்ட அன்று மாடுகளுக்கு தண்ணீர் தீவனம் கொடுக்காமல் பட்டினி போட்டும் கீழே படுக்க விடாமல் மாடுகளின் மூக்கணாங் கயிற்றை ஒட்டக் கட்டிப்போட்டோ அல்லது வாலை உயர்த்திக் கட்டிப்போட்டோ வைத்தால் தான் போட்ட சினை ஊசி கர்ப்பப்பையிலிருந்து வெளியே வராமல் இருக்கும் என்ற தவறான கருத்தைக் கொண்டு மாடுகளை சித்திரவதை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாடுகளின் உடலில் அயற்சி ஏற்பட்டு மாடுகள் சினைப்பிடிக்காமல் போகின்றன. அதனால் செயற்கை முறை கருவூட்டல் செய்த பின் மாடுகளுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து விட்டு பிறகு போதுமான அளவு கலப்புத்தீவனம், காய்ந்த தீவனம் மற்றும் பசுந்தீவனங்களை கொடுத்து மாடுகள் எப்பொழுதும் போல் தரையில் படுக்கவும் எழுந்திருக்கவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாடுகளின் உடம்பில் அயற்சி இல்லாமல் சினைப் பிடிக்கும் விகிதம் அதிகரிக்கும்.
கருவூட்டல் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்
- சினைப்பருவக் காலத்தில் வழியும் கண்ணாடி போன்ற திரவத்தில் பால் போன்றோ அல்லது சீழ் கலந்தோ காணப்பட்டால் மாடுகளில் கர்ப்பப்பை நோய் இருப்பதற்கான அறிகுறிகளாகும். இச்சமயத்தில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கர்ப்பப்பை நோய்க்கான தகுந்த சிகிச்சையை மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.
- கிடேரிகள் சினைப்பருவத்தை அடைந்த உடனேயே செயற்கை முறைக் கருவூட்டல் செய்யக் கூடாது. ஏனெனில் முதல் சினைப் பருவத்தில் கிடேரிகள் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டினாலும் கர்ப்பப்பை வளர்ச்சி இருக்காது. அதனால் கிடேரிகளின் கர்ப்பப்பை நன்கு வளர்ச்சி பெற சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டதிலிருந்து இரண்டு பருவங்கள் வரை தினமும் 50 கிராம் கொண்டைக்கடலையை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் கொடுக்க வேண்டும். மேலும் தாது உப்புக்கலவையை ஒரு நாளைக்கு 30 கிராம் வீதம் தினமும் தீவனத்தில் கலந்து தர வேண்டும்.
- ஒரு சில சினை மாடுகளில் பிறப்புறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவம் வடியும். பரிசோதிக்காமல் காளை மாடுகளைக் கொண்டு இனச்சேர்க்கை செய்தாலோ அல்லது செயற்கை முறைக் கருவூட்டல் செய்தாலோ சினை மாடுகளில் கர்ப்பம் சிதைந்து விடும். இம்மாதிரியான தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க கால்நடை மருத்துவர் கொண்டு கர்ப்பப்பையை நன்கு பரிசோதிக்க வேண்டும்.
- மாடுகள் சாதாரணமாக 21 நாட்களுக்கு ஒரு முறையே சினைத் தருணத்திற்கு வரும். 21 நாட்களுக்குள் பல முறை சினைத் தருணத்தை அடைந்தால் அது சூலகத்தில் கட்டிகள் உள்ளதற்கான அறிகுறிகள். அதற்கு கால்நடை மருத்துவர் கொண்டு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
- கன்று ஈன்ற மாடுகள் பொதுவாக கன்று ஈன்ற நாளிலிருந்து 45 நாட்களில் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டும் அந்தப் பருவத்தை விட்டு விட்டு அதற்கு அடுத்த சினைப்பருவத்தில் செயற்கை முறை கருவூட்டல் செய்தால் சினைப் பிடிப்பு விகிதம் அதிகரிக்கும்.
- மாடுகளுக்கு தினமும் 30 கிராம் என்ற அளவில் தாது உப்புக் கலவையை கலப்புத் தீவனத்தில் கலந்து கொடுப்பதன் மூலம் சினைப்பிடிக்கும் விகிதத்தை அதிகரிக்கலாம்.