மாடுகளில் சினைப்பரிசோதனை மற்றும் சினைக்காலப் பராமரிப்பு

மாடுகளில் சினைப்பரிசோதனை மற்றும் சினைக்காலப் பராமரிப்பு

சினைப்பரிசோதனை

மாடுகளில் கருவூட்டல் செய்த பின் 21 நாட்களுக்குள் சினைத்தருண அறிகுறிகள் மறுபடியும் தோன்றுகின்றா என்பதைக் கவனமாகக் கண்காணித்து வர வேண்டும். அடுத்த 21 நாட்களில் சினைத் தருண அறிகுறிகள் தோன்றினால், கால்நடை மருத்துவரிடம் காண்பித்து மீண்டும் செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய வேண்;டும். சினைத்தருண அறிகுறிகள் தோன்றவில்லை எனில் 3 மாதம் கழித்து கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சினைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் செயற்கை முறை கருவூட்டல் செய்த பின் எல்லா மாடுகளும் சினைப் பிடித்து விடுவதில்லை. செயற்கை முறைக் கருவூட்டல் செய்த மாடுகள் மற்றும் கிடேரிகளில் 40 முதல் 60 சதவீதம் மட்டுமே சினை பிடிக்க வாய்ப்புள்ளது. சினைப் பரிசோதனை மூலம் சினை பிடிக்காத மாடுகளைக் கண்டறிந்து உடனே மறு படி சினை ஊசி போட முடியும். பிரச்சினை ஏதேனும் இருந்தால் தேவையான சிகிச்சையை உடனே கொடுக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் மாடுகள் நிரந்தமான மலட்டுத் தன்மையாவதைத் தடுக்க முடிகிறது.

மேலும் சினை மாடுகளைக் கண்டறிந்து அவ்றைத் தனியாகப் பிரித்து தகுந்த பராமரிப்பும் கொடுக்க முடிகிறது. மாடுகள் வளர்ப்போர் சினை பிடித்து விட்டது என்ற நம்பிக்கையில் 7, 8 மாதம் வரை சினைப்பரிசோதனை செய்யாமல் விட்டு விட்டு பிறகு சினைப்பரிசோதனை செய்து சினை இல்லை என்றான பின் வருத்தப்படுவதில் எந்த வித உபயோகமில்லை. செயற்கை முறைக் கருவூட்டல் செய்த 3 மாதத்திலேயே சினைப் பரிசோதனை செய்திருந்தால் 4 – 5 மாதங்கள் வீணாவதைத் தவிர்த்திருக்கலாம்.

இதனால் மாடுகள் சினைப்பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதினால் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுகப் பொருளாதார இழப்பைத் தடுத்திருக்க முடியும். அதனால் செயற்கை முறைக் கருவூட்டல் செய்த பின் தக்க சமயத்தில் சினைப் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியமானதாகும்.

சினைக்காலப் பராமரிப்பு

நல்ல கன்றுகளை பெறுவதற்கும் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் சினையாக இருக்கும் கறவை மாடுகளைச் சிறப்புக் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். குறிப்பாகச் சினைக்காலத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிகக் கவனம் தேவை. தொடக்கக் காலத்தில் பராமரிப்பில் தவறுகள் ஏற்பட நேர்ந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இறுதி மாதங்களில் கரு வளர்ச்சி மிக வேகமாக நடைபெறுவதால் சத்துத் தேவைகள் அதிகரிக்கின்றன. அதைச் சமாளிக்க தாயின் உடலில் சக்தி தேவை.

மேலும் பால் உற்பத்திக்கும் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ந்து விட்ட கருவினால் வயிறு பெரிதாகும் பொழுது தாய் தன் எல்லாச் செயல்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறது. ஆகவே மந்தையிலுள்ள மற்ற மாடுகளுடன் போட்டியிட்டுக் கொண்டு தீவனம் உட்கொள்வதும், மேய்ச்சல் இடங்களில் வேகத்துடன் தேவையான பசுந்தீவனத்தை உட்கொள்வதும் தடைப்படுகின்றன.

ஆகவே சினைக்காலங்களில் மாடுகளைச் சரியான முறையில் கவனித்துப் பராமரித்தால் தான் கன்று வீசுதல், குறைமாதக் கன்றை ஈனுதல், பால் உற்பத்திக் குறைதல் போன்ற விளைவுகள் இல்லாமல் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும் நல்ல பால் உற்பத்தியையும் பெறமுடியும்.

சினை மாடுகளில் முக்கிய பராமரிப்பு உத்திகள்

சினை ஊசி போட்ட பசுக்களில் 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனை செய்து சினையை உறுதி செய்து தோராயமாக எப்பொழுது கன்று ஈனும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் இரு மாதச் சினைக்காலததில் குடற்புழு நீக்க மருந்து கொடுக்காமல் இருக்க வேண்டும்.

சினை மாடுகளை நல்ல சுத்தமான மற்றும் காற்றோட்ட வசதியுள்ள இடத்தில் பராமரிப்பது அவசியம். கொட்டகைகளின் தரை வழுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மந்தையிலுள்ள மற்றக் கால்நடைகளோடு சினை மாடுகள் சண்டையிடுவதும், மற்ற மாடுகள் சினை மாடுகளை முட்டித்தள்ள முயற்சிப்பதையும் அனுமதிக்கக்கூடாது. நோய்வாய்ப்பட்ட மற்ற மாடுகளோடு சினை மாடுகளைக் கட்டி வைக்கக் கூடாது.

கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொடுக்க வேண்டியுள்ளதாலும் பால் உற்பத்திக்குத் தேவையான சத்துக்களை தன்னுடைய உடம்பில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதாலும், சினைமாட்டிற்கு சத்தான மற்றும் போதுமான அளவு சரிவிகிதத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். கன்றின் வளர்ச்சி தாயின் கருவறையில் இருக்கும் பொழுதே தொடங்குவதால், ஆரோக்கியமான கன்றினைப் பெறுவதற்கு சிறந்த தீவன மேலாண்மை இன்றியமையாததாகும்.

சினை மாடுகளுக்கு முக்கியமாக கடைசி மூன்று மாதங்களுக்கு போதுமான தீவனம் அளிப்பது அவசியமாகும். ஏனெனில் சினைக்காலத்தில், ஏழாவது மாதத்தில் கன்றின் வளர்ச்சி துரிதமடைவதால் கன்றின் வளர்ச்சிக்கும், கறவை காலத்திற்குத் தேவைப்படும் சத்துப் பொருட்களின் தேவைக்கும், தாயின் தீவனத் தேவையும் அதரிகரிக்கிறது.

மேலும் இது முந்தைய கறவையில் இழந்த உடல் திசுக்களை புதுப்பித்துக் கொள்ள உதவுவதோடு கிடேரிகளில் எலும்பு வளர்ச்சி மாற்றத்திற்கும் இது மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு சினைக்காலத்தில் சரி வர தீவனம் கொடுக்கவில்லையென்றால் கன்று வீசுதல் மற்றும் குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல் ஏற்பட வாய்ப்புண்டு. நஞ்சுக் கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித் தள்ளுதல், பால் காய்ச்சல் நோய் ஏற்படுதல் மற்றும் பால் உற்பத்தி குறையும்.

ஆகவே, சினை மாட்டிற்கு ஏழு மாத சினைக்கு மேல் நாளொன்றுக்கு 2 கிலோ அடர் தீவனமும், 15 முதல் 20 கிலோ பசுந்தீவனமும், 5 கிலோ உலர் தீவனமும், 30 கிராம் தாதுஉப்புக் கலவையும் தினமும் கொடுக்கவேண்டும். மேலும் சினைக் காலங்களில் மாடுகளுக்கு எளிதாகச் செரிக்கக்கூடிய சத்துக்கள் நிறைந்த சரிவிகித தீவனம் கொடுக்க வெண்டும்.

கன்று ஈனுவதற்கு கடைசி 10 நாட்களில் கொடுக்கும் தீவனம் மலமிளக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 1 ½ கிலோ தவிடு கொடுக்கலாம். குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுப்பது நல்லது. மேலும் 450 கிராம் எப்ஸம் உப்பு, ஒருதேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுத்தால் கன்று ஈனும் பொழுது எளிதாக இருக்கும். குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் தேவையான அளவு (40-45 லிட்டர்) கொடுக்க வேண்டும்.

சினைமாடுகளை அடித்துத் துன்புறுத்துவது, மிரட்டுவது, அதிக தூரம் நடக்கவைப்பது கூடாது. சினை மாடுகள் விரட்டப்படுவதும், பயமுறுத்தப்படுவதும், மேடு பள்ளம் நிறைந்த பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புதலும் தவிர்க்கப்படல் வேண்டும். சினை மாடுகளை மேய்ச்சலுக்கு மேடு பள்ளத்தில் அனுப்பினால் கர்ப்பப்பை சுழற்சி ஏற்படும். ஏழாவது மாத சினை முடிந்தவுடன் சினைப் பசுவைத் தனியாக பிரித்து கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும். குறிப்பாக நாய்களை சினைமாடுகள் பக்கத்தில் அண்டவிடக் கூடாது.

கறவையிலிருக்கும் சினை மாடுகள் கன்று ஈனுவதற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் பால் கறத்தலை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் அடுத்த கறவையில் கறவைத் திறன் பாதிக்காமல், பாலின் அளவு கூடுதலாகக் கிடைக்கும். சினைக் காலத்தில் ஏழு மாதம் முதல் பாலின் அளவைப் பொறுத்து 1 முதல் 2 வாரத்தில் படிப்படியாகக் கறவையைக்; குறைக்க வேண்டும்.

அதாவது 5 முதல் 7 நாட்களுக்கு இரு வேளைகள் கறக்கும் மாடுகளை ஒரு வேளை மட்டும் கறக்க வேண்டும். அதன் பின் ஒரு வேளைக் கறவையையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கறப்பதன் மூலம் முற்றிலுமாக நிறுத்தி விடாம். ஒரே நாளில் கறவையை நிறுத்தினால் மடி நோய் வந்து அடுத்த கறவையைப் பாதித்து விடக் கூடும். பால் வற்றிய சினைமாட்டின் காம்புகளின் வழியே “ஆன்டிபயாடிக்”; எனப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தை கால்நடை மருத்துவர் ஆலோசனையின் படி செலுத்தினால் மடி வீக்க நோயை கட்டுப்படுத்தலாம்.

சினைமாடுகள் சில சமயங்களில் சினைப்பருவ அறிகுறிகளைக் காண்பிக்கும். இந்தச் சினை அறிகுறிகளினால் கருவிற்கு எந்த வித ஆபத்தும் இல்லை. ஆயினும் சினைக்காலத்தில் 3 மாத இடைவெளியில் மீண்டும் இரண்டாவது முறையாகச் சினைப் பரிசோதனை செய்து மாடுகள் சினையாக உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். சினை மாடுகளை காலைப் பொழுதில் மட்டும் 4 மணி நேரம் சமமான மேய்ச்சல் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது எளிய உடற்பயிற்சியாக இருக்கும்.

தனியாக கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை. அதிக வெப்பம், அதிக குளிர் இவைகளிலிருந்து சினை மாடுகள் காக்கப்பட வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் மாட்டின் எடை 60 முதல் 80 கிலோ எடை கூடி விலா எலும்புகள் தெரியா வண்ணம் இருக்க வேண்டும். தேவையான அளவு தரமான குடிநீரும், வெப்பம் மற்றும் குளிர் தாக்குதலிலிருந்து நல்ல பாதுகாப்பும் தரப்பட வேண்டும்.

செயற்கை முறைக் கருவூட்டல் செய்த நாளுடன் 280 நாளை;க கூட்டியோ அல்லது அட்டவணையைக் கொண்டோ தோராயமாக கன்று ஈனும் நாளைக் கண்டறிய வேண்டும். கன்று ஈனும் காலம் நெருங்கும் பொழுது சினை மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து பிரித்து தனியாகத் தூய்மையான காற்றோட்டமான, நல்ல வைக்கோல் பரப்பப்பட்ட கொட்டகையில் கட்ட வேண்டும். தரையில் வைக்கோலைப் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்