மாடுகளில் கூர்மையான அயல்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள்

கூர்மையான இரும்பு ஆணி, கட்டுக்கம்பி, ஊசி, மரக்குச்சி போன்ற அயல்பொருட்கள் சோளத்தட்டை, வைக்கோல், புல், தவிடு, பிண்ணாக்கு, பொட்டு போன்ற தீவனப் பொருட்களின் வாயிலாக மாடுகளின் வயிற்றுக்குள் சென்று சீரண உறுப்புகள், உதரவிதானம், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதிப்பதால் மாடுகளில் பால் உற்பத்தி அதிக அளவில் குறைவதுடன் பல சமயங்களில் இறப்பை உண்டாக்கி விடுவதால் மாடுகள் வளர்ப்போருக்கு பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே மாடுகளை வளர்ப்போர் கூர்மையான அயல் பொருட்களால் மாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிந்து தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாடுகளை கூர்மையான அயல்பொருட்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

மாடுகளில் கூர்மையான அயல்பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்:
மாடுகளில் கூர்மையான அயல் பொருட்கள் தங்கும் இடத்தைப் பொறுத்து பாதிப்புகள் வேறுபடும். சில நேரங்களில் விழுங்கப்பட்ட கூர்மையான பொருட்கள் தொண்டையில் சென்று அடைப்பை ஏற்படுத்தும் பொழுது தீவனம் சாப்பிடுவதை பாதிக்கும் பெரும்பாலும் கூர்மையான அயல்பொருட்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும். வயிற்றுக்குள் சென்ற கூர்மையான பொருட்கள் வயிற்றின் சுவரைக் குத்தும் பொழுது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் சீழ்க்கட்டி உண்டாகி பிறகு கட்டி உடைந்து சீழ் வரும் பொழுது கூர்மையான பொருட்களும் கூடவே வெளியேற்றப்படுகிறது.

சில சமயங்களில் கூர்மையான பொருட்கள் வயிற்றின் சுவற்றைக் குத்தி பாதிப்பை ஏற்படுத்தி விட்டு உடல் உறுப்புகளை ஒட்டினாற்போல் இருக்கும் மெல்லிய சவ்வான பெரிட்டோனியம் எனப்படும் உடல் உறுப்பு உறையை பாதித்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மாடுகளுக்கு பயங்கரமான வயிற்று வலி ஏற்படும். இரைப்பை, குடல் சுருங்கி விரியும் தன்மையை இழந்து விடும்.

சாதாரணமாகக் கூர்மையான பொருடகள்  உடம்பின் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகாதவாறு கூர்மையான பொருட்களைச் சுற்றி தசைகள் கெட்டியாகி விடும். சினை மாடுகளின் வயிற்றில் வளரும் கன்று அடி வயிற்றை நோக்கி நகரும் பொழுதும், கன்று ஈனும் நேரத்தில் மாடுகள் அதிகமாக முக்கும் பொழுதும், மாடுகள் ஏற்ற இறக்கத்தில் நடக்கும் பொழுதும், வெகுதூரம் நடத்திச் செல்லப்படும் பொழுதும், வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் தசைகள் அசைவதால் கூர்மையான பொருட்கள் பழைய நிலையிலிருந்து இடம் மாறும் பொழுது உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு இடம் பெயரும் கூர்மையான பொருட்கள் உதரவிதானத்தைக் குத்திக் கிழித்து மார்புக் கூட்டுக்குள் நுழைந்து இதயத்தையும் குத்தி இதயம் செயல்படுவதைப் பாதிக்கும். வலது பக்கம் முன்னோக்கிப் பாயும் பொழுது நுரையீரலைப் பாதிக்கும். இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டால் மாடுகளைக் காப்பாற்ற முடியாது. சில சமயங்களில் கூர்மையான பொருடகள்; வயிற்றுக்குச் செல்லும் பெரிய இரத்தக் குழாய்களைச் சேதப்படுத்தி அதிக அளவில் இரத்த விரயத்தை ஏற்படுத்தித் திடீர் இறப்பை ஏற்படுத்தும்.

கூர்மையான அயல் பொருட்களால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகள் :
அயல் பொருட்கள் தொண்டையில் அடைப்பு உண்டாக்கும் பொழுது தீவனம் எதையும் விழுங்க முடியாமல் மாடுகள் சிரமப்படும். வாயிலிருந்து நிறைய உமிழ்நீர் சுரக்கும். கூர்மையான பொருட்கள் வயிற்றுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது மாடுகளில் தீவனம் உண்ணும் அளவு குறையும் அல்லது சுத்தமாக உண்ணாது. அறவே பால் கறக்காது. மாடுகள் வயிற்று வலியால் அவதிப்படும். நடக்காது. அப்படியே நடந்தாலும் மெதுவாகக் கவனத்துடன் நடக்கும்.

மேட்டுப் பகுதியிலிருந்து சரிவான பள்ளப்பகுதிக்கு நடக்கும் பொழுது வலியால் திணறும். மணிக்கணக்காக நீண்ட நேரம் நிற்கும். படுக்காது. சில மாடுகள் எழ முடியாமல் பெரும்பாலும் படுத்துக் கொண்டே இருக்கும். அசை போடாது. லேசான வயிறு உப்புசம் இருக்கும். முதுகை வளைத்து நிற்கும். சிறுநீர் கழிக்கும் பொழுது திணறும். சிறிதளவு சாணம் கட்டியாகப் போடும். மாடுகள் வயிற்று வலியால் வயிற்றை உதைத்துக் கொள்ளும். லேசான காய்ச்சல் இருக்கும். நுரையீரல் பாதிப்பு இருந்தால் மூச்சுத் திணறல் ஏற்படும்.

பராமரிப்பு முறைகள்:
கூர்மையான அயல் பொருட்களால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டவுடன் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை முறைகளையும், பராமரிப்பு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். தொண்டையில் அடைப்பை ஏற்படுத்தியிருந்தால் கால்நடை மருத்துவர் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கூர்மையான பொருட்களை அகற்ற வேண்டும். நாமே கூர்மையான பொருட்களை வயிற்றுக்குள் தள்ளி விடலாம் என்று எவ்வகையிலும் முயற்சி செய்யக்கூடாது.

வயிற்றுக்குள் கூர்மையான பொருட்கள் சென்ற அறிகுறிகள் தென்பட்டால் மாடுகளை ஒரே இடத்தில் கட்டி வைக்க வேண்டும். மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. சோளத்தட்டு, வைக்கோலைக் குறைத்துக் கொடுக்க வேண்டும். கட்டுத் தறி முன்பகுதி உயரமாகவும், பின்பகுதி தாழ்வாகவும் இருக்குமாறு அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு மூன்று நாட்கள் சிகிச்சை செய்யலாம். முன்னேற்றம் இல்லையென்றால் அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த முடியும்.

தடுப்பு முறைகள்:
கொட்டகையில் கண்ட இடங்களில் கம்பிகளைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மாடுகள் மேயும் புல்வெளிகளில் கம்பிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாடுகளுக்குத் தண்ணீரில் அடர்தீவனம் கலந்து கொடுக்கும் பொழுது நன்றாக கையை விட்டுத் தொட்டியின் அடிப்பகுதியைச் சோதனை செய்து கூர்மையான பொருட்கள் இல்லையென்பதை ஊர்ஜிதம் செய்த பிறகு கொடுக்க வேண்டும். ஒரு கையகல காந்தத்தை தீவனத்தொட்டியில் போட்டு வைத்தால் இரும்பாலான பொருட்களை காந்தமானது ஈர்த்துக் கொள்வதால் மாடுகள் கூர்மையான இரும்புப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்