மாடுகளில் அதிக பால் உற்பத்திக்குத் தீவன மேலாண்மை முறைகள்

கறவை மாடு வளர்ப்புத் தொழிலானது கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கறவை மாடுகளில் உடல் வளர்ச்சிக்கும், பால் உற்பத்தி அதிகமாவதற்கும், நல்ல சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டுவதற்கும், விரைவில் சினைப்பிடிப்பதற்கும், உடலின் வெப்பம் சீராக இருக்கவும், திசுக்கள் தேய்மானத்தைச் சரிகட்டவும், திசுக்கள் உண்டாக்கப்படவும், உடலின் உயிரோட்டத்திற்கும், கறவை மாடுகளுக்குத் தரக்கூடிய தீவனமாமனது ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் கறவைமாடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து தீவனத்தில் கிடைக்கவில்லையெனில் பால் உற்பத்தி குறைந்து சினைப்பிடிப்பதிலும் பிரச்சினை ஏற்படும்.

மேலும் மாடுகள் எடை குறைந்து மெலிந்து காணப்படுவதுடன் ஊட்டச் சத்துப் பற்றாக்குறை நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கறவை மாட்டுப் பண்ணையில் தகுந்த தீவனப் பராமரிப்பை மேற்கொண்டால் தான் அவற்றின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு தீவனச் செலவைக் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் கறவை மாட்டுப்; பண்ணைப் பராமரிப்புச் செலவில் 70 சதவிகிதம் வரை தீவனத்திற்கெனச் செலவாகிறது. அதனால் கறவை மாட்டுப் பண்ணைத்; தொழிலானது இலாபகரமான தொழிலாக இருக்க வேண்டுமெனில் கறவை மாடுகள் வளர்ப்போர் தீவன மேலாண்மை முறைகள் பற்றித் தெரிந்து கொண்டு பண்ணைகளில் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவன வகைகள்:
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனமானது அடர்த்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் என மூன்று வகைப்படும். அடர் தீவனத்தில் சத்துப் பொருட்களின் அளவு அதிகமாகவும், பசுந்தீவனம், மற்றும் உலர்தீவனத்தில் சத்துப்பொருட்களின் அளவு குறைவாகவும் காணப்படும். மாடுகளுக்கு அடர்தீவனம் மடடும் கொடுப்பதால் தேவையான சத்துப்பொருட்கள் கிடைத்தாலும் வயிறு நிறைவு பெற்ற உணர்வு ஏற்படாது. பசுந்தீவனம், உலர்தீவனம் மட்டும் கொடுப்பதால் வயிறு நிறைவு பெற்ற உணர்வு ஏற்பட்டாலும் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்காது. எனவே நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் பால் அதிகம் பெறுவதற்கும், மாடுகள் நல்ல முறையில் சினைப் பிடிப்பதற்கும் மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் பொழுது அடர்தீவனம், பசுந்தீவனம், உலர்தீவனம்; ஆகியவை தினசரி தீவனத்தில் இடம் பெற வேண்டும்.

அடர்தீவனம்:
நார்ச்சத்து குறைந்தும், செரிமானச் சத்துக்கள் அதிகமாகவும் உள்ள தானியங்கள் (மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, உடைந்த கோதுமை, குருணை அரிசி, பிண்ணாக்கு வகைகள் (கடைப்பிண்ணாக்கு, எள்ளுப்பிண்ணாக்கு, சூரியகாந்திப் பிண்ணாக்கு, சோயா பிண்ணாக்கு, தேங்காய்ப்பிண்ணாக்கு) தவிடு வகைகள் (அரிசித்தவிடு, கோதுமைத்தவிடு) பருப்பு நோய் (உளுந்தம் பருப்பு, பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை) வெல்லப்பாகு, உப்பு, தாது உப்புக் கலவை ஆகியவற்றைத் தேவையான விகிதத்தில் சரியாகக் கலந்து தயாரிக்கப்படும் தீவனம் அடர்தீவனமாகும். இதைக் கலப்புத் தீவனம் எனவும் கூறலாம்.

நாமே நம் ஊர்களில் விலை மலிவாகக் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு நல்ல தரமான அடர்தீவனத்தை தயாரித்தோ அல்லது கடைகளில் கிடைக்கும் அடர்தீவனத்தையோ வாங்கி மாடுகளுக்குத் தரலாம். தானியங்கள் 35 சதவிகிதம், பிண்ணாக்கு 30 சதவிகிதம், தவிடு வகைகள் 15 சதவிகிதம், பருப்பு நொய் 18 சதவிகிதம், தாது உப்புக்கள் 1 சதவிகிதம், உப்பு 1 கிலோ என்ற அளவில் கலந்து நாமே அடர்தீவனம் தயாரிக்கலாம்.

பசுந்தீவனம்:
கினியாப்புல், நேப்பியர் புல், கோ-4, கொழுக்கட்டைப்புல் போன்ற புல் வகைகளும், சூபாபுல், கிளிரிசிடியா போன்ற மரங்களும், கம்பு, சோளம், மக்காச்சோளம், போன்ற தானிய வகை பயிர்களும், குதிரைமசால், வேலிமசால், சிராட்ரோ, சென்ட்ரோ, சனப்பு போன்ற பயறுவகை பயிர்களும் பசுந்தீவனமாகும்.

உலர்தீவனம்:
காய்ந்த வைக்கோல், கம்பந்தட்டை, சோளத்தட்டை, கடலைக்கொடி போன்றவை உலர்தீவனங்களாகும்.

மாடுகளுக்கு தீவனம் அளிக்க வேண்டிய அளவு:

1) பால் உற்பத்திக்கு:
பால் கறக்கும் மாடுகளுக்கு பால் உற்பத்திக்குத் தகுந்தவாறு அடர்தீவனம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு 3 லிட்டர் பால் கறவைக்கு 1 கிலோ அடர்தீவனம் என்ற அளவில் கொடுக்க வேண்டும். உதாரணமாக 12 லிட்டர் பால் கறக்கும் ஒரு மாட்டிற்கு 4 கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். இப்படி கொடுத்தால் தான் கறவை மாடுகள் குறித்த காலத்தில் அதாவது கன்று ஈன்ற 45 முதல் 60 நாட்களுக்குள் சினைப்பருவத்திற்கு வந்து விரைவில் சினைப்பிடிக்கும். பால் கறக்கும் மாட்டிற்கு உலர்ந்த தீவனம் 4 முதல் 5 கிலோ வரையிலும் பசுந்தீவனம் 20 முதல் 25 கிலோ வரையிலும் தர வேண்டும்.

2) சினை மாடுகளுக்கு:
சினை மாடு பால் கறந்து கொண்டிருந்தால் 7 மாதச் சினைக் காலம் வரை பால் உற்பத்திக்குத் தகுந்தவாறு தீவனம் கொடுத்தால் போதுமானது. சினைக்காலமானது ஏழு மாதமாகும் பொழுது பால் கறவையை சிறிது சிறிதாக நிறுத்திய பிறகு கருவில் வளர்கின்ற கன்றின் வளர்க்சிக்காக சினை மாடுகளுக்கு ஏழு மாத சினை முதல் உடல் பாதுகாப்பிற்காகக் கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் 1 முதல் 1.5 கிலோ அடர்தீவனம் அதிகமாகக் கொடுத்தல் வேண்டும். சினை மாடுகளுக்கு உலர்ந்த தீவனம் 4 முதல் 5 கிலோ வரையிலும் பசுந்தீவனம் 15 முதல் 20 கிலோ வரையிலும் தர வேண்டும்.

3) பால் வற்றிய மாடுகளுக்கு:
பால் வற்றிய மாடுகளுக்கு பெரும்பாலானோர் அடர்தீவனம் கொடுப்பதில்லை. வெறும் உலர் தீவனமும் சிறிது பசுந்தீவனம் மட்டுமே கொடுக்கின்றனர். இதனால் மாடுகள் சத்துக் குறைபாட்டினால் சினைக்கு வராமல் போய் விடுகிறது. சினைக்கு வந்தாலும் சினைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பால் வற்றிய மாடுகள் நல்ல முறையில் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டுவதற்கும், விரைவில் சினைப்பிடிப்பதற்கும் பால் வற்றி சினையின்றி உள்ள மாடுகளுக்கு 1 கிலோ கலப்புத் தீவனம் கண்டிப்பாக தினமும் கொடுக்கப்பட வேண்டும். மேலும் உலர்ந்த தீவனம் 4 கிலோ அளவும் பசுந்தீவனம் 10 முதல் 15 கிலோவும் தர வேண்டும்.

தீவன முறைகள்:

  • பண்ணையில் ஒரு குறிப்பிட்ட தீவன முறை பழக்கத்தையே கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக கறவை மாடுகளுக்கு முதலில் அடர்தீவனத்தையும், பின் பசுந்தீவனத்தையும் அடுத்தாற்போல் உலர் தீவனத்தையும் கொடுக்கலாம்.
  • தீவனங்களைத் திடீரென்று மாற்றம் செய்யக் கூடாது. தீவன முறைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் சிறிது சிறிதாக மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும்.
  • தீவனக்கலவையை ஊற வைத்து அல்லது இளகலாகத் தண்ணீர் சோத்துக் கொடுக்கலாம்.
  • தீவனத்தட்டைகளை நறுக்கித் துண்டு செய்து அளிக்கலாம்.
  • மாடுகளுக்கு எப்பொழுதும் வேண்டிய அளவிற்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைக்குமாறு பாத்த்துக்கொள்ள வேண்டும். அதன் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு அளவிற்குத் தண்ணிர்; தினசரி தேவைப்படும். கறவை காலங்களில் மூன்று மடங்கு தண்ணீர் தேவைப்படும்.
  • பால் உற்பத்தி அதிகரிக்க அடர்தீவனத்தில் தாது உப்புக் கலவையானது கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அப்படி அடர்தீவனத்தில் தாது உப்புக்கலவை சேர்க்க வில்லையெனில் ஒரு மாட்டிற்கு தினமும் 30 கிராம் என்ற அளவில் தாது உப்புக்கலவையை தீவனத்தில் கலந்து தர வேண்டும்.

 

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்