மாடுகளின் கண்களைத் தாக்கும் கண்புழு நோய்; தடுக்கும் முறைகள்

மாடுகளின் கண்களில் ஏற்படும் பாதிப்புகளில் கண்புழு நோய் மிக முக்கியமானதாகும். கண் புழு நோயானது வருடத்தின் அனைத்து பருவ நிலைகளிலும் மாடுகளைத் தாக்கும். கண்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் வலியினால் சரிவர தீவனம் உட்கொள்ளாமல் போவதால் பால் உற்பத்தி குறைய நேரிடும். தக்கசமயத்தில் கண்புழு நோயைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் கண்கள் புரையோடி கண் பார்வையையே இழக்கச் செய்துவிடும். எனவேமாடுகள் வளர்ப்போர் கண்புழு நோய் பாதிப்பை எளிதாகஎடுத்துக் கொள்ளாமல் தகுந்த சிகிச்சை கொடுத்தால் மாடுகளின் கண்களை மட்டுமல்லாமல் பால் உற்பத்தியையும் பாதுகாக்கலாம்.

நோய் உண்டாகும் முறை:
மாடுகளில் கண்புழு நோயானது தெலீசியா மற்றும் செட்டேரியா எனப்படும் புழுக்களால் உண்டாகிறது. கண்புழு நோயை பரப்புவதில் ஈக்களும் கொசுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தெலீசியா புழுவால் பாதிக்கப்பட்டமாட்டில் இப்புழுக்கள் லார்வா எனப்படும் இடைநிலைப் புழுக்களை கண்களில் சுரக்கும் திரவத்தில் வெளியிடுகின்றன. கண்களைச்சுற்றித் திரியும் ஈக்கள் இந்த லார்வாக்களை உண்ணும் பொழுது ஈக்களின் வயிற்றில் வளர்ந்து நோய் பரப்பும் தன்மையைக் கொண்ட புழுக்களாக மாறுகின்றன.

பிறகு இந்த ஈக்கள் வேறு மாடுகளின் கண்களில் சுரக்கும் திரவத்தை உண்ணும் பொழுது புழுக்களை கண்களில் விடுகின்றன. ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் இந்த புழுக்கள் இனப்பெருக்கத்திற்கு தகுதியுடையதாக மாறி முட்டையிட் டுலார்வா எனப்படும் இடை நிலைப் புழுக்களை கண்களில் சுரக்கும் திரவத்தில் வெளியிட்டு கண்புழு நோயை பரப்ப தயாராகும். தெலீசியா புழுக்கள் கண்களின் இமைகளுக்கிடையே காணப்படும்.

செட்டேரியா புழுவால் பாதிக்கப்பட்ட மாட்டை கடிக்கும் கொசுக்களின் உடம்பிற்குள் லார்வாக்கள் சென்று நோய் பரப்பும் தன்மையுடையதாக மாறிவிடும். இந்த கொசுக்கள் மற்ற மாடுகளைக் கடிக்கும் பொழுது மாடுகளின் உடம்பிற்குள் புழுக்கள் சென்று பிறகு கண்ணை வந்தடைந்து வளர்ந்து பெரிய புழுக்களாக வளரும். செட்டேரியா புழுக்கள் கண்ணின் உட்புறம் காணப்படும். இவ்வாறு ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு கண்புழு நோயை ஈக்களும் கொசுக்களும் தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருக்கும்.

அறிகுறிகள்:
கண்களில் புழுக்கள் இருந்தால் கண் சிவந்து காணப்படுதல், கண்களில் அதிகப்படியான நீர் வடிதல், கண்களில் வீக்கம், கண்களில் வெண்படலம் தோன்றுதல், சூரிய ஒளிபட்டதும் கண்களில் கூச்சம் போன்ற அறிகுறிகள் தென்படும். புழுக்கள் கண்ணில் உள்ள கருவிழியை உரசுவதால் கண்களில் வெண்படலம் தோன்றுகிறது. புழுக்கள் கண்ணீர் சுரப்பிகளுக்குள்ளும் ,கண்ணீர் நாளங்களுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.

கண்புழு நோயானது மாட்டின் ஒரு கண் அல்லது இரு கண்களிலும் காணப்படலாம். கண் புழுக்கள் கண்களுக்கு உள்ளே அல்லது கண் இமைகளுக்கிடையே காணப்படும். கண்களுக்கு உட்புறம் புழுக்கள் இருந்தால் நாம் இமைகளை இலேசாக விலக்கிப் பார்த்தால் ஓரிரு பெரிய புழுக்கள் கண்களுக்கு உள்ளே நெளிவதைப் பார்க்கலாம். இமைகளுக்கு இடையேபுழுக்கள் இருந்தால் அவைமெல்லிய, வெண்மை நிறமுள்ள சிறிய அளவிளான புழுக்கள் அதிக எண்ணிக்கையில் நெளிவதைப் பார்க்கலாம்.

சிகிச்சை முறைகள்:
கண்கள் சிவந்து, அதிக அளவில் கண்ணீர் வழியும் அறிகுறிகள் தென்பட்டவுடன் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கண்களின் இமைகளுக்கிடையே புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தால் கால்நடை மருத்துவர் உரிய மருந்தை கண்களில் ஊற்றி அனைத்து புழுக்களையும் வெளியே எடுத்துவிடுவார். கண்களின் உட்பகுதியில் புழுக்கள் இருந்தால் கண்களில் உணர்விழக்கச் செய்யும் சொட்டு மருந்தை ஊற்றி வலியில்லாமல் சிறிய அறுவை சகிச்சை மூலம் கண்ணுக்குள் உள்ள புழுக்களை வெளியே எடுத்துவிடுவார்.

புழுக்களை வெளியே எடுத்த பின் ஆன்டிபயாடிக் கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு மூன்று வேளையாக 5 முதல் 7 நாட்களுக்கு கண் வெண்படலம் குணமாகும் வரைபோடவேண்டும். மீண்டும் புழுக்கள் வராமல் இருக்க லிவாமிசோல் அல்லது ஐவர்மெக்டின் என்னும் மருந்தை ஊசி மூலம் கால்நடை மருத்துவர் மூலம் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்:
கண்புழு நோயானது ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பரவுவதால் மாட்டுக் கொட்டகையில் ஈக்கள் மற்றும் கொசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு மாட்டுக் கொட்டகையையும், மாடுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாட்டுச் சாணத்தை அவ்வப்பொழுது அப்புறப்படுத்தி கொட்டகைக்குள்ளே கொட்டுவதை விட்டு விட்டு கொட்டகையை விட்டு வெளியே சற்றுத் தொலைவில் சேமிப்புக் கிடங்கில் கொட் டவேண்டும்.

சேமித்த சாணத்தில் ஈக்கள் மற்றும் கொசுக்களின் முட்டைகள் மற்றும் லார்வாக்களை அழிக்க வாரம் ஒரு முறை மருந்து தெளித்தல் வேண்டும். மாடுகளை நன்கு குளிப்பாட்டி சுத்தமாக வைக்க வேண்டும். கோட்டகையைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்