இன்றைக்கு இருக்கும் அவசர உலகிலும், நெருக்கடியான சூழ்நிலையிலும் அவரவர் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை முடிந்தவரை அவர்களே உற்பத்தி செய்து அதிலிருந்து பெறுவது சிறந்தது. அதற்காக ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. மொட்டைமாடி இருந்தால்போதும். அங்கு தேவையான முக்கிய காய்கறிகள், கீரைகளை பயிரிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக அதனுடன் தினமும் செலவு செய்ய கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும். சரி இப்பொழுது மாடித் தோட்டத்தில் செய்யக் கூடியவைகள் பற்றியும், செய்யக் கூடாதவைகள் பற்றியும் பார்ப்போம்.
- மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்ய வேண்டும்.
- தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.
- காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வைத்தால் போதும். மொட்டை மாடியில் காய்கறி, மாடிப்படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவித செடிகளையும் நடலாம்.
- தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூட கீரை வளர்க்கலாம். தொட்டி, பாலிதின் பை, நேரடியாக நிலத்தில்… என எதில் செடி வளர்க்க வேண்டும் என்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில், அல்லது நிலத்தில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயரானதும் உடனே விதைக்க வேண்டாம். 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு விதைப்பு செய்யதால், நல்ல விளைச்சல் நிச்சயம்.
- ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்கட்டியை கூட வீட்டுத்தோட்டதிற்கு பயன்படுத்தலாம். தேங்காய்நார் கழிவுக் கட்டியை, பாலித்தின் பையினை திறந்து, உள்ளே வைக்க வேண்டும். அதில் 10 லிட்டர் அளவு நீரை ஊற்ற வேண்டும்.
- நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சண கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து நன்கு கிளறிவிட வேண்டும்.
- பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.
- கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
- வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.
- பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும்.
- பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
- கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.
மாடித்தோட்டம் செய்யக்கூடாதவைகள்:
- கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்
- காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது.
- பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது.
- பைகளை தயார் செய்த உடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக் கூடாது.
- பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.
- ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இடக் கூடாது.
- ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
- மழை காலங்களில் நீர் ஊற்றக் கூடாது.
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
+1
+1
+1
+1
+1
+1