மழைக்காலத்தில் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுக்கும் வழிகளும்

மழைக்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பலவித நோய்களைக் கொண்டுவருகிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு கால்நடை விவசாயிகள் கூடுதல் விழிப்போடு செயல்பட்டால், நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு, தங்கள் பொருளாதார இழப்பையும் தடுக்கலாம். மழைக்காலங்களில் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள் என்று ஆராய்ந்தால், 5 நோய்கள் முக்கியமானவை.

மழைக்கால நோய்கள்:
1) வெள்ளைக் கழிச்சல் 2) சளி மற்றும் சுவாசக் கோளாறு 3) வாத நோய் 4) கோழிக்காய்ச்சல் 5) தோல் முட்டை இடுதல் ஆகியவையாகும்.

காரணங்கள்:
இந்த நோய்கள் வருவதற்கு முக்கியக் காரணம் குடற்புழுக்கள்தான். எனவே தாய் கோழிக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறையும், 6 மாதத்திற்கு உட்பட்ட வளரும் இளம்கோழிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறையும் குடற்புழு நீக்க மருந்து அளிப்பது நல்லது. அந்த மருந்தும் ரசாயனக் கலப்பு இல்லாமல் இயற்கையான முறையில் தயாரித்ததாக இருப்பது சிறந்தது.

குடற்புழுநீக்க மருந்து தயாரிப்புக்கு தேவையான பொருட்கள்:

 

  • ஆகாசக் கருடன் கிழங்கு: 500 கிராம்
  • சோற்றுக்கற்றாழை: 500 கிராம்
  • குப்பை மேனி இலை: 500 கிராம்
  • பூண்டு: 250 கிராம்
  • கருஞ்சீரகம்: 25 கிராம்
  • மஞ்சள் தூள்:100 கிராம்
  • வேப்பயிலை:500 கிராம்
  • சீரகம்:50 கிராம்
  • சின்னவெங்காயம்:250 கிராம்
  • மிளகு:50 கிராம்

செய்முறை :
சீரகம், மிளகு, கருஞ்சீரகம் இவை மூன்றையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். மஞ்சள் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன், மஞ்சள் மற்றும் பொடி செய்தக் கலவையை ஒன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக மாற்றி, கோழிகளுக்கு காலைத் தீவனத்திற்கு முன்பே கொடுக்கவும். அல்லது காலைத் தீவனத்துடன் கலந்து கொடுக்கவும். இந்த மருந்தைக் கோழிகளுக்கு கொடுத்துவந்தால், குடற்புழுக்கள் வெளியே வந்துவிடும்.

இதனை 200 பெரிய கோழிகளுக்கும், 400 வளர் இளம்கோழிகளுக்கும் கொடுக்கலாம். இந்த மருந்தைத் தயாரித்த 5 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்பது, கால்நடை விவசாயிகள் கவனத்தில் கொள்ளவேண்டியது. நோய்யைப் பொருத்தவரை, வருவதற்கு முன்பே தற்காத்துக்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

தகவல்: அசோலா சதீஷ் குமார்
வேளாண் ஆலோசகர், திருவண்ணாமலை.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்