நமது நாட்டில் செம்மறி ஆடுகள் வளர்ப்புத் தொழிலானது கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. சேம்மறியாடுகளைத் தாக்கும் பலவிதமான நோய்களில்; திடீரென இறப்பு ஏற்பட்டு அதிக பொருளாதார இழப்பு ஏற்பட மிக முக்கிய காரணமாக இருப்பது துள்ளுமாரி நோயாகும். துள்ளுமாரி நோயை முறையான பராமரிப்பு முறைகளின் மூலமும் தகுந்த தடுப்பூசிகள் அளிப்பதன் மூலமும் நோய் வராமல் தடுத்து விட முடியும். அதனால் ஆடு வளர்ப்போர் இந்நோய் பற்றியும் நோய்; வராமல் தடுப்பது பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
நோய் ஏற்படக் காரணம்:
இந்நோயானது “கிளாஸ்டிரிடியம் பர்ப்ரின்ஜன்ஸ்” வகை “டி” என்ற நுண்ணுயரிக் கிருமிகளால் உண்டாகிறது. இந்த நுண்ணுயிரி நோயானது அனைத்து வயதிலும் ஆடுகளைத் தாக்கினாலும் அதிகமாக நன்கு கோழுத்த இளவயது செம்மறியாட்டுக்குட்டிகளைத் தாக்கி பெரிய அளவில் இற்பினை ஏற்படுத்துவதால் மிகப் பெரிய பொருளாதார இழப்பினை ஆடு வளர்ப்போர் சந்திக்க நேரிடுகிறது.
மழைக்குப் பிறகு வளர்ந்த புற்களை அதிகமாக உண்பதால் ஆடுள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. விரைந்து வளரும் அடர்த்தியான புல்வெளி மற்றும் தானிய வகைப் பயிர்களில் ஆடுகளை மேயவிடும் பொழுது இந்த நோய் ஆடுகளைத் தாக்குகிறது. அதிக அளவு தானியங்களைத் தீவனமாக அளிக்கும் பொழுதும், குட்டிக்கு அதிக அளவிலான பால் கொடுக்கும் பொழுதும் இந்த நோய் ஏற்படுகிறது.
ஆடுகளுக்கு வழங்கப்படும் உலர் தீவனத்திலிருந்து அடர் தீவனத்துக்கு திடீரென மாறுதல் செய்யும் பொழுதும் இந்நோய் ஏறபடுகிறது. உணவுக்குழல் இயக்கத்தில் ஏற்படும் சரிவு அல்லது தேக்க நிலை காரணமாகவும், அதிகமான புழுக்கள் மற்றும் இரத்த்க் கழிச்சல் நோயினால் பாதிக்கப்படுதல் காரணமாகவும் இந்நோய் ஏறபடுகிறது. ஆடுகள் அதிக அளவு தீவனத்தை உண்பதால் மாவுச் சத்து செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டு குடலில் உள்ள துள்ளுமாரி நோயை உண்டு பண்ணும் நோய்க்கிருமரியானது ஆடுகளின் குடலில் திடீரெனப் பன்மடங்கு பெருகி அதிகப்படியான “எப்சிலான”; என்ற நச்சுப் பொருளை வெளிப்படுத்துகிறது.
ஆடுகள் குடல் மூலம் இந்த நச்சுப் பொருள் உட்கிரகிக்கப்பட்டு ஆடுகளில் இரத்த ஓட்ட மண்டலத்தை அடைந்து நோய் அறிகுறிகள் உண்டாகின்றன. கழிச்சல், குடல் அழற்சி மற்றும் குடல் வலி, வலிப்பு போன்ற நரம்பு தொடர்பான நோய் அறிகுறிகள் உண்டாகின்றன. இதனால் நோயுற்ற ஆடுகள் தள்ளாடி நடந்தும் சுற்றி சுற்றி நடந்தும், வலிப்பு கண்டு துள்ளிவிழுந்து இறப்பதால் இந்நோய் துள்ளுமாரி நோய் என அழைக்கப்படுகிறது.
நோய் அறிகுறிகள்:
இந்நோயின் அறிகுறிகள் அதி தீவரி நிலை மற்றும் தீவிர நிலை என இரு நிலைகளில் வெளிப்படுகிறது. அதி தீவிர நிலையில் ஆடுகள் எவ்வித நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்ததாமல் திடீரென இறக்கும். முதல் நாள் மாலையில் நன்கு மேய்ந்து விட்டு பட்டிக்கு வந்த செம்மறியாடுகள் இரவில் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் காலையில் பார்த்தால் மந்தையில் இறந்து கிடக்கும்.
தீவிர நிலை நோய் பாதிப்பின் பொழுது மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் திடீரென்று மேயாமல் மந்தையை விட்டு விலகி விடும். பாதிக்கப்பட்ட ஆட்டுக் குட்டிகள் சோர்ந்தும், வயிற்று வலியுடன் பற்களைக் கடித்துக் கொண்டும் இருக்கும். பால்குடிப்பதைத் தவிர்த்தும் நடக்க முடியாமல் வலியுடன் படுத்துக்கொண்டே இருக்கும். சாணம் இளகியும், இரத்தம் கலந்தும் கழிச்சல் காணப்படும். உடல் சோர்வு, அதிக அளவில் எச்சில் வடிதல், தசை வலிப்பு, அமைதியின்மை, தாடை கட்டுதல், சுற்றி வருதல், ஒரு பக்கம் தள்ளாடுதல், ஏதாவது ஒரு பொருளின் மீது சாய்தல் போன்ற நரம்பு சம்பந்தமான அறிகுறிகள் தென்பட்டு துள்ளிக்குதித்து கீழே விழுந்து வலிப்புடன் காணப்படும். பின்னர் சில நிமிடங்களில் இறந்;து விடும்
நோய்த்தடுப்பு முறைகள்
துள்ளுமாரி நோயைத் தடுக்க பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்து செம்மமறியாடுகளுக்கும் தடுப்பூசி போடுவது நல்லது. தடுப்பூசியானது கருவுற்ற ஆடுகளுக்கு குட்டி ஈனுவதற்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு முன்னரே தடுப்பபூசி போட வேண்டும். மேலும் பிறந்த குட்டிகளுக்கு மூன்று மதல் நான்கு வார வயதில் முதல் தடுப்பூசியும், பின்னர் 21 நாட்கள் கழித்து இரண்டாம் தடுப்பூசியும் அளிக்க வேண்டும். இதன் பின் வருடத்திற்கு ஒரு முறை தடுப்பூசி அளிக்க வேண்டும்.
அளவிற்கதிகமாக அடர் தீவனம் ஆடுகளுக்குக் கொடுக்கக்கூடாது. மேலும் அடர்ந்த புல்வெளியில் அதிகமாக மேயவிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில், உலர் தீவனத்திலிருந்து அடர் தீவனத்திற்கு உடனடியாக மாறாமல் படிப்படியாக மாற்றம் செய்ய வேண்டும். முறையாக குடற்புழு நீக்கம் மற்றும் இரத்தக் கழிச்சலுக்கான மருத்துவ முறைளைக் கடைப்படிக்க வேண்டும்.
நோய்க்கிளர்ச்சியின் போது தீவனம் மற்றும் தீவனமளிக்கும் முறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மழை மற்றும் குளிர் கால்த்தில் ஆடுகளை வெயில் வந்த பின் தான் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். அதே போல் மாலையில் வெயில் இருக்கும் பொழுதே மேய்ச்சலில் இருந்து கொட்டகைக்கு கொண்டு வந்து விட வேண்டும். மிகக் குளிர்ந்த நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது. மழைக்குப் பின் வளரும் புற்களை மேயும் பொழுதும், தீவனப் பயிர் எளிதில் கிடைக்கும் காலங்களிலும் மிகவும் கவனத்துடன் தீவனம் அளிக்க வேண்டும். நோய்க்கண்ட காலத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் நேரத்தைக் குறைப்பதால் இந்த நோயைக் கட்டுப்படுத்தி இழப்பைக் குறைக்கலாம்.