ஆடுகளைத் தாக்கும் நோய்களில் இரத்தக் கழிச்சல் ஒரு முக்கியமான நோயாகும். “எய்மெரியா” எனப்படும் ஓரணு ஒட்டுண்ணிகள் ஆடுகளைப் பாதிப்பதால் இந்நோய் உண்டாகிறது. இரத்தக்கழிச்சல் நோயானது ஒரு மாத வயது முதல் ஆறு மாத வயது வரை உள்ள இளம் ஆட்டுக் குட்டிகளை கடுமையாகப் பாதிப்பதால் இளம் ஆடுகளில் இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படும். நோய்க்கிருமிகள் நன்கு பெருகுவதற்கான தட்பவெப்பநிலை குறிப்பாக அதிக ஈரப்பதம் குளிர்காலங்களில் நிலவுவதால், இந்நோயின் தாக்கம் குளிர்காலங்களிலும் மழைக்காலங்காலங்களிலும் அதிக அளவில் காணப்படும்.
இரத்தக் கழிச்சலை உண்டாக்கும் காரணிகள்:
போதிய இடவசதி கொடுக்கப்படாமல் நெருக்கமாக, குறைந்த இடவசதியுடன் ஆடுகளை அடைத்து வளர்க்கும் பொழுது இரத்தக்கழிச்சல் நோய் ஏற்படவும், வெகு வேகமாகப் பரவவும் வாய்ப்புகள் அதிகம். கொட்டில்களை சுகாதாரமாகப் பராமரிக்கத் தவறுவதாலும், சுகாதாரமற்ற முறையில் தீவனம் மற்றும் குடிநீர் அளிக்கும் பொழுதும் நோயுள்ள ஆட்டுச் சாணத்தில் உள்ள கிருமிகள் மூலம் இந்நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பட்டி போட்டு ஆடுகளை வளர்க்கும் முறையில் மண் தரைப் பகுதியில் தொடர்ந்து பல நாட்கள் ஒரே இடத்தில் மறைப்பு அமைத்துப் பட்டி போடுவதாலும், பாதிக்கப்பட்ட ஆடுகள் மேய்ந்த இடங்களில் பிற ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்றாலும் இந்நோய் எளிதாக பரவும். பாதிக்கப்பட்ட தாய் ஆடுகளுடன் வளர்க்கப்படும் குட்டிகளையும், தீவனப் பற்றாக்குறை மற்றும் பிற நோய்ப் பாதிப்புக்களால் அயர்ச்சியுற்ற ஆடுகளையும் இந்நோய் எளிதில் தாக்கும்.
நோய் உண்டாகும் விதம்:
இரத்தக் கழிச்சலை உண்டாக்கும் ஓரணு ஒட்டுண்ணிகள், மேய்ச்சலின் போது அல்லது தீவனம் மற்றும் குடிநீர்த் தொட்டிகள் மூலமாக ஆடுகளின் குடற்பகுதியை அடைந்து சிறுகுடலின் பின்பகுதி மற்றும் பெருங்குடல் பகுதிகளில் உட்சவ்வின் உள்ளே புகுந்து புண்களை ஏற்படுத்துகின்றன. இதனால் குடல்வீக்கம் ஏற்பட்டு இரத்க் கசிவும், கழிச்சலும் ஏற்படுகின்றன. குடல் பகுதி பாதிக்கபப்ட்ட ஆடுகளில் தீவனம் மூலம் கிடைக்கும் உணவுச் சத்துக்கள் உறிஞ்சப்படும் அளவு குறைந்து ஆடுகளுக்கு உணவுச் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு ஆடுகள் உடல் மெலிந்து வலுவிழந்து விடுகின்றன. புண்ணாக்கிய குடற்பகுதியை பிற நுண்கிருமிகளும் பாதிக்கும் பொழுது கழிச்சல் மற்றும் நோயின் தீவிரம் அதிகமாகி ஆடுகள் அதிக அளவில் இறக்க நேரிடுகின்றன.
நோயின் அறிகுறிகள்:
நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் திடீரென கழிச்சல் ஆரம்பிக்கும். கழிச்சலானது கருப்பு நிறத்தில் சளியும் இரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் காணப்படும். ஆடுகள் கழியும் பொழுது வலியினால் முணங்கும். குதவாய், வால் மற்றும் தொடையின் பின் பகுதிகளில் சளியும், கழிச்சல் ஒட்டி காணப்படும். இரத்தப் போக்கு இருப்பதனால் ஆடுகளில் இரத்தச் சோகை ஏற்பட்டு கண் மற்றும் வாய்ப் பகுதிகள் வெளிறிக் காணப்படும். ஆடுகள் மேயாமல் சோர்ந்து காணப்படும். நடை தள்ளாடும். மூச்சு விட சிரமப்படும். ஆடுகள் மெலிந்து வலுவிழந்து எழ முடியாமல் படுத்தே கிடந்து பிறகு இறந்து விடும். சரியான நோய்ப் பராமரிப்பு முறைகளைக் கையாளாவிட்டால் 20 முதல் 30 சதவிகிதம் வரை ஆட்டுக்குட்டிகள் இறக்க வாய்ப்புள்ளது.
சிகிச்சை முறைகள்:
பாதிக்கப்பட்ட ஆடுகளை அறிகுறிகள் தென்பட்ட ஆரம்பகட்டத்திலேயே தனியே பிரித்து வைத்து சல்பா, நைட்ரோப்யூரசான், ஆம்ப்ரோலியம் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை கால்நடை மருத்துவர் ஆலோசனையின் படி தகுந்த அளவு கொடுத்து சிகிச்சை அளித்தால் ஆடுகளை இறப்பிலிருந்து காப்பாற்றி விட முடியும்.
தடுப்பு முறைகள்:
ஆடு வளர்ப்பில் சுகாதார முறைகளைக் கையாள்வது மிகவும் அவசியம். கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும் பொழுது ஆடுகளுக்கு போதிய இட வசதி அளித்து வளர்க்க வேண்டும். குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையுள்ள ஆடுகளை அடைக்கக் கூடாது. தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளைத் தரையிலிருந்து உயர்த்தி வைத்து சாணத்தினால் மாசுபடாமல் சுத்தமான தீவனம் மற்றும் சுத்தமான குடிநீர் ஆடுகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டகையின் தரையானது ஈரமின்றி உலர்ந்திருக்க வேண்டும்.
குட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் படுக்கைப் பொருட்களை அன்றாடம் அகற்றி கொட்டகையை தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும். மேய்ச்சல் பகுதியையும் பட்டி போடும் பகுதியையும் அவ்வப்போது மாற்ற வேண்டும். மழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடை மருத்துவர் ஆலோசனையின் படி ஆம்ப்ரோலியம், நைட்ரோப்யூரான், மொனன்சின் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றினை ஆடுகளுக்கு தீவனத்திலோ அல்லது தண்ணீரிலோ கலந்து தடுப்பு மருந்தாக அளிக்கலாம்.