மலர் சாகுபடியாளர்களுக்கு மகத்தான உர ஆலோசனைகள்

அனைத்துவிதமான மலர் சாகுபடியார்களுக்கும் ஏற்ற வகையிலான எளிய முறையிலான ஆலோசனைகள் இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிச்சயமாக பயன் அளிக்கும். முக்கியமாக இதில் தெரிவித்திருப்பது மலர் சாகுபடியில் எந்தெந்த மலருக்கு என்னென்ன இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே. அந்த வகையில், இந்திய தோட்டக்கலை துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உர அட்டவணை இங்கே வழங்கப்பட்டுள்ளது.

கார்னேசன்:
கார்னேசன் மலர் carnation flowers சாகுபடிக்கு, அடியுரமாக ஹெக்டேருக்கு 2.5 டன் வேப்பம் பிண்ணாக்கு, 100 சதுர அடிக்கு 400 கிராம் மணிச்சத்து மற்றும் 0.5 கிலோ மெக்னீசிய சல்பேட்டு இடவேண்டும். கால்சிய அம்மோனிய நைட்ரேட்டு மற்றும் எம்ஓபி-யை 5:3 விகிதத்தில் கலந்து செடிக்கு 2.5 கிராம் என்ற அளவில் மேலுரமாக ஒவ்வொரு மாதமும் இடவேண்டும்.

உதிரி சாமந்தி:
உதிரி சாமந்திக்கு அடியுரமாக ஹெக்டேருக்கு 25 டன் தொழு எரு கடைசி உழவின் போது இடவேண்டும். பின்னர் செடி நடும் முன்னர் 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை, பார்களின் அடிப்பகுதியில் இட்டு, இலேசாகக் கிளறி மண்ணிணுள் மூடவேண்டும். மேல் உரமாக 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரத்தை நட்ட 30 நாட்கள் கழித்து இடவேண்டும். மறுதாம்புப் பயிருக்கும் இதே அளவு உரம் இடவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்:
பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30, 45 மற்றும் 60வது நாட்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்கவேண்டும்.

கொய் சாமந்தி:
ஒரு சதுர மீட்டருக்கு 20:20:20 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை வாரத்திற்கொரு முறை இட வேண்டும்.

கனகாம்பரம்:
அடியுரமாக ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து ஹெக்டேருக்கு 75 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இராசயன உரங்களை இட வேண்டும். மேற்கண்ட உர அளவை மீண்டும் ஒவ்வொரு ஆறுமாத இடைவெளியில் கொடுக்கவேண்டும்.

இவ்வாறு இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து இடவேண்டும். உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தை ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தினால் மத்தியில் இட்டு நன்கு கலக்கி, செடிகளுக்கு மண் அணைத்து பின் நீர்பாயச்சவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும்.

டெல்லி கனகாம்பரம்:
டெல்லி கனகாம்பரம் செடிகள் நட்ட 30 நாட்கள் கழித்து ஹெக்டேருக்கு வேப்பம் பிண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். பிறகு 90 நாட்கள் கழித்து 40:20:20 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ராசயன உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டும். இவ்வாறு 2 வருடங்கள் வரை தொடர்ந்து இட வேண்டும்.

ஜெர்பரா:
அடியுரமாக ஹெக்டேருக்கு 2.5 டன் வேப்பம் பிண்ணாக்கு, 100 சதுர அடிக்கு 400 கிராம் மணிச்சத்து மற்றும் 0.5 கிலோ மெக்னீசிய சல்பேட்டு இடவேண்டும். கால்சிய அம்மோனிய நைட்ரேட்டு மற்றும் எம்பி-யை 5:3 விகிதத்தில் கலந்து செடிக்கு 2.5 கிராம் என்ற அளவில் மேலுரமாக ஒவ்வொரு மாதமும் சத்து இடவேண்டும்.

கிளாடியோலஸ்:
அடியுரமாக ஹெக்டேருக்கு 60 கிலோ தழைச்சத்து, 150 கிலோ மணிச்சத்து மற்றும் 150 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மேலுரமாக 30 கிலோ தழைச்சத்தை 4 இலை விட்ட பருவத்தில் இலைகள் மீது தெளித்தும் மொட்டு விடும் பருவத்தில் மண்ணிலும் இட வேண்டும்.

கோல்டன் ராட்:
அடியுரமாக ஹெக்டேருக்கு 5 டன் தொழு உரம் மற்றும் 140:175:150 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் மற்றும் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடுவதுடன் ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் பாதியளவு உரங்களையும் இட வேண்டும்.

ஜாதிமல்லி:
செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை ஆண்டிற்கு இருமுறை இரண்டாகப் பிரித்து இடவேண்டும். டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்தபின் ஒருமுறையும் பின்பு ஜூன் – ஜூலை மாதங்களில் ஒரு முறையும் இடவேண்டும்.

மல்லிகை:
மல்லிகைச் செடிக்கு 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இரு பகுதிகளாகப் பரித்து கவாத்து செய்தவுடன் ஒரு முறையும் பின்பு ஜூன் – ஜூலை மாதத்தில் மறுமுறையும் செடியினைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்ய வேண்டும்.

செண்டுமல்லி:
நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்கள அடியுரமாக இடவேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரத்தினை இட்டு மண் அணைக்கவேண்டும்.

மரிக்கொழுந்து:
தழை, மணி, சாம்பல் சத்து 125:125:75 கிலோ / ஹெக்டேர் என்ற விகிதத்தில் 25 டன் தொழு உரத்துடன் இடவேண்டும். இவற்றில் மணி மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாகவும் தழைச்சத்தை மேலுரமாகவும் இடவேண்டும். 50 கிலோ தழைச்சத்தை நட்ட 25ம் நாளும், 25 கிலோ தழைச்சத்தை நட்ட 75, 110 மற்றும் 150ம் நாளும் இடவேண்டும்.

முல்லை:
குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விடவேண்டும். செடி ஒன்றிற்கு தழைச்சத்து 120 கிராம், மணிச்சத்து 240 கிராம் மற்றும் சாம்பல் சத்து 120 கிராம் தரக்கூடிய இராசயன உரங்களை 6 மாத இடைவெளியில் இருமுறை கொடுக்கவேண்டும். டிசம்பர் – ஜனவரி ஒரு முறையும், ஜூன் – ஜூலையிலும் கொடுக்கவேண்டும்.

அரளி:
ஜனவரியிலும், ஆகஸ்டிலும் 10 டன் தொழு உரம் ஒரு ஹெக்டேருக்கு இடவேண்டும். இராசயன உரங்கள் பொதுவாக இடவேண்டிய அவசியமில்லை. டென்ட்ரோபியம் ஆர்கிட், நடவு செய்த 30 நாட்களுக்கு பின்னர் வார இடைவெளியில் 0.2 சதவிகித 20:10:10 தழை, மணி, சாம்பல் சத்து அல்லது 17:17:17 தழை, மணி, சாம்பல் சத்து கலவையை தெளிக்க வேண்டும்.

உதிரி வகை ரோஜா:
கவாத்து செய்தவுடன் செடியைச் சுற்றி 2 அடி தள்ளி செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 6:12:12 கிராம் என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

கொய் வகை ரோஜா:
மூன்று மாதங்களுக்கொருமுறை மக்கிய தொழு உரம் 10 கிலோ, 8:8:16 கிராம் தழை, மணி, சாம்பல் சத்தினை கவாத்து செய்தவுடன் இடவேண்டும். ஹேப்பினஸ் என்னும் இரகத்திற்கு வருடம் ஒன்றிற்கு ஒரு செடிக்கு 75:150:50 தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.

சம்பங்கி:
தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:200:200 கிலோ / ஹெக்டேர் என்ற விகிதத்தில் 25 உடன் தொழு உரத்துடன் இட வேண்டும்.

குறிப்பு: பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30, 45 மற்றும் 60வது நாட்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்கவேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்