மறைந்துபோன தண்ணீர் பாய்ச்சும் சால்பறி முறை

கொங்கு வட்டார வழக்குல சால்பறி பறிச்சால்னு சொல்லுவாங்க. தெற்கத்திய பக்கம் திருநெல்வேலி பகுதியில் கூனைனு சொல்லுவாங்க. இதற்கு பறிசொல் என்ற இன்னொரு பெயரும் உண்டு. அந்த காலத்துல பெரும்பாலும் கிணத்துல இருந்து தண்ணி எடுத்து கவலை ஓட்டி தண்ணி பாச்சுவாங்க. வண்டி மாடு எருது வூடு தவறாம இருந்தது அதனால கிணத்துல கவலை ஓட்டி தண்ணி பாச்சி வெள்ளாமை பன்னுனாங்க.

இப்போதான் சுவிட்ச் போட்டா மோட்டர்ல தண்ணி வர ஆரம்பிச்சுருச்சு. அதனால கவலை ஓட்டுனருக்கு வேலையும் இல்லை ஆட்களும் இல்லை. சால்பறியில இரும்பு சால்பறி அப்பறம் தோல்ல கம்பி கட்டி இருக்குற சால்பறி பயன்படுத்திருக்காங்க. அதுல வாய் பகுதியை தும்பினு சொல்லுவாங்க அதைய தோல் பன்னிருப்பாங்க. வாய் பகுதி தும்பியை கட்டி கவலை ஏத்துவாங்க.

மாடு கவலையில பூட்டி மாடு முன்னாடி இழுத்துட்டு போறப்போ கயிறு மூலமா சால்பறி கிணத்துல இருந்து தண்ணி மோந்து வரும். மோந்து வர தண்ணி தும்பி சொல்ற சால்பறி வாய் வழியா தண்ணி வந்து வாய்க்கால் வழியா காட்டுக்கு தண்ணி பாயும். அப்புறம் மாட்டு கயிறை வுட்டா சால்பறி திரும்பவும் கிணத்துக்குள்ள போயிடும். மனிசங்களும் இப்படி ஏதத் இறக்கமா ஒரு பலகை கட்டி அதில அங்கும் இங்குமாக நடந்தும் தண்ணீர் எடுப்பாங்க. பழைய திரைப்படங்களில் இதை பார்க்க முடியும். இப்படி தான் பெரியவுங்க எல்லாம் கவலை ஏத்தி தண்ணீர் பாய்ச்சிருக்காங்க.

அப்பவே கொஞ்சம் பலமான சால்பறியை கோழி குஞ்சு அடைக்கிறதுக்கு பயன்படுத்திருக்காங்க. குஞ்சு பொறித்த கோழி கோழிகுஞ்சுகளை தீண்டி எடுத்து பழகும் வரைக்கும் சால்பறியில அடைச்சுருப்பாங்க. காக்கா மருந்து வள்ளுரு கிட்ட அண்டாம சால்பறியில அடைச்சுடுவாங்க. இப்போ சால்பறி எல்லாம் கொங்கு பகுதியில கோழி அடைக்குற கூண்டா தான் பயன்படுத்துறாங்க.

இப்போ இரும்புல சால்பறி அதிகமா இல்லை அந்த காலத்துல மாட்டு கவலை ஓட்டுனவுங்க ஒரு சிலர் இன்னும் வச்சுருக்காங்க. இப்போ பெரும்பாலும் தகரத்துல(கூடுவதால் தகரம்) ரவுண்டா வாட்டமா பின்னி கட்டி கோழி அடைக்கிறாங்க. இதுவே பொள்ளாச்சி பகுதியில் சால்பொரிங்க பழுதாகி உபயோகிக்க முடியவில்லை என்றால் கோழி அடைக்க கொடாப்பா மாறிவிடுமுங்க.

எழுத்து: வெங்கடேஷ் சோமசுந்தரம்.


உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்