மக்காச்சோளம் மகசூலை அதிகரிக்கும் கடற்பாசிசாறு

கடற்பாசி என்பது கடல் மற்றும் கடற்கரைகளில் கிடைக்கக்கூடிய பாசிவகை தாவரமாகும். இதில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளன. சில நாடுகளில் உணவுப் பொருளாகவும், உரமாகவும் பயன்படுத்துகின்றனர். எனவே தற்சமயம் இதனை செயற்கையாக உற்பத்தி செய்கின்றனர். கடற்பாசியானது பயிர், காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதுடன் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிரைக் காக்கும் தன்மையுடையது கடற்பாசியிலிருந்து எடுக்கப்படும் சாறினை தெளிப்பதன் மூலம் விதையின் முளைப்புத்திறன் மற்றும் பயிரின் வளர்ச்சியை அதிகரிக்க இயலும். வறட்சி மற்றும் குளிர்ச்சியை எதிர்க்கும் திறன் கொண்டது. பழம் மற்றும் காய்கறிகளின் வைப்புத்திறன் மற்றும் தரத்தை உயர்த்த உதவுகிறது.

கடற்பாசி சாற்றில் உள்ள சத்துக்கள்:

தழைச்சத்து 0.10 – 0.19 சதம்; மணிச்சத்து 0.20 – 0.58 சதம்; சாம்பல்சத்து 1.02 – 2.06 சதம். கால்சியம் 0.11 சதம்; மக்னீசியம் 0.01 சதம்; சோடியம் 0.13 சதம், இரும்பு 256 பிபிஎம். துத்தநாகம் 11.87 பிபிஎம், குளோரின் சிறிதளவு, மாங்கனீசு 13.12 பிபிஎம். போரான், சல்பர், கோபால்ட், மாலிப்டினம் சிறிதளவு. வளர்ச்சி ஊக்கிகள் (ஆக்ஸின், ஜிப்ரலின், சைட்டோகைனின்) சிறிதளவு. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மக்காச்சோளம் ரகம் கோ.1 பயன்படுத்தப்பட்டது. 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்பட்டு டைட்டோசைம் என்னும் கடற்பாசி சாறு (0.3 சதம்) இலைவழி உரமாக தெளிக்கப்பட்டது.

மூன்று முறை நடவு செய்த 30, 45 மற்றும் 60வது நாளில் இலைகளின் மேல் தெளித்ததில் அதிக மகசூலாக எக்டருக்கு 6090 கிலோ தானியம் பெறப்பட்டது. அதாவது 62 சதம் அதிகமாக மகசூல் பெறப்பட்டது. எனவே கடற்பாசியை விவசாய உற்பத்தியில் பல்வேறு முறைகளில் பயன்படுத்தி அதிக உற்பத்தியை பெறுவதோடு, நீர், மண் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பெறவும் வாய்ப்புள்ளது.

ஆதாரம் : உழவியல் துறை, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம்
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்