அமைதியின் சின்னமாகக் கருதப்படும் புறாக்கள் பண்டைக் காலந்தொட்டு பல விதங்களில் மனிதனுக்கு உதவி வந்தள்ளது. இறைச்சிக்கெனவும், பந்தயத்திற்கெனவும், ஆராய்ச்சிக்கெனவும் பல்வேறு தேவைகளுக்காக சிறிய அளவில் ஆங்காங்கே வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்படுகின்றன.
புறா வளர்ப்பினை ஒரு முழு நேரத் தொழிலாகவோ அல்லது பகுதி நேரத் தொழிலாகவோ மேற்கொண்டு அதிக எண்ணிக்கைகளில் புறாக்களை முறையான பராமரிப்பின் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக உழைப்பில்லாமல், எளிய முறையில் வளர்ப்பதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாக அமைக்க முடியும்.
புறாக்களின் தன்மை
புறா எளிதில் வீட்டில் வளரும் பறவையினம். புறாக்களை வீட்டின் கூரைகளிலும் புறக்கடைகளிலும் எளிதில் வளர்க்கலாம். புறாக்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தை ஒரே மூச்சில் பறந்து கடக்கும் தன்மை கொண்டவை. பொதுவாகப் புறாக்கள் ஜோடியாக வளர்க்கப்படுகின்றன.
ஒரு ஜோடி ஆண், பெண் புறா வாழ்நாள் முழுவதும் சேர்ந்தே இருக்கும். அவற்றின் ஆயுட்காலம் 12 மதல் 15 வருடங்களாகும். ஆண், பெண் புறா இரண்டும் சேர்ந்தே குச்சிகளைச் சேகரித்துத் தாம் வாழ கூடு அமைத்துக் கொள்ளும் தன்மையுடையன. புறாக்கள் தினமும் குளிக்கக்கூடியவை.
புறா இனங்கள்
பொதுவாக புறாக்கள் வாழும் பகுதிகளைக் கொண்டு மணிப்புறா, மாடப்புறா மற்றும் வீட்டுப்புறா என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். மணிப்புறா என்பது காடுகளில் வாழ்வன. மாடப்புறா என்பது மாளிகைகள் மற்றும் கோபுரங்களில் கூட்டமாக வாழ்வன. வீடுகளின் கூரைகளில் வசிப்பன வீட்டுப்புறாக்கள். மாடப்புறாக்கள் வீட்டுப் புறாக்களைப் போல் மனிதர்களோடு பழகி வளராது. அவற்றைப்பிடித்து வந்தாலும் விடுதலை பெற்று ஓடி விடவே முயற்சிக்கும். வீட்டுப் புறாக்களை இறைச்சிப் புறா இனங்கள் என்றும் பொழுது போக்கு இனங்கள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
காரணு, கிங், சுவிஸ் மாண்டைன், பிரெஞ்ச் மாண்டைன், வெள்ளை ராஜா, டெக்ஸ்ஸோனா கோலா, லோக்கா போன்றவை இறைச்சிக்கான புறாக்களாகும். ஹோமர், மாயுர்பொங்கி. ஸிராசி, லஹோர், பான்டேல், ஜகோபின், ப்ரிஸ்பாக், மொன்டேனா, மூக்கி, ட்ருபிட், கிரிபாஸ், லோடல், டெம்ப்ளார் ஆகிய இனங்கள் அதிகம் பொழுது போக்கிற்காக வளாக்கப்படும் இனங்களாகும். இவற்றுள் ஹோமர் இனப் புறாக்கள் பந்தயத்திற்னெ அதிகம் வளர்க்கப்படுகின்றன.
ஹோமர் இனப் பந்தயப்புறாக்கள்
இப்புறாக்கள் 1000 மைல் தூரத்தை இரு நாட்களில் கடந்து விடக்கூடியவை. 600 மைல் தூரம் ஒரு நாளில் பறக்கும். ஹோமர் புறாக்களைத் தேர்வு செய்யும் பொழுது அதன் பறக்கும் திறன் பார்த்து வாங்க வேண்டும். இப்புறாக்கள் எந்த நிறத்திலும் இருக்கலாம். ஆனால் வெள்ளை நிறமாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனெனில் வெள்ளை நிறப்புறாக்கள் எளிதில் வல்லூறு மற்றும் கழுகுகளால் தாக்கப்பட்டு விடும். பந்தயத்திற்காக 5 வார வயதுள்ள இளம் புறாக்களை பழக்கப்படுத்த வேண்டும்.
முதலில் வீட்டில் இருந்து 1 முதல் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடங்களுக்கு கூடையில் எடுத்துச் சென்று விட வேண்டும். அவை திறந்து விடப்படும் பொழுது தீனி எதுவும் கொடுக்கக் கூடாது. புறாக்கள் வீடு திரும்பியதும் தீனி மற்றும் நல்ல நீர் குடிக்கக் கொடுக்க வேண்டும். பிறகு சிறிது சிறிதாக தூரத்தை அதிகப்படுத்தி அதிக தூரம் தள்ளி புறாக்களை எடுத்துச் சென்று விட்டு பழக்க வேண்டும்.
வளர்ச்சியுற்ற பயிற்சி பெற்ற புறாக்கள் 500 மைல் உள்ள இடங்களிலிருந்து எளிதில் வீடு திரும்பி விடும். புறாக்கள் காலை தொடங்கி இருட்டும் நேரம் வரை 7 முதல் 9 மணி நேரம் வரை பறக்கும். இருட்டியபின் ஏதாவது மரக்கிளைகளில் தங்கி விடும்.
புறாக் கூண்டு அமைப்பு
புறாக்கூண்டுகளை மெல்லிய மரக்கட்டைகள், தகரம் அல்லது மூங்கில் கொண்டு பல அடுக்காக அமைக்க வேண்டும். ஒரு மர அலமாரி போல் அமைத்து புறாக்கள் தங்குவதற்கு வசதியாக பல அறைகளை அமைக்க வேண்டும். புறாக்கூண்டு நல்ல வெளிச்சமுடையதாகவும், காற்றோட்டமுடையதாகவும் மழை நீர் உட்புகாதவாறும் இருக்க வேண்டும். ஒவ்வொரு புறாவிற்கும் 30 செ.மீ நீளம் 30 செ.மீ உயரம் மற்றும் 30 செ.மீ அகலம் இடவசதி தேவைப்படும்.
ஒவ்வொரு அறையிலும் இரண்டு புறாக்கள் தங்குமாறு கூண்டை அமைக்க வேண்டும். 10 செ.மீ உயரம் மற்றும் 10 செ.மீ நீளம் என்ற அளவில் ஒவ்வொரு அறையிலும் கதவு அமைக்க வேண்டும். அறையின் கீழ்ப்பகுதி 5 அங்கல பலகையில் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் முட்டையோ குஞ்சுகளோ கீழே விழாமல் தடுக்கப்படும். புறா வீட்டை ஒட்டி வெளிப்புறம் இரும்பு வலை அடித்து மூடி இருக்க வேண்டும். இந்த வெளி புறத்தில் புறாக்கள் குளிக்கவும், குடிக்கவும் நீர்த்தொட்டி வைக்க வேண்டும்.
புறாக் கூண்டினை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தீவனத்தட்டு மற்றும் தண்ணீர்த் தட்டுக்களை கூண்டுக்கு அருகே வைக்க வேண்டும். சிறிதளவு வைக்கோலைப் புறாக் கூண்டுகளுக்கு அருகே வைத்தால் அவற்றைப் பயன்படுத்திப் புறாக்கள் தமக்குத் தேவையான மெத்தையை அமைத்துக் கொள்ளும்.
புறாத் தீவனம்
புறா பொதுவாகக் கோதுமை, நெல், சோளம், பயிறு வகைகள் போன்றவற்றை தீவனமாக உட்கொள்ளும். ஒரு புறாவானது சராசரியாகத் தினமும் 35 முதல் 50 கிராம் தானிய உணவு உட்கொள்கிறது. புறாவிற்கான சமச்சீர் தீவனத்தை தயார் செய்து புறாக்களுக்கு அளிப்பதன் மூலம் அதன் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
10 கிலோ புறாத் தீவனம் தயாரிப்பதற்கு கோதுமை 2.0 கிலோ, மக்காச்சோளம் 2.0 கிலோ, பட்டாணி 2.0 கிலோ, கொண்டைக்கடலை 1 கிலோ, கம்பு, அரிசி, கேழ்வரகு போன்ற தானியங்கள் 2.9 கிலோ, தாதுஉப்புக்கலவை 100 கிராம் ஆகியவற்றைக் கலந்து தயார் செய்யலாம்.
சுண்ணாம்புச் சத்துத் தேவைக்காக உடைந்த முட்டை ஓடுகளையும் தீவனத்தில் சேர்க்க வேண்டும். புறாக் கூண்டுகளுக்கு முன்பாக தீவனம் மற்றம் தண்ணீர் தட்டுக்களை வைத்தால் புறாக்கள் தாமாகவே இரையையும் தண்ணீரையும் உட்கொள்ளும். தண்ணீர் தட்டுக்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
இனப்பெருக்கம்
பெண் புறா 5 அல்லது 6 மாதத்திலிருந்து முட்டையிட ஆரம்பிக்கும். ஓவ்வொரு முறையும் இரண்டு முட்டையிடும். அவற்றின் இனப்பெருக்கக் காலம் 5 வருடங்களாகும். புறாக்கள் தங்கள் ஆயுட்காலம் முழுவதும் இணையாகவே இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை புறாக்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கும். இணையில் இருந்து ஒன்று இறந்து போனால் மட்டும் இன்னொரு துணையை ஏற்கும். பெண் மற்றும் ஆண் புறா மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும்.
17 முதல் 18 நாட்களில் அடைகாத்த முட்டைகளிலிருந்து குஞ்சுப் புறாக்கள் வெளிவரும். புறாக்குஞ்சுகள் பொரித்த 10 நாட்கள் வரை கண் திறப்பதில்லை. இத்தருணத்தில் ஆண், பெண்; புறாக்கள் தங்களுடைய வயிற்றில் சுரக்கும் புறாப்பாலினை வெளிக்கொணர்ந்து அலகு மூலம் புறாக்குகுஞ்சுகளின் அலகுகள் வழியே ஊட்டும்.
புறாப்பால் என்பது புறாக்களின் வயிற்றில் சுரக்கும் ஒரு வித பாலுடன் சுமாராகச் செரிமானமான உணவுத் தானியங்களும் சேர்ந்த கலவையாகும். இது எளிதில் புறாக் குஞ்சுகளின் வயிற்றில் சீரணமாககும். புறாக்குஞ்சுகளுக்கு பொரித்த 2 முதல் 3 வாரங்கள் வரை இவை தான் உணவு. அதன் பிறகு குஞ்சுகள் தானாகவே இரை உட்கொண்டு பெரியதாகிவிடும். உடலின் மீது இறகும் 30 நாட்கள் வரை முறைப்பதில்லை.
பெண் புறாக்கள் குஞ்சு பொரித்த 40 நாட்களில் மீண்டும் முட்டைகளை இட்டு அடை காக்க ஆரம்பிக்கும். இவ்வாறாக வருடத்தில் முறையான பராமரிப்பின் மூலம் ஒரு வருடத்தில் குறைந்தது 6 முறை புறாக்குஞ்சுகளை பொரிப்பதன் மூலம் ஒரு ஜோடிப் புறாவிலிருந்து 12 புறாக்குஞ்சுகளை உருவாக்க முடியும்.
புறா இறைச்சி
புறா இறைச்சி சத்துள்ளதாகவும் சுவையானதாகவும் இருப்பதால் மக்களால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்படும் இறைச்சியாகும். ஒரு மாத வயதுடைய இறகுகள் முளைக்காத நிலையில் புறாக்குஞ்சுகளை இறைச்சிக்காக பயன்படுத்தலாம். குஞ்சுப்புறா இறைச்சி, பெரிய புறா இறைச்சியைக் காட்டிலும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
புறா இறைச்சி எளிதில் செரிக்கக்கூடியது. இந்த இறைச்சியில் கெட்டியான நார் போன்ற பொருள் இல்லாது இருப்பதே அதன் மிருதுத் தன்மைக்குக் காரணமாகிறது. இதில் கரையக்கூடிய புரதம் அதிக அளவில் உள்ளது. ஆகவே வயதானோர், நோயிலிருந்து மீண்டோருக்கு மிகவும் ஏற்றது. ஒரு மாத வயதில் புறாக்குஞ்சுகள் 400 கிராம் எடை இருக்கும். இதில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக இறைச்சி கிடைக்கும்.
புறா எச்சம்
50 ஜோடி புறா வளர்த்தால் ஒவ்வொரு வாரமும் புறாக்கூண்டினை சுத்தம் செய்யும் பொழுது சுமார் 10 கிலோ புறா எச்சம் கிடைக்கும்;. இதை சம அளவு மண்ணுடன் கலந்து சில மாதங்கள் கம்போஸ்ட் செய்த பின் நல்ல எருவாகிறது. இதை பூந்தோட்டத்திற்கும், நாற்றுப் பண்ணைகளுக்கும் உபயோகப்படுத்தலாம்.
புறாக்களைத் தாக்கும் நோய்கள்
புறாக்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் புறாக்களில் நோய் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இருப்பினும் சில சமயங்களில் வெள்ளைக்கழிச்சல், காலரா, அம்மை, இன்புளுவன்ஸா, குடற்புழுக்களின் தாக்கம் போன்ற நோய்கள் தாக்கலாம். புறாக்களை நோய்த்தாக்குதலில் இருந்து காப்பாற்ற சமச்சீர் தீவனம் அளித்து, சுகாதாரமான பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். புறா வீட்டினைக் கிருமி நீக்கம் செய்து சுத்தமாக வைக்க வேண்டும்.
நோய்த் தாக்கம் உள்ள புறாக்களை ஆரோக்கியமாக உள்ள புறாக்களிலிருந்து பிரித்து வைத்து கால்நடை மருத்துவர் ஆலோசனையின் படி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் புறாக்களை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும். குடற்புழு நீக்க மருந்துகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.