பால் பண்ணைக்கு தரமான கறவை மாடுகளை வாங்கும் வழிமுறைகள்

பால் பண்ணைத் தொழில் இலாபகரமாக அமைய நல்ல உற்பத்தித் திறனுடைய நல்ல தரமான கறவை மாடுகளைத் தெரிவு செய்வது மிக முக்கியமானதாகும். கறவை மாடுகளை வாங்கும் பொழுது இடைத் தரகர்கள் சொல்வதை மட்டும் நம்பி அதிக பணம் கொடுத்து மாடுகளை வாங்கும் பொழுது அநேக நேரங்களில் மாடுகளை வாங்குபவர்கள் ஏமாந்து போக நேரிடுகிறது. கறவை மாடுகள் வாங்கும் பொழுது பால் கறந்ததை விட நம்மிடத்திற்கு வந்தவுடன் பால் குறைவாக கறப்பதையும், சில சமயங்களில் நோயுற்ற மாடுகளை மறைத்து நம்மிடம் விற்று விடுவதால் நம்மிடத்திற்கு வந்தவுடன் நோய் பாதிப்பும் சில சமயங்களில் மாடுகள் இறந்து போவதும் ஏற்படுகிறது. அதனால் தரமான மாடுகள் எவ்வாறு இருக்கும் நாம் எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்ற விவரங்கள் நமக்குத் தெரிந்திருந்தால் தரகர்கள் உதவியுடன் மாடுகள் வாங்கினாலும் நாம் ஏமாறாமல் நல்ல தரமான மாடுகளை வாங்க முடியும். மாடுகள் வாங்கும் பொழுது மாடுகளின் வெளிப்புறத் தோற்றத்ததைக் கொண்டு நல்ல கறவை மாட்டைத் தெரிவு செய்யலாம். குண்கள் முதல் கால்கள் வரை ஒவ்வொரு பாகமாக பரிசோதித்து பார்க்கும் பொழுது ஏதேனும் ஒரு பாகத்தில் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்து விடுவதால் நோய் பாதித்த மாடுகளைத் தவிர்த்து நல்ல தரமான மாடுகளை வாங்க முடியும்.

கண்கள்:
கண்கள் பெரிதாகவும், பிரகாசமாகவும் கருவிழிகள் நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும். நல்ல பார்வையுள்ள மாடுகள் இடையூறுகைளத் தாண்டிச் செல்லும். பார்வை மங்கல், பார்வை குறைந்த அலலது பார்வை இழந்த மாடுகள் படிகள், பள்ளம், கல் முதலியவற்றில் செல்லும் பொழுது இடறும். கண் வீக்கம், நீர் வடிதல், சிவந்து போதல், மஞ்சள் காமாலை, சீழ் வடிதல், சதை வளர்தல் போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும். மாடுகள் மூளை வியாதிகளினாலும், காது சம்பந்தப்பட்ட வியாதிகளினாலும் பாதிக்கப்பட்டிருந்தால் கண்பார்வை சுழன்று கொண்டேயிருக்கும். மூக்கிற்கு மேல் மண்டையோட்டிற்குள் வளரும் ஒரு விதப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் பாதிக்கப்பட்ட பகுதியின் கண் தனியாக வெளியே வந்தது போல் தெரியும். ஆகையால் இரு கண்களும் ஒரு சேர நன்றாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். மாடுகள் வாங்கும் போது கண் பார்வை, மேல் , கீழ், இடது, வலது அசைவுகள், கண்ணின் நிறம், விழித்திரை ஆகியவற்றைக் கவனித்து நோயில்லாதைவகளாக வாங்க வேண்டும்.

காதுகள்:
ஆரோக்கியமான மாடு அடிக்கடி காதைத் திருப்பிக் கொண்டோ, ஈயடித்துக் கொண்டோ இருக்கும். சாதாரணமாக மாடுகள் சுற்றுப் புறச்சூழ்நிலைக்கேற்ப எல்லாப் பக்கங்களிலும் காதுகளைத் திருப்ப முடியும். சத்தம் வரும் திசைக்கேற்ப மாடு திரும்பாமல் அந்தப் பக்கக் காதை மட்டும் திருப்பிக் கவனிக்கும். காதுகள் சோர்வுடன் அசைவில்லாமல் தொங்கிப் போயிருந்தால் அது நோய்க்கு அறிகுறி. மாடுகளின் உடல் வெப்பத்தைக் காதின் அடிப்பாகத்தை உள்ளங்ககைளால் பிடித்துப் பார்த்து அறியலாம். காது உணர்ச்சியுள்ள பாகமாதலால் சாதாரணமாக மாடுகள் காதுகளைப் பிடிப்பதை விருமபுவதில்லை. காதில் புண், சீழ் வடிதல், கெட்ட வாடை, கட்டி, அழுக்குப் படிந்திருத்தல் முதவியவற்றைக் கவனிக்க வேண்டும். உள் காது, மூளை முதலியற்றில் நோய் உள்ள மாடுகள் தன்னைத் தானே சுற்றி வரும். கொட்டகையின் ஒரு மூலையில் தலையைச் சுவருடன் இடித்துக் கொண்டு நின்று இருக்கும். நிலை கொள்ளாமல் தடுமாறும். முன் பின் தள்ளிப் பார்த்தல், பக்கவாட்டில் தள்ளிப் பார்த்தல் முதலிய சோதனைகளைச் செய்வதன் மூலம் இந்நோய்களை எளிதில் கண்டறியலாம்.

மூக்கு:
ஆரோக்கியமான மாட்டின் மூக்கின் முன்பகுதி ஈரமாகவும், மூக்குத் துவாரங்கள் அகன்று பெரியதாகவும் இருக்கும். சீரான சுவாசம், இரு மூக்குத் துவாரங்கள் வழியே நிலையான மூச்சு விட்டு வாங்குதல், சாதாரண ஆரோக்கியமாக மூச்சு விடும் சிறிய சப்தம், மூக்குத் தோல் விரிந்து சுருங்குதல் முதலியவற்றை ஆரோக்கியமான மாட்டில்; காணலாம்;. மூச்சு விடும் பொழுது குறட்டை சத்தம் கேட்கக் கூடாது. மூக்கில் அடைப்பிருந்தால் குறட்டை விடும் சத்தம் எப்போதும் கேட்கும். கட்டி, சதை வளருதல், மூக்கடைப்பான் நோய், சளியினால் மூக்கடைப்பு போன்றவை இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். மூக்குத் துவாரங்களில் கை விரலை விட்டு பரிசோதித்துப் பார்க்கலாம்;. ஆரோக்கியமான மூக்குத் துவாரம் ஈரப்பகையுடன் சிவப்பாகவும். குறட்டையில்லாமல் சீரான சுவாசத்தில் இருக்கும். மூக்கடைப்பான் நோயினால் மூக்கு உள் துவாரத்தில் சொரசொரப்பாகவும், முத்து முத்தாகவும் சதை வளர்ந்திருக்கும்.

மேல் மூக்கெலும்புக்குள் சில சமயம் புறறு நோய் வருவதுண்டு. இதனால் மூக்கிலிருந்து சளி, சீழ், இரத்தம் வடிதல் முதலிய ஆரோக்கியம் குறைவான கெட்ட நீர் வடியும். மூக்குத் துவாரங்கள் அடைபட்டால் வாயைத் திறந்து கொண்டு வாய்வழியே மூச்சு விடும். சில சமயம் நாசித் துவாரத்தின் உள்ளே கட்டி வரும். இடது பக்கம் கட்டியிருந்தால் இடது நாசித் துவாரத்pலிருந்து காற்று வருவது தடைபடும். வலது நாசித்துவாரமும் வாயும் இப்போது இந்தப் பணியைச் செய்யும். மூக்கு அசுத்தமாகவும், ஈ மொய்த்துக் கொண்டும் கெட்ட வாடையுடன் நீர் வழிந்து கொண்டிருந்தால் அது நோயைக் குறிக்கும். ஆரோக்கியமான மாடுகள் எப்போதும் நாக்கால் மூக்கைத் துடைத்துக் ;கொண்டிருக்கும்.

வாய்:
மாடு வாங்குவதில் வாய்ப்பரிசோதனை மிகவும் முக்கியம். முதலில் மேலுதடும் கீழுதடும் சீராக இணைகின்றனவா எனக் கவனிக்க வேண்டும். உதடு, நாக்கு, வாய் உள் பாகத்தில் மரு, வீக்கம், புண்கள் முதலியன இல்லாமல் இருக்க வேண்டும். பல் வரிசை சீராக இருக்க வேண்டும். கடைவாய்ப்பற்கள் எல்லாவற்றையும் வாயைத் திறந்து நாக்கை விலக்கிப் பார்க்க வேண்டும். அதிகத் தேய்மானம், சொத்தைப் பல், பல்குத்திக் கடைவாயில் புண், துர்நாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். கொக்கிப் பல் உள்ள மாடு தீவனம் தின்னும் போது பல் உள் வாயில் குத்துவதால் வலி ஏற்பட்டுச் சக்கை சக்கையாயத் தீவனத்தைக் கக்கி விடும். மாடுகள் நல்ல ஆரோக்கியமானதாக இருந்து கொக்கிப்பல் மட்டும் இருந்தால் மாடுகளை வாங்கி கால்நடை மருத்துவரின் உதவியுடன் கொக்கிப்பல்லை சரி செய்து விடலாம்.

பற்கள்:
பற்களைப் பார்த்து மாட்டின் வயதைக் கணக்கிடலாம். மாடுகளுக்கு மேல் தாடையில் முன் வெட்டுப் பற்கள் இல்லை. அதனால் மாடுகளின் வயதை நிர்ணயம் செய்யும் பொழுது கீழ்த்தாடையில் உள்ள 4 ஜோடி முன்வெட்டுப் பற்களைப் பார்த்து வயதைக் கணக்கிடலாம். பால்பற்கள் தற்காலிகமானவை. இவை உளி போன்ற தோற்றமுடையதாய், சிறியதாய், இளவயது மாடுகளின் சிறிய தாடைக்கு அடக்கமாய்; இருக்கும். பால்பற்கள் இரண்டரை வயதில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பால்பற்கள் விழும்பொழுது ஜோடி ஜோடியாய் ஒரு வருட இடைவெளியில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும.; மாடுகளில் நிரந்தர முன்வெட்டுப்பற்கள் 2, 4, 6, 8, என்று இருந்தால் அவற்றின் வயது முறையே 2 ½, 3 ½, 4 ½ , மற்றும் 5 வயதிற்கு மேல் எனத் தெரிந்து கொள்ளலாம். மாடுகள் வாங்கும் பொழுது இளவயது மாடுகள் தான் வாங்க வேண்டும்.

இரண்டாவது ஈற்றில் உள்ள மாடுகள் அல்லது 4 நிரந்தரப் பற்கள் கொண்ட மாடுகளை வாங்க வேண்டும். சில சமயங்களில் மாடுகள் வாங்கும் பொழுது மாடுகளின் வயது அதிகம் இருக்கும். ஆனால் ஒரு முறை தான் கன்று ஈன்றிருக்கும். இவ்வாறு வயது அதிகமான மாடுகளை வாங்குவது நமக்கு நட்டத்தைத் தான் தரும். அதனால் மாடுகள் இள வயது மாடுகளா அ;ல்லது வயது அதிகமான மாடுகளா என்பதை நாம் பற்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். நல்ல ஆரோக்கியமான மாடு அடிக்கடி அசை போட்டுக் கொண்டு நாக்கால் மூக்கு மற்றும் பிறபாகங்களை நக்கிக் கொண்டும், கெட்ட வாடை இல்லாமலும், சுமாரான நுரையும் எச்சிலும் வடிய நாக்கானது இளம் ரோஜா நிறத்தில் இருக்கும். வாயில் அதிக நுரையுடன் கூடிய எச்சில் வடிந்து கொண்டு, அசை போடாமல் தாடை, முன்கால்கள், கட்டிய இடம் முதலியவற்றில் எச்சில் வடிந்து இருந்தால் மாடு நோய்வாய்ப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொம்பு:
கொம்புகள் இருந்தால் மாடு வாங்கும் போது இரண்டு கொம்புகளையும் அடியிலிருந்து நுனிவரை கையால் தடவிப் பார்க்க வேண்டும். பூண் போட்டிருந்தால் அதைக் கழற்றிப் பார்க்க வேண்டும். இரு கொம்புகளும் சீராகவும், சமமாகவும், வலுவாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும். மிகவும் மெல்லிய கொம்புகள் இருந்தால் மாடு குனிந்து நிமிர்ந்து பக்கவாட்டில் தலையசைக்கும் போது தானே காயம் ஏற்படுத்திக் கொள்கிறது. கொம்பு சீவும் போது குருத்தில் காயம்பட வாய்ப்புண்டு. இந்தப் புண் புரையோடி நாற்றம் ஏற்பட்டுக் கொம்பை எடுக்கும்படி ஆகிவிடுவதுண்டு. இந்த மாதிரிப் புண் உள்ள மாடுகளைச் சந்தையில் சாமர்த்தியமாக மெழுகு தடவி, சாயம்பூசி, குப்பி வைத்து விற்று விடுவதுண்டு. ஆரம்பத்தில் அழகாகக் தெரியும்.

வாங்கி ஒரு வாரம் கழித்துப் பார்தத்hல் கொம்பு அழுகியிருப்பது தெரியும். கொம்பில் அடிபட்டால் மூக்கிலிருந்து இரத்தம் கசியும். மாடுகளின் கொம்புகளில் புற்று நோய் ஏற்படுவதுண்டு. புற்று நோய் தாக்கப்பட்ட கொம்பானது நல்ல கொம்பை விட சற்று வளைந்த மாதிரியோ, அடிப்பாகத்தில் லேசாக அசையவோ செய்யும். வியாபாரிகள் இதனைத் தோல் கொம்பு எனந்று சொல்லி விற்று விடுவர். தோல் கொம்பு மாடுகளுக்குப் பிறவியிலிருந்தே இரண்டு கொம்புகளும் இரப்பர் போன்று இருக்கும். இதனால் பிரச்சினை இல்லை. ஆனால் வளர்ந்த மாட்டில் ஏதேனும் ஒரு கொம்பு மட்டும் சற்று வளைந்து அசைந்தால் புற்று நோய் பாதிப்புள்ளது என்று அறிந்து கொள்ளலாம். புற்று நோய் உள்ள மாடுகளை வாங்கக் கூடாது. ஆகையால் இரு கொம்புகளையும் மிகக் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

தலை:
இனத்திற்கேற்ப தலைப்பகுதி இருக்க வேண்டும். தலை அழகாகவும். சீராகவும் அமைந்திருக்க வேண்டும். நடுக் கோட்டிலிருந்து இடது, வலது புறங்கள் சீராகவும் சமமாகவும் இருக்க வேண்டும். தலை அசைவு, மேல், கீழ், பக்க வாட்டங்கள் திரும்பும் தன்மை, போன்றவற்றையும் கவனிக்க வேண்டும் தலை அசைவுடன் கண் அசைவையும் சீராகக் கவனிக்க வேண்டும். தலையை அளவுக்கு மீறி அனாவசியமாக ஆட்டக் கூடாது. அடிக்கடி இருமுதல், தும்முதல், கண் கிமிட்டுல் எதைப் பார்த்தாலும் மிரளுதல் இருக்கக் கூடாது. தாடை எலும்புகள்; பலமாகவும், சீரானதாகவும் நன்றாக அசைபோடுவதாகவும் இருக்க வேண்டும். தலையில் கட்டி, புண், காயம் முதலியவை இருக்கக் கூடாது. தாடை வீக்கம், நீர் சுரத்தல், போன்றவை நாட்பட்ட நோய்த் தொல்லையைக் குறிக்கும். நோய் உள்ள மாடுகள் தலை சற்று வீங்கிய மாதிரி இருக்கும். அதனால் தலையானது நோய் அறிகுறிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும்.

கழுத்து:
கழுத்து பக்கவாட்டில் தட்டையாகவும் மெலிந்தும், நீளமாகவும் இருக்க வேண்டும். நோயுள்ள, பலம் குன்றிய மாடுகள் கழுத்து, திமில், முதுகுப்புறம் சற்று அழுத்திப் பிடித்தால் கூனிக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விடும். சில சமயம் நாக்கை நீட்டிக் கொண்டு வலியால் முணங்குவதுண்டு. சுவாச நோய் உள்ள மாடுகள் தொண்டைப்புறம் சற்று அழுத்திப் பிடித்தால், விடாமல் சிறிது நேரம் இருமும். கழுத்து சீராகவும் இரு பக்கமும் மேல், கீழ்ப்புறம், பின் அசைவுகள், ஒழுங்காகவும் இருக்க வேண்டும்.

திமில்:
இந்திய மாடுகளுக்குத் திமில் உண்டு. வெளிநாட்டுச் சாதி மாடுகளுக்குத் திமில் இல்லை. கலப்பினத்தில் இந்தியக் கலப்பிற்குத் தகுந்தவாறு திமில் இருக்கும். நல்ல வெளிநாட்டுக் கலப்பினக் கறவை மாடுகளுக்குத் திமில் மிகச் சிறியதாக இருக்க வேண்டும்.

மார்பு:
நெஞ்சின் கீழ்ப்பகுதி நன்கு விரிந்திருக்க வேண்டும. விலா எலும்புகள் அகலமாகவும், தட்டையாகவும், நீளமாகவும் விரிந்து இருக்க வேண்டும். இரு பக்கமும் சீராக சுவாசத்திற்கேற்ப மார்பும், வயிறும் ஒன்றுபட இயங்குவதும் காயம், வீக்கம், கட்டி புண் இல்லாமலும் இருக்க வேண்டும். மாட்டை நடத்தியும் ஓட்டியும் பார்த்து வாங்குதல் நல்லது. இருதயம், சுவாசப்பை நோய் உள்ள மாடுகள் நடையிலும், ஓட்டத்திலும் சிரமப்படுவது தெரியும். மேலும் ஓட்டத்திற்குப் பிறகு பெருமூச்சு, வாய் வழி மூச்சு விடுதல், சுயநிலைக்கு வரக் காலதாமதம் ஆகுதல் Nhன்ற அறிகுறிகள் காணலாம்.

சில மாடுகள் மேட்டில் ஏறும் போதும், பள்ளத்தில் இறங்கும் போதும் மிகவும் சிரமப்படும். இந்த நோய் உள்ள மாடுகளின் கழுத்து நரம்புகள் புடைத்திருக்கும். நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும். முதுகை அழுத்திப் பிடித்தால் அப்படியே வலியால் வாய்திறந்து நாக்கை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து விடும். முதுகு சீராகவும், ஏற்ற இறக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். முதுகில் கை வைத்துச் சுமாரக அழுத்தித் தடவிப் பார்த்து வாங்க வேண்டும். வலியிருந்தால் நெளியும். உட்கார்ந்து விடும் அல்லது தடுமாறும்.

முதுகு:
முதுகு, வால்பகுதி வரை சமமட்டடமாக இருக்க வேண்டும். முதுகு இடுப்பு வரை மேல் பாகம் குழிப்புண், ஆறாத புண்கள் உள்ளனவா என்று முடிகளை நன்றாக விலக்கிப் பார்க்க வேண்டும்.

உடல்:
உடல் இரு புறமும் சமமமாகவும், சீராகவும், சற்று நீளமாகவும் இருக்க வேண்டும். மாட்டின் வால் பகுதியில் நின்று கொண்டு உடலின் வலது இடது ஆகிய இரு பக்கங்களையும் பார்க்க வேண்டும். இரு பக்கமும் ஓரளவிற்கு ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பக்கத்தில் மற்ற பக்கத்தை விட அதிக அளவில் புடைத்திருந்தாலும் அந்த புடைத்த பகுதியை தொட்டால் மாடு வலியை உணர்ந்தால் அந்தப் பக்கத்தில் ஏதோ பிரச்சினை என்று கொள்ளலாம். மாடானது அதிக சதைப்பிடிப்புடனோ அல்லது எலும்பும் தோலுமாக மெலிந்தோ இருக்கக்கூடாது. முட்டின் விலா எலும்புகளும், இடுப்பெலும்பின் மேல் பகுதியும் இலேசாகத் தெரியுமாறு மாடு இலேசான சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும்.

வயிறு:
மாட்டின் வயிற்றை இரு புறத்தைக் கவனிக்க வேண்டும். வயிறு நிரம்பத் தீவனம் தின்று தண்ணீர் குடித்த மாடுகள் இருபக்கமும் சீராக அசை போட்டுக் கொண்டு ஆரோக்கியத்துடன் இருக்கும். வயிறு அளவுக்கு மீறிப் பெரிதாக இருந்தால் காற்றுத் தடை, கட்டி, சினை, வயிற்றில் பூச்சி. ஈரல் நோய், இரத்த சோகை இருக்க வாய்ப்புண்டு. சத்துக் குறைவு, பஞ்சம், நீண்ட நாட்கள் நோய்ப்பட்ட மாடுகள், குறைந்த தீவனம், பராமரிப்பில் கவனக்குறைவு உள்ள மாடுகளில் வயிறானது அளவுக்கு அதிகமாக குழி விழுந்து காலியாக இருப்பது போன்று இருக்கும். வயிறு பெரிதாகப் பானை போன்று தெரிந்தால் அது நோயுள்ள மாட்டிற்கு அறிகுறி. சில சமயம் நோயின் காரணமாக, வயிறு உப்புசம் ஏற்பட்டு இடது புறம் அளவுக்கு மீறி மேடிட்டு இருக்கும். நாம் கைகளால் தட்டினால் மேளம் அடிக்கும் சத்தம் வரும். காற்றடைத்த பலூன் மாதிரி உப்பிவிடும். அல்லது அளவுக்கு அதிகமான தீவனம் வயிற்றில் அடைத்துக் கொண்டு இறுகி விடுவதுண்டு. மாடு வாங்கும் பொழுது இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வயிற்றுப் பகுதியில் குடல் இறக்கம், கட்டி, அறுவை சிகிச்சை செய்த தழும்பு, வீக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.

இடுப்பு:
இடுப்பெலும்புகள் சமச்சீராக அமைந்திருக்க வேண்டும். சில சமயம் ஏதேனும் ஒரு இடுப்பெலும்பு முறிந்து ஒரு பக்கம் உயரம் குறைவாகத் தெரியும். சில சமயம் விபத்தில் அடிபட்டு இடுப்பில் எலும்பு ஒடிந்து கூடி இடுப்புப் பாதை நாளாவட்டத்தில் குறுகி விடும். வெளியில் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாது. ஆனால் விபத்துக்குள்ளான மாடுகள் பிற்காலத்தில் சினைபட்டுக் கன்று போடும் பொழுது குறுகிய இடுப்புப் பாதை காரணமாக கன்று வெளிவரமுடியாமல் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டி வருகிறது. இதை கால்நடை மருத்துவர் உதவியுடன் பரிசோதனை செய்து கண்டறிந்து கொள்ளலாம்;.

தோல்:
தோல் சீரான முடியுடன், மினுமினுப்பாக, மிருதுத் தன்மையுடன் இருக்க வேண்டும். நோயுற்ற மாடுகளில் காய்ந்த தோல், முரட்டு முடி, கொழுப்புக் குறைவு, தோல் உணர்ச்சி குறைதல் போன்றவை காணப்படும். மாடுகளில் அதிக அளவு முடியுடனும், முடிகள் சிலிர்த்துக் கொண்டும் மாடுகள் எப்பொழுதும் இளைத்துக் கொண்டும் இருந்தால் அம்மாடுகள் காணை நோய் பாதித்து சரியான மாடுகள் என்று கொள்ள வேண்டும். இத்தகைய மாடுகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இத்தகைய மாடுகளில் சினைப் பிடிப்பதில் அதிக சிரமம் ஏற்படும். தோலில் சொறி, படை, வட்ட வட்டமான முடிகள் இல்லாமல் இருப்பது போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்.

மடி:
பஞ்சு போன்று மிருதுவாகவும், உடலுடன் நன்கு பொருந்தியும், பெரிதாகவும், இரு பக்கமும் சமமாகவும் இருக்க வேண்டும். பால் வெண்மையாக அல்லது வெளிர் மஞ்சள் நிறத்துடன் இருக்க வேண்டும். மடியின் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பக்கத்தில் வீக்கமிருந்தாலோ , சிவந்திருந்தாலோ, மடியை தொட்டுப் பார்க்கும் பொழுது சூடாகவோ, வலியில் காலை தூக்கினாலோ மடி நோய் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். வீக்கம் ஏற்பட்ட மடியின் பாகத்தில் மடி நோய் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளாகும். மேலும் பாதிக்கப்பட்ட மடிப் பக்கத்தில் பாலைக் கறந்து பார்க்க வேண்டும். மடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பாலானது நீர்த்து, திரிதிரியாக, இரத்தம் கலந்து, இரத்தம் சீழ் கலந்து இருக்கும். “மடி இல்லையேல் மாடு இல்லை”. அதனால் மடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை வாங்கக்கூடாது. மடிக்காம்புகள் மடியின் நாக்கு பகுதிகளிலும் சமஇடைவெளியில் அமைந்திருக்க வேண்டும. காம்புகள் மிகச் சிறியதாகவும், மிகப் பெரியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக கைப்பிடிக்கும் அளவி;ற்கு உருளை வடிவில் இருக்க வேண்டும். காம்புகளின் நுனியில் பால் வரும் துளை அமைந்திருக்க வேண்டும். பால் கறக்கும் பொழுது நான்கு காம்புகளிலும்; பால் சிதறாமல் ஒரே கற்றையாக கறக்கச் சிரமமின்றி வர வேண்டும். பால்மடி இரத்த நாளங்கள் பெரியதாகவும், சீராகவும், வளைவு நெளிவுகளுடனும் இருக்க வேண்டும்.

கறவை:
பால் கறக்கும் பொழுது மாடுகளின் கால்களைக் கட்டியோ, தடியை வைத்து பயமுறுத்தியோ மூக்கனாங் கயிற்றைப் பிடித்துக் கொண்டோ கறக்க வேண்டிய ;பழக்கமுள்ள மாடுகளை வாங்கக்கூடாது.

பால் அளவு:
மாட்டின் பால் கறக்கும் அளவைத் தீர்மானிக்க தொடர்ந்து மூன்று வேளை பால் கறந்து பார்க்க வேண்டும். ஏதாவது ஒரு நேரம் அல்லது இரு நேரம் மட்டும் கறந்து பார்;த்தால் நாம் ஏமாறுவதற்கு நிறைய வாய்ப்புண்டு. ஏனெனில் மாடு பார்க்க காலையில் செல்வது தெரிந்தால் ஏமாற்ற நினைப்பவர்கள் முதல் நாள் பாலை சரியாக கறக்காமல் விடுவர். அதனால் நாம் காலையில் பாலைக் கறக்கும் பொழுது அதிக அளவில் இருப்பது போல தெரியும். அதே மாதிரி மாலையில் சென்று பார்க்கும் பொழுது காலைப் பாலை சரியாக கறக்காமல் விட்டு விடுவர். இதனால் பால் அதிக அளவில் இருப்பது போல் தெரியும். நம்மிடத்திற்கு வந்ததும் பால் கறவை குறைந்தது தெரிந்ததும் நாம் ஏமாற்றப்பட்டிருப்பது புரியும்.

சாணம்:
மாடுகள் சாணம் போடும் பொழுது கவனிக்க வேண்டும். சாணமானது மிகக் கெட்டியாகவோ, மிகவும் கழிச்சலுடனோ, நாற்றத்துடனோ இருக்கக்கூடாது. கழிச்சல் இருந்தால் மாடுகளின் கால்கள், மடி மற்றும் ஆசனவாய்ப்பகுதிகளில் கழிச்சல் ஒட்டிக் கொண்டிருக்கும். வயிறு உப்புசமும், கழிச்சலும் ஒரு சேர இருந்தால் செரிமானக் கோளாறு உள்ளது என்பதைத் தெரிந்து நாம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பிறப்புறுப்பு:
மாடுகளின் பிறப்புறுப்பானது எந்த வித புண்களும் இல்லாமல் இருக்க வேண்டும். சமீபத்தில் ஈன்ற மாடுகளை வாங்கும் பொழுது பிறப்புறுப்பிலிருந்து திரவம் வடிந்து கொண்டிருக்கும். இந்த திரவமானது சீழ் பிடிக்காமலும், கெட்ட வாடையுடனும் இல்லாமல் இருக்க வேண்டும். பிறப்புறுப்பிலிருந்து வடியும் திரவம் துர்நாற்றத்துடனும், சீழும் இரத்தமும் கலந்து வந்தால் கர்ப்பப்பை நோய் இருப்பதற்கான அறிகுறிகள். சுpனைப் பருவத்திலுள்ள மாடுகளாக இருக்கும் பொழுது சுத்தமான எண்ணெய் போன்று திரவம் வடிந்து கொண்டிருக்கும். வடியும் திரவத்துடன் தயிர் போன்று திரிதிரியாக கலந்து வந்தால் கர்ப்பப்பையில் புண் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு கர்ப்பப்பை நோயால் பாதித்த மாடுகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

கால்கள்:
கால்கள் வலுவுடனும், பலம் வாய்ந்த குளம்புகளுடனும் இருக்க வேண்டும். நடக்கும் சமயம் கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் நொண்டாமல், சுண்டாமல் இருக்க வேண்டும். கால்களின் தொடைப்பகுதி நேராக உட்பக்கமாகவோ, வெளிப்பக்கமாகவோ வளையாமல் இருக்க வேண்டும். உட்பக்கமாக வளைந்திருந்தால் கால்கள் மடியை அழுத்துவதால் மடிக்கு தொந்தரவாக இருக்கும். கால்கள் கிட்டிக்கால்களாகவோ அல்லது அதிகமாக வெளிப்பக்கமாக வளைந்திருந்தாலோ மாடுகள் எளிதில் ஈரத் தரையில் வழுக்கி விழுந்து மூட்டு விலகுதல் இடுப்பு எலும்புகள் ஒடிந்து போதல் போன்றவை ஏற்படலாம்.

இவ்வாறு கண்கள் முதல் கால்கள் வரை நன்கு பரிசோதித்து மாடுகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு கால்நடை மருத்துவரிம் காட்டி மீண்டும் மாட்டினைப் பரிசோதித்து விட்டு மாடுகளை வாங்கும் பொழுது நல்ல தரமான மாடுகளை நமது பண்ணை;க்கு வாங்கி அதன் மூலம் அதிக கன்றுகளும், அதிக பாலும் பெற்று பால்பண்ணைத் தொழிலானது இலாபகரமானதாக இருக்கும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்