விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (32). டிப்ளமோ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால், பெற்றோரைப் பார்த்து, விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு முழு நேர விவசாயியாக முனைப்புடன் செயலாற்றி வருகிறார். இவர் முன்னோர் பயன்படுத்திய பாரம்பரியக் காய்கறிகளை மீட்டுருவாக்கம் செய்வதற்காக, அவற்றின் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
பருத்தி சாகுபடி செய்து வருவதோடு, நர்சரி கார்டனும் நடத்தி வருகிறார். பாரம்பரியக் காய்கறிகளில்தான் சத்துக்கள் அதிகம். கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக் காய்கறி ரகங்களை பல்வேறு இடங்களுக்கும் சென்று சேகரித்து மீட்டுருவாக்கம் செய்து விதைகளைச் சேகரித்து வருகிறார்.
அதோடு, நாட்டு கொத்தமல்லி, கீரை வகைகள், கொத்தவரங்காய், நாட்டு முள்ளங்கி போன்ற காய்களையும் பயிர் செய்து வருகிறார். இதுவரை 12,256 விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கியுள்ளார்.600-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து நாட்டு காய்கறி விதைகளை பெற்றுச்செல்கின்றனர். மேலும் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்கும் இலவசமாக விதைகளை வழங்கி பயிரிடும் முறைகளையும் சொல்லித் தருகிறார் சரவணக்குமார்.
இவரது பணியை பாராட்டும் விதமாக இயற்கையின் மீதும், விவசாயத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்ட அருப்புக்கோட்டை டி.எஸ்.பி சகாயஜோஸ் நேரில் சென்று தமிழர்களின் பாரம்பரியமான விவசாயத்தையும் மரபு மாறாத விதைகளையும் மீட்டு கலப்படம் இல்லாத நாட்டு விதைகளை விவசாயிகளுக்கு எடுத்து செல்லும் சரவணக்குமாரை பாராட்டி அவரது செயலுக்கு தொடர்ந்து ஆதரவு தருவாதாக தெரிவித்தார்.
சரவணக்குமார்: +91 99949 64714