பாரம்பரியமாக ஜல்லிகட்டு காளை வளர்க்கும் குடும்பம் | அவனியாபுரம் அழகர்

ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை என்பது அனைவரும் அறிந்த விசயம். மதுரையில் ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்கள் உலக புகழ் பெற்றவை. இதில் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு எப்பொழுதும் அதிகளவில் இருப்பதற்கு முக்கிய காரணம் மாடுகளுக்கு தேவையான பச்சை தீவனம் ஆண்டு முழுவதும் கிடைப்பதுதான். மேலும், இன்றும் பாரம்பரியம் மாறாமல் பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளனர்.

அப்படி ஒரு குடும்பத்தினர்தான் திரு.அழகர் அவர்கள். பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர். நாம் அவனியாபுரத்திற்கு ஜல்லிக்கட்டு வளர்ப்பவர்கள் குறித்து தேடுதலில் இருந்தபோது எதார்த்தமாக அறிமுகம் ஆனவர் சகோதரர் அழகர் அவர்கள். பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகின்றோம் என்று கூறிய உடன், பேட்டிக்கு நாங்கள் கேட்டுக் கொண்டோம். தாராளமாக வாங்க என்று அழைப்பு விடுத்தார்.

கிட்டதட்ட 10 நாட்களுக்கு பிறகே அவரை வீடியோ எடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. காலை 7 மணிக்கு என்று ஆரம்பித்த திட்டம் , இறுதியாக 10 மணிக்கு மேலதான் பேட்டி எடுக்க ஆரம்பித்தோம். அவனியாபுரம் பகுதி நகர்புறமாகிவிட்டது என்று நாம் எண்ணியிருந்ததை இவர் குடியிருக்கும் பகுதி தகர்த்து எறிந்தது. ஏனெனில் இப்பகுதியைச் சுற்றிலும் மாடுகள் வீட்டுக்கு வீடு இருந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தோம்.

வீட்டிற்குச் சென்றதும், எங்களுக்காக காத்திருந்த அழகர் அவர்கள், எங்களை கண்டதும் அன்புடன் அழைத்துச் சென்றார். அவரது வீடு அந்த காலத்தில் கட்டப்பட்ட வீடு என்பதால், மரபின் வாசம் வீசம் வீசியது. மாட்டு கொட்டகை வீட்டுக்குள் பெரிய அளவில் இருந்தது. அந்த காலத்தில் நாம் வசிக்கும் இடத்தைப்போல் மாடுகளுக்கும் கொட்டகை அமைப்பது வழக்கம்.

அப்படித்தான் இவரது வீட்டிலும் கொட்டகை இருந்தது. 100 காளைகள் வளர்த்த அனுபவமுள்ள அவரது வீட்டில், தற்போது இரண்டு காளைகள் நின்று கொண்டிருந்தது. மஞ்சள், குங்குமம் என்று குளித்த ஈரத்துடன், வீரம் நிறைந்த கொம்புகளுடன் தலையை ஆட்டியபடி நம்மை பார்த்தது. நாட்டுமாட்டுக் காளை வீட்டில் பாசமாகவும், புலிக்குளம் காரி காளை முரடன் என்றும் நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு புலிக்குளம் மாடுமேல்தான் ஒரு கண்.

அழகரின் மூன்று அழகிய குழந்தைகள் படித்துக் கொண்டும், கலர் கோழிக் குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். அவரது மகன்தான் அழகர் அவர்களுடன் ஜல்லிக்கட்டு காளையை தடவி கொடுத்துக் கொண்டு இருந்தார். என் மகனுக்கு இந்த மாடுனா அவ்ளோ இஷ்டம் சார். என்னை விட இவன்தான் இதை நல்லா பார்த்துக் கொள்கிறான் என்று மகிழ்ச்சியுடன் அவர் கூறுகையில், தலைமுறையின் வீரியம் நம் கண்ணில் தென்படாமல் இல்லை.

அதன் பிறகு அவரது மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்தார் அழகர். ஒன்னுக்குள் ஒன்னாக சொந்தம் விட்டுபோகக் கூடாது என்பதற்காக தனது அம்மாவின் அண்ணன் மகளை திருமணம் செய்துள்ளார் அழகர். அவரது மனைவியும் ஜல்லிக்கட்டு மேல் அவவ்ளவு ஈடுபாடு உடையவர் என்பதை அழகர் ஜல்லிக்கட்டில் தான் வாங்கிய காயங்களை நமக்கு காட்டியபோதுதான் புரிந்தது. இத்தனை தைரியம் அந்த குடும்ப பெண்களுக்கு இருப்பது நமக்குதான் ஆச்சர்யத்தை அளித்தது. அவர்கள் இதெல்லாம் எங்களுக்கு மிகவும் சாதாரணம் என்பதுபோல் இருந்தனர்.

இறுதியாக நாங்கள் பேட்டியில் இறங்கினோம். 1 மணி நேரத்தில் அனைத்தும் முடிந்துவிட்டது. அதற்கு முந்தைய நாள் நீண்ட தூர பயணம் என்பதால் நான் சற்று களைப்பாகவே இருந்தேன். ஆனாலும் எனக்கு இந்த பேட்டி மன நிறைவை அளித்தது. நிறைய தகவல்களை அழகர் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மிகவும் பொறுமையாக, எந்தவித பதட்டமும் இன்றி, தேவையான விசயங்களை எடுத்துக் கூறினார். அவர் பேச்சை நீங்கள் விடியோவில் கேட்டால் புரியும்.

பேட்டி முடிந்ததும், தேனீர் கிடைத்தது. அத்தனை சுவை, மாட்டு பாலா அல்லது பாக்கெட் பாலா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வளவு திக்காக, அளவுக்கு அதிகமாகவே சுவையாக இருந்தது. அழகர் அவர்களின் குடும்பங்களுக்கு எங்களை மிகவும் பிடித்துவிட்டது. எங்களுக்கும்தான். சாப்பிட்டுதான் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நாங்கள்தான் ஜல்லிக்கட்டு விருந்து சாப்பிட நிச்சயமாக வருகின்றோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அழகர் அவர்களின் மாடும், அவரது பேச்சும், அன்பும் எங்களுடன் வந்து கொண்டே இருந்தது. அவர் எங்களிடம் காட்டிய காயங்களை மறக்க முடியவில்லை. அந்த குடும்பமே ஜல்லிக்கட்டு காளைகள் மீது இத்தனை ப்ரியம் வைத்திருப்பதும், அதற்காக தங்களையே ஒப்படைப்பதும் என நினைத்துப் பார்க்கையில், அந்த வீரம் எங்களுக்குள்ளும் புகுந்தது உண்மைதான்.

அடுத்த வீடியா குறித்த பயண அனுபவத்தை நாளை கேளுங்கள். அதுவரை காத்திருங்கள்.

நன்றிகள்.
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்