செய்திகள்மானியம் & கடன்

பசு மாடுகளுக்கு 70 சதவீத மானியத்துடன் காப்பீடு

Insurance with 70 per cent subsidy for cows

எதிர்பாராத உயிரிழப்பின்போது, நம் குடும்பத்தினருக்கு துணை நிற்பது நாம் எடுக்கும் காப்பீடு. அதனால்தான் அனைவரும் ஆயுள் காப்பீடு செய்துகொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், இயற்கை சீற்றங்களால், பயிர்கள் சேதமடையும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க ஏதுவாக பயிர்க்காப்பீடு செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்குச் சொந்தமான நாட்டு மாடுகள், செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை (Cattle Insurance) செயல்படுத்த மத்தியப் பிரதேச அரசு பசு தன் பீமா யோஜனா (Pashudhan Bima Yojana)எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

கால்நடைகளின் இறப்பால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை இந்தத் திட்டம் குறைக்கும் என்றும், கால்நடைகளை நம்பி வாழும் விவசாயிகளுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்றும் மத்திய பிரதேச விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எத்தனை கால்நடைகள் ?

ஒரு பயனாளி ஐந்து யூனிட் விலங்குகளுக்கு காப்பீடு செய்யலாம். செம்மறி ஆடு, ஆடு, மாடு, எருமை போன்ற வகைகளில் 10 கால்நடை விலங்குகள் சேர்ந்தது ஒரு யூனிட்டாக கருதப்படும். எனவே, கால்நடை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யலாம்.

மானியம்

இந்த திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள கால்நடை உரிமையாளர்களுக்கு, காப்பீட்டு பிரீமியத்தில் 50 % மானியம் கிடைக்கும். அதே சமயம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின கால்நடை உரிமையாளர்களுக்கு காப்பீட்டு பிரீமியத்தில் 70% மானியம் கிடைக்கும்.

காப்பீட்டு பிரீமியத்தின் அதிகபட்ச வீதம் ஒரு வருடத்திற்கு 3% ஆகவும், மூன்று ஆண்டுகளுக்கு 7.5% ஆகவும் இருக்கும். கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை காப்பீடு செய்யலாம்.

15 நாட்களில் காப்பீட்டுத் தொகை

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறந்தால், 24 மணி நேரத்திற்குள் உரிமையாளர்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கையில் மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடுவார்கள்.

பின்னர் அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு உரிமையை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின்படி நிறுவனம் அடுத்த 15 நாட்களில் காப்பீட்டுத் தொகையை கால்நடை உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பால் கறக்கும் விலங்குகள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளும் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!