எந்த ஒரு பயிரும் தனக்குத் தேவையான சத்துகளைத் தன்னைச் சுற்றியுள்ள சூழல்களிலிருந்தும், மண்ணிலிருந்தும் தானாகவே கிரகித்துக் கொள்கிறது. ஆனாலும், சில சாதகமில்லா சூழ்நிலைகளில் பயிருக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் மண்ணிலிருந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கலாகிப் போகலாம். இந்த நிலையில், ரசாயன உரங்கள், உயிர் உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் பயிரின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்யலாம்.மண்ணில் தழைச்சத்தை நிலைப்படுத்தி ரசாயன உரங்களைத் தவிர்த்து அதிக மகசூல் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
பொதுவாக உயிர் உரங்கள் பெரும்பாலும், தழைச்சத்தையும், மணிச்சத்தையும் அளிக்கவல்லன. காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலைநிறுத்தியும், மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்தும் கொடுக்கக்கூடிய நுண்ணுயிர்கள் உயிரி உரங்களாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உயிர் உரங்களைத் தழைச்சத்தை நிலைப்படுத்தும் உரங்கள், மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் நுண்ணுயிர் உரங்களாகப் பிரித்து வகைப்படுத்தலாம். தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரங்களுக்கு உதாரணமாக ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர் போன்றவற்றையும் கூறலாம்.
ரைசோபியம்
இது ஒரு பாக்டீரியா இனத்தைச் சார்ந்த நுண்ணுயிர் ஆகும். அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, பயிர்களின் வேர்களில், வேர் முடிச்சுகளை உண்டாக்குகிறது. ரைசோபியம் நுண்ணுயிர் உபயோகத்தால் தழைச்சத்து உரத்தைச் சேமிப்பதுடன், 20 சதம் அதிக மகசூலையும் தருகிறது. பயிர்களின் வேர்களில் இருந்து கசியும், வேர்க்கசிவுகளும் வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் வேதிப்பொருள்களும் மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றன. பயிர்களின் ரகங்களுக்கு ஏற்ற பயிரிடப்படும் இடத்துக்கு உகந்த ரைசோபிய வகைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உபயோகப்படுத்தும் முறைகள்
10 கிலோ விதைகளுக்கு ஒரு பாக்கெட் ரைசோபியம் (200 கிராம்) போதுமானது. 10 கிலோவுக்கு மேல் தேவைப்படும் விதைகளுக்கு, இரண்டு பாக்கெட்கள் ரைசோபியம் போதுமானது. இலைமக்கு, மண் அல்லது கரித்தூளில் கலக்கப்பட்ட ரைசோபியம் நுண்ணுயிரை ஒரு டம்ளர் (200 மி.லி.) அரிசிக் கஞ்சியில் கலந்து கலவையைத் தயார் செய்ய வேண்டும். இந்தக் கலவையில் தேவையான அளவு விதைகளை இட்டு, எல்லா விதைகளிலும் கலவை ஒட்டிக் கொள்ளுமாறு நன்றாகக் கலக்க வேண்டும். கலந்த விதைகளை நிழலில் 30 நிமிஷங்கள் உலர்த்தி உடனடியாக விதைக்கலாம்.
அசோஸ்பைரில்லம்
பாக்டீரியா இனத்தைச் சார்ந்த அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரி அனைத்து வகை வேளாண் பயிர்களுக்குப் பயன்படுவதாகும். அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்துவதோடு, பயிர் வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கிறது. இதனால் பயிர்களின் வேர்களும், தண்டுப்பாகமும், இலைகளும் வேகமாக வளர்கின்றன. கதிர்களில் அதிக மணிகள் பிடிப்பதால் 25 சதம் வரை அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பளிக்கிறது.
உபயோகிக்கும் முறை
நேரடியாக விதைக்கும் பயிர்களுக்கும் அசோஸ்பைரில்லத்தை விதையுடனும், மண்ணிலும் இட வேண்டும். நாற்று விட்டு நடும் பயிர்களுக்கு நாற்றுகளின் வேர்களை நனைத்தும், நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலும், மண்ணிலும் இடவேண்டும்.
விதையுடன் கலத்தல்
இரண்டு பாக்கெட் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரை அரிசிக் கஞ்சியுடன் கலந்து கலவை தயார் செய்து, இந்தக் கலவையில் ஏக்கருக்குத் தேவையான விதையை இட்டு, எல்லா விதைகளின் மேல் படியும் வரை நன்றாகக் கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த விதைகளை நிழலில் 30 நிமிஷங்கள் உலர்த்தி பின்பு விதைக்கலாம்.
நாற்றங்காலில் இடுதல்
ஏக்கருக்குத் தேவையான நாற்றங்கால், 4 பாக்கெட்டுகள் (200 கிராம் பாக்கெட்) அசோஸ்பைரில்லத்தை 10 கிலோ தொழுஉரத்துடன் கலந்து தூவவும். நாற்றுகளின் வேர்களை நனைத்தல்: இரண்டு பாக்கெட்கள் அசோஸ்பைரில்லத்தை, 40 லிட்டர் தண்ணீரில் கலக்கி, இந்தக் கரைசலில் நாற்றுகளின் வேர்பாகம் 20 நிமிஷங்கள் நனையும்படி வைத்திருந்து பின்பு நடவு செய்யலாம்.
நடவு வயலில் இடுதல்
4 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை 20 கிலோ தொழுஉரத்துடன் கலந்து நடவு வயலில் விதைப்பதற்கு முன் தூவ வேண்டும். வளர்ந்த பயிர்களுக்கு இடுதல்: ஏற்கெனவே வளர்ந்த பயிர்களுக்கும், 20 முதல் 50 கிராம் அசோஸ்பைரில்லத்தை ஒரு கிலோ தொழுஉரத்துடன் கலந்து பயிர்களின் வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கலாம்.
அசட்டோபேக்டர்
இது மண்ணில் தனித்து வாழ்ந்து தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிராகும். மண்ணின் கனிமப் பொருள்களின் அளவை அதிகரிப்பதன் மூலம் இந்த நுண்ணுயிரின் திறனை மேம்படுத்தலாம். மண்ணில் இந்த வகை பாக்டீரியாக்கள் பாலிசாக்கரைடுகளை அதிக அளவு உற்பத்தி செய்வதால் மண்ணின் கட்டமைப்புத் தன்மை அதிகரிக்கிறது. தழைச்சத்தை நிலைப்படுத்துவதுடன், பயிர் ஊக்கிகளையும் உற்பத்தி செய்து பயிர் வளர்ச்சியை அதிகரிக்கவல்லது. அசட்டோபேக்டரை அனைத்துப் பயிர்களுக்கும் உபயோகப்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை
அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை உபயோகிக்கும் முறைகளையே இவற்றுக்கும் பின்பற்றலாம். பிற நுண்ணுயிர் உரங்களுடன் கலந்து இடும்போது, இரண்டு நுண்ணுயிர்களையும் உபயோகிக்கும் தருணத்தில், சம அளவு கலந்து கொண்டு, பின்பு அரிசிக் கஞ்சியுடன் கலக்க வேண்டும். இவை அனைத்தும் தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரங்களாகும். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பயிரின் மகசூல் அதிகரிப்பதோடு, பயிர்களுக்கு தழைச்சத்தை கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களின் அளவையும் 20 முதல் 25 சதம் வரை குறைத்துக் கொள்ளலாம்.
கேள்வி பதில்
1. உயிர் உரம் என்றால் என்ன?
உயிர் உரங்கள், நன்மை தரும் நுண்ணுயிர்களின் உயிருள்ள முறைப்பாடு . இவற்றை நேரடியாக விதை, வேர் அல்லது மண்ணில் பயன்படுத்தலாம். இவை குறிப்பாக, மண்ணில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை திரட்ட, மற்றும் நுண் தாவர அமைப்பை கட்டமைக்க பயன்படுகிறது. மேலும் மண் நலத்தை மேம்படுத்த நேரடியாக பயன்படுகிறது.
2. கரும்பிற்கான உயிர் உரங்கள் இடும் முறை என்ன?
1. கரும்பிற்கான உயிர் உரங்களின் வகைகள்:
அசிட்டோ பேக்டர், அசட்டோ பேக்டர், அசோஸ்ப்பைரில்லம் மற்றும் பாஸ்பேட் கரைக்கும் பாக்டீரியா (பாஸ்போ பாக்டீரியா)
2. பயன்படுத்தும் அளவு : 12-15 கிலோ / எக்டர்
3. பயன்படுத்தும் முறை:
கரணை நேர்த்தி : ஒரு ஏக்கருக்கு 100-லிட்டர் தண்ணீரில் 5 கிலோ உயிர் உரங்களை கலந்து அதில் நடவுக்கு முன் கரும்பு கரணையை முழுமையாக நனைத்து எடுக்க வேண்டும்.
மண்ணில் இடும் முறை: தொழு உரம் 80-100 கிலோ மற்றும் 5 கிலோ உயிர் உரங்களை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, இந்தக் கரைசலை கரும்பு விதைக் கரணைகளின் மேல் தெளித்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்யப்பட்ட வரப்புகளை, உடனடியாக மண்ணை போட்டு மூடி விட வேண்டும்.
3. நாம் ஏன் உயிர் உரங்கள் பயன்படுத்த வேண்டும்?
பசுமை புரட்சியின் அறிமுகங்களான, தொழில்நுட்பங்களின் வருகைக்கு பின்னர் நவீன வேளாண்மை செயற்கை இடுபொருட்களைச் சார்ந்து அமைந்துள்ளது. இவை படிம எரிபொருட்களின் (நிலக்கரி + பெட்ரோலிய) தயாரிப்புகள் ஆகும். இந்த செயற்கை இடுபொருட்களை அளவுக்கதிகமாக மற்றும் சமநிலையற்ற முறையில் பயன்படுத்துவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதைக் காணலாம். இந்த சூழ்நிலைதான் தீங்கற்ற இடுபொருட்களான உயிர் உரங்களை அடையாளம் காண வழிவகுத்தது. மேலும், இந்த உயிர் உரங்களைப் பயிர் சாகுபடியில் பயன்படுத்துவதால், மண்ணின் சுகாதாரம் மற்றும் தரமான பயிர் உற்பத்திப் பொருட்களைப் பெற முடிகிறது.