திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பத்தைக் கடைபிடித்து, அதிக நெல் மகசூல் (Higher paddy yield) பெற்றமைக்காக வழங்கப்படும் விருது (Award), இந்த ஆண்டு முதல் சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது (C. Narayanasamy Naidu Award for Paddy Productivity) என்ற பெயரில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) அவர்கள் அறிவித்துள்ளார்.
அதிக சாகுபடிக்காக வழங்கப்படும் விருது குறித்து, தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி வெளியிட்டியிருக்கும் அறிக்கையில், விவசாயிகளின் பெருந்தலைவர் சி. நாராயணசாமி (C. Narayanasamy) தனது பேச்சு, செயல் மற்றும் தலைமைப் பண்புகளால் தமிழக விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாயிகளின் ஒப்பற்றத் தலைவராகத் திகழ்ந்தார். 1973 ஆம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை (Tamil Nadu Farmers Association) தொடங்கி, அதன் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, விவசாய மாநாடுகளை நடத்தி, விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.
சி. நாராயணசாமி நாயுடு விருது:
தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காக பாடுபட்ட அன்னார் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்த போது தான், தன் இன்னுயிரை நீத்தார். போற்றுதலுக்குரிய அத்தகைய பெருமானாரின் நினைவுநாளான இன்று (21.12.2020), அவரைப் போற்றுவதில் நாம் எல்லோரும் பெருமை அடைகிறோம்.
சி.நாராயணசாமி நாயுடு அவர்கள், நமது விவசாயிகளுக்கு ஆற்றிய பெரும் சேவையைப் போற்றி பாராட்டும் வகையில், குடியரசு தின விழாவில் திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பத்தைக் (Modified paddy cultivation technology) கடைபிடித்து, அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு முதல் சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.