நாட்டுக்கோழி முட்டை நல்லதா ? பிராய்லர் கோழி முட்டை நல்லதா ?

முட்டையில் நம் உடலுக்குத் தேவையான மிகவும் அத்தியாவசியமான சத்துப் பொருட்கள் அதிகம் உள்ளன. தாவரங்கள் உற்பத்தியாக விதைகள் எவ்வாறு முக்கியமோ அது போல் கோழிக் குஞ்சுகள் உருவாக அதன் கரு வளர்ச்சிக்கான உணவாக இயற்கையிலேயே படைக்கப்பட்டது முட்டையாகும். உணவியலாளர்கள் கோழி முட்டையையும், புரதச் சத்து மிகுந்த ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் உணவுகளுடன் சேர்த்து புரதச் சத்து மிக்கதாக வகைப்படுத்தியுள்ளனர். கொழுப்பற்ற 90 கிராம் இறைச்சிக்கு மாற்றாக 2 முட்டைகளை அதற்கு ஈடான சத்துள்ளது என்று நிரூபித்துள்ளனர். முட்டைகள் எளிதாக செரிக்கப்படுவதால், ஒரு சிறந்த குழந்தை உணவாகவும், முதியவர்களுக்காகவும், நோயுற்று மீண்ட நோயாளிகளுக்கும் சிறந்த உணவாகப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு இத்தகைய முட்டையின் மஞ்சள் கரு புரதச் சத்தையும், இரும்புச் சத்தையும் அபரிதமாக அளிக்க வல்லது.

முட்டை ஓடு மற்றும் மஞ்சள் கருவின் நிறம்:
முட்டை ஓட்டின் நிறம் கோழியினங்களின் மரபியலைச் சார்ந்தது. வீரிய இன வெள்ளை லெக்கார்ன் கோழிகள் வெள்ளை நிற ஓடு கொண்ட முட்டைகளையும், சிவப்பு போந்தா கோழிகள் மற்றும் நாட்டுக் கோழிகள் வெளிர் சிகப்பு நிற ஓடுகள் கொண்ட முட்டைகளையும் இடும். ஆனால் இத்தகைய ஓட்டின் நிறத்திற்கும், முட்டையிலுள்ள சத்துப் பொருட்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதே போல் கோழி முட்டையிலுள்ள மஞ்சள் கருவின் நிறமானது நாம் தீவனத்தின் மூலம் அளிக்கும் நிறமிகள் மூலம் மிகவும் ஆழ்ந்த மஞ்சள் நிறமாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ காணப்படும். இத்தகைய நிறமிகள் கோழிகளுக்கு மக்காச் சோளத்திலும், பசுந்தீவனங்கள் மூலமாகவும் கிடைக்கின்றன.

பண்ணைகளில் வைத்து வளர்க்கப்படும் கோழிகளிலிருந்து கிடைக்கும் முட்டைகளின் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்குக் காரணம் நாம் இத்தகைய நிறமிகளைக் கொடுக்கும் பசுந்தீவனங்களை இக்கோழிகளுக்குக் கொடுப்பதில்லை. அதே போல் கோழித் தீவனத்தில் மக்காச்சோளத்தின் அளவு குறைந்திருப்பதுவே ஆகும். ஆனால் நாட்டுக் கோழிகள் தமக்குத் தேவையான உணவு வகைகளை வயல் வெளிகளில் தேடிக் கொள்வதால் அவற்றுக்கு அதிகப் படியான பசுந்தீவனங்கள் கிடைப்பதால் அவற்றின் முட்டையில் ஆழ்ந்த மஞ்சள் நிறக் கருவிருக்கிறது. நாட்டுக்கோழி முட்டையிலும், பண்ணைக் கோழி முட்டைகளிலும் ஒரே மாதிரியான சத்துப் பொருட்கள் தான் உள்ளன.

முட்டையின் உணவியல் பண்புகள்:
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துப் பொருட்கள் அளிப்பதற்கும், முட்டை ஒரு சிறந்த சத்துணவாகும். எனவே இதை இயற்கை நமக்களித்த ஒருங்கணைப்பட்ட பலவித சத்துப் பொருட்களின் கூட்டுக் கலவையாகக் கொள்ளலாம். முட்டையில் பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பாஸ்போலிபிட் போன்ற கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்களுடன் உயர்தரம் வாய்ந்த புரதமும் உள்ளது. முட்டையின் ஆறில் ஒரு பாகம் பரதத்திலானது.

புரதச் சத்து மற்றும் ஏனைய சத்துப் பொருட்கள், மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருக்களில் வெவ்வேறு அளவில் உள்ளன. புரதச் சத்து, மஞ்சள் கருவில் 16 சதவிகிதமும், வெள்ளைக் கருவில் 10 சதவிகிதமும் உள்ளது. முட்டையிலுள்ள புரதச் சத்து மற்ற உணவுப் பொருட்களான பால், இறைச்சி, தானியங்களில் உள்ள புரதச் சத்தைக் காட்டிலும் தரத்தில் சிறந்ததாகும். மனித உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் சரியான விகிதத்தில் முட்டையில் உள்ளடங்கியுள்ளன. முட்டையிலுள்ள புரதச் சத்து முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சீரணிக்கப்படுகிறது. முட்டையை முழுவதுமாக சாப்பிடும் போது மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருக்களில் உள்ள புரதப் பொருட்கள் ஒன்றோடொன்று இணைந்து வளமாகின்றன.

முட்டையில் கொழுப்புச் சத்து மஞ்சள் கருவில் மட்டுமே உள்ளது. மஞ்சள் கருவில் 6 கிராம் எடையளவில் எளிதில் கரையக்கூடிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. முட்டையில் அடங்கியுள்ள முழு கொழுப்புச் சத்தும் மனித உடலில் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஒரு முட்டையில் ஏறக்குறைய 260 மில்லி கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. மனித உடலுக்கு குறிப்பிட்ட அளவு கொழுப்புச் சத்து தேவைப்படுவதால் நாம் உண்ணும் முட்டையில் உள்ள கொழுப்புச் சத்தானது நமது உடலுக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காது.

முட்டையில் உள்ள கொழுப்புச் சத்து குழந்தைகளாலும் கூட எளிதில் சீரணிக்க இயலும். முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் எல்லாவித வைட்டமின் சத்துக்களும் உள்ளன. மாவுப் பொருள் முட்டையில் மிகவும் குறைவாகவே உள்ளது. கொழுப்புச் சத்து மற்றும் மாவுச் சத்து இரண்டும் உடல் இயக்கத்திற்கு தேவையான எரிசக்தியை வழங்கக்கூடியது. ஒரு முட்டையிலிருந்து 97 கிலோ கலோரி அளவிற்கு எரிசக்தி கிடைக்கிறது. இதில் 18கிலோ கலோரி வெள்ளைக் கருவிலிருந்தும் 79 கிலோ கலோரி மஞ்சள் கருவிலிருந்தும் கிடைக்கிறது. ஒரு முட்டையிலுள்ள எரிசக்கியின் அளவு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு தினசரி தேவையில் 3 சதவிகித அளவிற்கு பூர்த்தி செய்கிறது.

முட்டை வைட்டமின் சத்துக்களின் உறைவிடம் என்று கூறலாம். வைட்டமின் ‘சி’ தவிர ஏனைய உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் முட்டையில் நிரம்பியுள்ளன. கொழுப்பில் கரையும் வைட்டமின் சத்துக்களான ‘ஏ’, ‘டி’, ‘ஈ’, ‘கே’ ஆகியவை மஞ்சள் கருவில் அதிகம் உள்ளன. மீன் எண்ணெய்க்கு அடுத்ததாக வைட்டமின் சத்து ‘டி’ அதிக அளவு உள்ள இயற்கை உணவு முட்டையே ஆகும். தண்ணீரில் கரையும் வைட்டமின் சத்துக்களில் தயமின், ரிபோஃபிளேவின், பேன்டோதீனிக் அமிலம், நியாசின், பயோட்டின், ஃபோலிக் அமிலம் ஆகியன முட்டையில் அதிகம் உள்ளன. இவற்றில் ஃபோலிக் அமிலம் என்ற வைட்டமின் சத்து ஏராளமாக உள்ளது.

தாது உப்புக்கள் முட்டையில் தாராளமாகக் காணப்படுகின்றன. இதிலுள்ள தாது உப்புக்கள் இரத்த உற்பத்திக்கும், எலும்பு மற்றும் தசைகள் உருவாவதற்கும் பயன்படுகின்றன. நமது உடல் இயக்கத்திற்கும், வளத்துக்கும் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம், தாமிரம், துத்தநாகம், அயோடின், அலுமினியம், குளோரைடு ஆகியவை உள்ளன.

ஒரு பெரிய முட்டையில் உள்ள ஊட்டச் சத்துக்கள்:

முழு முட்டை மஞ்சள் கரு வெள்ளைக் கரு
முட்டை எடை (கிராம்) 50.00 17.00 33.00
நீர் (கிராம்) 37.28 8.29 29.06
கலோரி 79.00 63.00 16.00
புரதம்(கிராம்) 6.07 2.79 3.35
கொழுப்பு (கிராம்) 5.58 5.60 மிகக்குறைவாக
மாவுச்சத்து ( கிராம்) 0.60 0.04 0.41
சாம்பல் சத்து (கிராம்) 0.47 0.29 0.18

தாது உப்புக்கள் ( மி. கிராம்)

சுண்ணாம்பச் சத்து 28.00 26.00 4.00
இரும்புச் சத்து 1.04 0.95 0.01
முக்னீசியம் 6.00 3.00 3.00
பாஸ்பரஸ் 90.00 86.00 4.00
போட்டாசியம் 65.00 15.00 45.00
சோடியம் 69.00 8.00 50.00
துத்தநாகம் 0.72 0.58 0.01

 

வைட்டமின் சத்துக்கள்

முழு முட்டை மஞ்சள் கரு வெள்ளைக் கரு
தயமின் (மி.கிராம்) 0.044 0.043 0.002
ரிபோஃபிளேவின் (மி.கிராம்) 0.150 0.074 0.094
பான்டோதீனிக் அமிலம் 0.864 0.753 0.080
வைட்டமின் பி 12
(மைக்ரோ கிராம்)
0.773 0.647 0.021
வைட்டமின் ‘ஏ’(மி.கிராம்) 78 94 0
கொழுப்புச் சத்து (மி.கிராம்) 274 272 0

வீட்டில் முட்டையை உணவுக்காகச் சமைக்கும் போது தயாரிப்பு முறைகளில் அதன் ஊட்டச் சத்து பல அளவுகளில் விரயமாகிறது. வேகவைத்த முட்டையில் புரதக் கழிவு ஒன்றுமில்லை. ஆம்லெட் செய்வதில் புரதக் கழிவு 30 சதவிகிதமும், முட்டையை வறுவல் செய்வதில் 9 சதவிகிதமும், வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவைப்பதில் 14 சதவிகிதமும் விரயம் ஏற்படுகிறது. வேக வைக்காமல் உண்ணும் முட்டையை விட வேகவைத்த முட்டையே நன்கு செரிக்கிறது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்