நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்

கிராமப்புறம் என்றாலே நினைவில் வருபவை தெருக்களிலும். கொல்லைப்புறங்களிலும் திரியும் நாட்டுக் கோழிகளே ஆகும். இன்றும் கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி ஆகியவை மக்களிடையே தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நாட்டுக் கோழிகள் சுற்றுப்புறத்தில், கொல்லைப்புறத்தில் குப்பைகளில் கிடைக்கும் புழு, பூச்சிகள், தானியங்கள், வீட்டிலிருந்து வீசியெறியப்படும் கழிவுகளை உண்டு முறையான பராமரிப்பின்றி வளர்கின்றன. நாட்டுக் கோழிகள் பராமரிப்பில் இதைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என பலர் நினைக்கின்றனர். நாட்டுக் கோழிகள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக இருந்தாலும் அவைகளுக்கும் சில நோய்களினால் பாதிப்பு ஏற்பட்டு இறப்புகள் ஏற்படுகின்றன. எனவே நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்களை அறிந்து நோய்கள் தாக்காமல் அவற்றை பராமரிப்பது நாட்டுக்கோழிகள் வளர்ப்பின் மூலம் அதிக இலாபம் பெறுவதற்கான வழிமுறையாகும்

1.வெள்ளைக் கழிச்சல் நோய்:
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்களில் வெள்ளைக் கழிச்சல் நோய் மிக முக்கியமானதாகும். இதனை கொக்கு நோய், இராணிக்கெட் நோய் என்றும் கூறுவர். இது ஒரு நச்சுயிரியினால் ஏற்படுகிறது. இந்நோய் கோடைகாலம் மற்றும் குளி;ர்காலப் பருவங்கள் மாற்றத்தின் போது அதிக அளவில் ஏற்பட்டாலும் ஆண்டு முழுவதும் இந்நோய் ஏற்படுகின்றது.

நோய் அறிகுறிகள்:
வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்குதலினால் கோழிகளின் குடலும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகள் தீவனம், நீர் உட்கொள்ளாது. வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும். எச்சமிடும் பொழுது ஒரு காலை மட்டும் தூக்கிக் கொள்ளும் ஒர் இறகு மட்டும் செயலிழந்து தொங்;கும். தலை முறுக்கிக் கொள்ளும். அதனால் கொக்கு போல் குருகிக் கொண்டு நிற்கும். 2வது அல்லது 3வது நாளில் இறப்பு ஏற்படும். ஒரு சில கோழிகள் அரிதாக நோயிலிருந்து தப்பிவிடும். ஆனால் நரம்பு பாதிக்கப்படுவதால் கழுத்து திருகிக் கொள்ளும். கோழிகள் நடக்கவும் முடியாமல் தீனி எடுக்கவும் முடியாமல் சிரமப்படும்.

நோய்த் தடுப்பு முறைகள் :
இந்நோய் வந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்ற முடியாது. வருமுன் தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே வழி. இந்நோய் வராமல் தடுக்க வெள்ளைக்கழிச்சல் நோய்க்கான “லசோட்டா” எனப்படும் தடுப்பூசியை கண் அல்லது நாசித் துவாரத்தில் சொட்டு மருந்தாக குஞ்சுகள் பொறித்த 7 முதல் 10 நாட்களுக்குள் ஒரு சொட்டு இட வேண்டும். இந்தத் தடுப்பூசியானது குஞ்சுகளுக்கு போட்டது முதல் 2 மாத காலம் வரை நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கும்.

பிறகு கோழிகளின் 2 மாத வயதில் தடுப்பூசியை ஊசியாக இறக்கையில் தோலுக்கடியில் போட வேண்டும். பின் ஒவ்வொரு 3 மாதத்திற்கொரு முறையும் இந்த தடுப்பூசியை போட வேண்டும். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளில் அரசு கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவ, மருந்தக மற்றும் கிளை நிலையங்களில் இத்தடுப்பூசி இலவசமாகக் கோழிகளுக்குப் போடப்படுகின்றது.

வெள்ளைக்கழிச்சலுக்கான குருணை வடிவ தடுப்பு மருந்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமானது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குருணை மாத்திரையை குஞ்சுகள் பொறித்த 15 வது நாளில் ஒரு முறையும் பிறகு 2 மாதத்திற்கு ஒரு முறையும் ஒரு கோழிக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் வாய் வழியாக தரும் பொழுது வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்க முடியும். குருணை வடிவ தடுப்பு மருந்தை கோழிகளுக்கு அளிப்பது மிகவும் எளிது. இந்த வெள்ளைக்கழிச்சலுக்கான குருணை வடிவ தடுப்பு மருந்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் உழவர் பயிற்சி மையங்களில் இலவசமாக நாட்டுக்கோழிகள் வளர்ப்போர் பெற்றுக் கொள்ளலாம்.

2. கோழி அம்மை:
இதுவும் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நச்சுயிரி நோய்களில் ஒன்று.

அறிகுறிகள்:
கோழிக் கொண்டை, தலை, கண் புருவம், செவில் மடல், நாசித்துவாரத்தின் மேலும் கொப்புளங்கள் உண்டாகி பின் புண்கள் உருவாகும். பின் உடைந்து புண்கள் பெரிதாகும். நோய் தாக்குதல் அதிகமாகும் பொழுது கண் பார்வை மறைந்து, தீனி எடுக்க முடியாமல் சங்கடப்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் முட்டையிடுதல், எடை போடுதல் பாதிக்கப்படும். நோயுற்ற முட்டைக் கோழிகள் முட்டை இடாது. சில கோழிகள் இறந்து விடும். ஆனால் பாதிக்கப்பட்ட குஞ்சுகளில் அதிக இறப்பு ஏற்படும்.

சிகிச்சை முறை:
நோய் வந்த கோழிகளுக்கு மஞ்சள் மற்றும் வேப்ப இலையை அரைத்து கொப்புளங்களில் பூசிவர குணமாகும். தேங்காய் எண்ணெயில் போரிக் பவுடர் போட்டும் கொப்புளங்களில் தடவலாம்.

தடுப்பு முறை:
கோழிகள்; குஞ்சாக இருக்கும் பொழுதே தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. 3 வார வயதில் தடுப்பூசி போட வேண்டும்.

3. இரத்தக் கழிச்சல் நோய்:
இந்நோயானது மூன்று வார வயதிற்கு மேலான குஞ்சுகளையும் கோழிகளையும்; பாதிக்கும். அதிக அளவில் நாட்டுக் கோழிகளை வளர்க்கும் பொழுது இந்நோய் ஏற்படலாம். இரத்தக் கழிச்சல் நோயானது “காக்சிடியா” என்ற ஒரு வகை ஒட்டுண்ணிகள் குடலைத் தாக்குவதால் ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட கோழி உட்கொண்ட தண்ணீர், தீவனம். எச்சம் மூலமாக மற்ற ஆரோக்கியமானக் கோழிகளுக்கும் பரவும்.

அறிகுறிகள்:
பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம். முதலில் நீர் நிறைந்து காணப்படும். பிறகு இரத்தமாகக் கழியும். கோழிகள் சோர்வுற்று மெலிந்து காணப்படும். இறக்கைகள் தாழ்ந்து இருக்கும். இரத்தப் போக்கின் காரணமாகக் கோழிகளின் கொண்டை, கால்களின் பின்பகுதிகள் வறண்டு வெளிறித் தோன்றும். கோழிகள் தீவனம், தண்ணீர் சரிவர உட்கொள்ளாது. முட்டை உற்பத்தி குறையும். எச்சத்திலும். குதத்தைச் சுற்றிலும் இரத்தம் காணப்படும்.

சிகிச்சை:
பாதிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் இறப்பு அதிகம் ஏற்படும். சிகிச்சைக்காக காட்ரினால் பவுடரை 1 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் அல்லது ஆம்ப்ரொலியம் பவுடரை 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் கலந்து காலை மாலை இரு வேளையாக 3 நாட்களுக்கு அளித்து வந்தால் குணமாகும். கோழிகள் அடைத்த இடத்தை ப்ளீச்சிங்; பவுடர் போட்டு நன்கு கழுவி விட வேண்டும்.

தடுப்பு முறை:
கோழிகளை அடைக்கும் இடத்தில் அதிக ஈரமில்லாமலும் நல்ல காற்றோட்டம் இருக்கும் படியாகவும் இருக்க வேண்டும்.

4. கோழிகளில் குடற்புழு தாக்குதல்:
நாட்டுக் கோழிகளை உருண்டைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் தாக்கும் பொழுது வளர்ச்சி குன்றி உடல் நலிந்து இருக்கும். புழுக்கள் கோழித் தீவனம், தண்ணீர் மூலம் கோழியின் குடலை அடைந்து அதிலிருந்து இளம் புழுக்கள் வெளியேறி புழுக்களாகி தாக்குகின்றன. சில சமயங்களில் மண்புழுக்களின் மூலமும் புழு முட்டைகள் கோழி வயிற்றை அடைகின்றன. எச்சம் மூலம் வெளிவரும் நாடாப்புழு துணுக்குகள் மற்றும் முட்டைகள் நேரடியாக கோழிகளைத் தாக்குவதில்லை. மாறாக இவை மண்புழு, வண்டு மற்றும் எறும்புகளில் இடைநிலை வளர்ச்சி பெறுகின்றன. கோழிகள் சிறு வண்டுகள், எறும்பு, மண்புழுக்களை கொத்தி தின்னும் பொழுது குடலில் சென்;று முழு வளர்ச்சி பெற்று நாடாப்புழுக்களாகின்றன.

அறிகுறிகள்:
கோழிகள் நலிந்து காணப்படும. கடுமையாகக் கழியும். எச்சத்தில் புழுக்கள் நெளிவதை சாதாரணமாக பார்த்தாலே தெரியும். முட்டையிடும் கோழிகளில் முட்டைகள் குறைவாக இடும். தோல் முட்டைகள் அதிகமாக காணப்படும். உள் ஒட்டுண்ணிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகள் இறந்து விடும்.

தடுப்பு முறைகள்: அதிகமான கோழிகளை ஒரே இடத்தில் அடைக்கக் கூடாது. கோழிகளின் எச்சங்களை அடைத்த இடத்திலிருந்து உடனே அகற்றி விட வெண்டும். குடற்புழு நீக்க மருந்தை கால்நடை மருத்துவர் உதவியுடன் முதலில் 2 வது மாதத்திலும் பிறகு 3 மாத இடைவெளியிலும் கொடுக்க வெண்டும்.

5. வெளி ஒட்டுண்ணிகள்:
தெள்ளுப்பூச்சிகள், கோழிப்பேன்கள், உண்ணிகள், சிவப்பு நுண்ணுண்ணிகள் போன்றவை கோழிகளின் உடம்பில் இருக்கும் வெளி ஒட்டுண்ணிகளாகும்.

தெள்ளுப்பூச்சிகள்:
நாட்டுக் கோழிகளை பலவகை வெளி ஒட்டுண்ணிகள் தாக்கினாலும் அதிகமாக பாதிப்பது தெள்ளுப்பூச்சி. இவை நாட்டுக் கோழிகளை அடைக்கும் கூண்டுகளையே பிடித்துக் கொள்ளும். வீட்டிலுள்ளவர்களுக்கே தொந்தரவாக அமையும். அடை படுத்திருக்கும் கோழிகள் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும். இவை கொண்டை, தாடை, கோழியின் அலகு மற்றும் கண்களைச் சுற்றியும் அதிகம் காணப்படும். இவை இரத்தத்தை உறிஞ்சக் கூடியவை. வளர்ச்சி அடைந்த கோழிகளில் முட்டை உற்பத்தி குறையும். இளம் குஞ்சுகளில் இறப்பையும் ஏற்படுத்தும்.

கோழிப்பேன்கள்:
நாட்டுக் கோழி வளர்ப்பில் கோழிப் பேன்களின் தொல்லையானது பெருமளவில் காணப்படுகிறது. ஒரு ஜோடிப்பேன்கள் ஓரிரு மாதங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் உயிரிகளைத் தோற்றுவிக்கும். இவை கோழியின் இறகின் அடிப்பகுதியிலும், மலவாய், தலை, கழுத்து போன்ற பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. பேன்கள் தொடர்ந்து கடித்துக் கொண்டே இருப்பதால் கோழிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் உதிரும் படை உண்டாகிறது. இதனால் கோழிகள் சரியாகத் தீவனம் உண்ணாததால் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

உண்ணிகள்:
இவை இரவு நேரங்களில் உணவுக்காக இரத்தத்தை அதிகமாக உறிஞ்சி இரத்த சோகையை உண்டு பண்ணுகின்றன.

சிவப்பு நுண்ணுண்ணிகள்:
கால்களில் செதில்களில் தோற்றுவிப்பவை. சிறகுகளை உதிரச் செய்பவை. இந்த நுண்ணுண்ணிகள் கோழிகளின் கால்களிலுள்ள செதில்களை ஊடுருவிச் சென்று திசுக்களை பாதிப்பதால் வீக்க அழற்சியை தோற்றுவிக்கின்றன.

பொதுவாக வெளி ஒட்டுண்ணிகளின் தாக்கத்தினால் உணவு உட்கொள்ளுதல் பாதிக்கப் பட்டு உடல் எடை, முட்டை உற்பத்தி திறன் குறைந்து விடுகின்றன. இளம் குஞ்சுகளில் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

சிகிச்சை முறை:
வெளி ஒட்டுண்ணிகளை அழிக்க ப்யூடாக்ஸ் மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. கலந்து கோழிகளை அதில் முக்கி (தலை தவிர) எடுக்க வேண்டும். மேலும் கோழிகளை அடைத்து வைத்திருந்த இடத்தையும் மருந்து கலந்த தண்ணீர் கொண்டு கழுவி விட்டால் வெளி ஒட்டுண்ணிகளை அழித்து விடலாம். அல்லது கோழிகளை அடைத்து வைக்கும் இடங்களை சோப் – 1 பாகம், மண்ணெண்ணெய் – 1 பாகம், பினாயில் -3 பாகம் , வெந்நீர் -95 பாகம் கலந்த தண்ணீர் கொண்டு கழுவினால் ஒட்டுண்ணிகள் இறந்து விடும்.

6. கால்கட்டி:
பொதுவாக சேவல்களுக்கு காலில் கட்டி அதிகம் ஏற்படும். ஏனெனில் சேவல்கள் நீண்ட காலம் வளர்க்கப்படுவது தான். கோழிகள் இயற்கையில் குச்சிகளை காலில் பிடித்துக் கொணடு தூங்கும். ஆனால் இந்த ஏற்பாடு செய்யப்படாமல் கோழிகள் தரையிலேயே வாழும் சூழ்நிலை ஏற்படும் போது காலில் கட்டி ஏற்படும். இந்நிலை ஏற்படும் சேவல் மற்றும் கோழிகளைக் கழித்து விடுவதே நல்லது. நோய்கள் வந்தவுடன் சிகிச்சை அளிப்பதை விட வரும் முன் காப்பது தான் சாலச் சிறந்தது என்பது நாட்டுக் கோழிகள் பராமரிப்பில் மிக முக்கியமான அம்சமாகும்.

கோழிகளைத் தாக்கும் எல்லா விதமான நோய்களிலும் கோழிகளினான இறப்பினால் ஏற்படும் நட்டத்தை விட மற்ற நோய் தாக்கிய கோழிகளின் வளர்ச்சி விகிதமும், முட்டை உற்பத்தியும் பாதிக்கப்படுவதால் நாட்டுக் கோழிகள் வளர்ப்பவர்களுக்கு அதிக நட்டம் ஏற்படுகிறது. எனவே கோழிகளின் நலன் குன்றாமல் கொடிய நோய்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்க சுத்தமான தண்ணீர், வேண்டிய அளவு தீவனம், உரிய கண்காணிப்பு முறை, சரியான நேரத்தில் குடற்புழு நீக்க மருந்து மற்றும் தடுப்பூசிகளைப் போட்டு கோழிகளை வளர்த்தால் நாட்டுக் கோழி வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்