நாட்டுக்கோழி முட்டைகளை செயற்கை முறையில் அடை வைத்துக் குஞ்சு பொரித்தல்

நாட்டுக்கோழிகளின் முட்டைகளை அடைகோழி மூலம் குஞ்சுபொரிக்கும் முறை தான் பரவலாக கடைபிடிக்கப்படடு வருகிறது. இம்முறையில் ஒரு கோழியில் ஒரு முறைக்கு 10 முதல் 15 அடை முட்டைகளை மட்டுமே வைத்துக் குஞ்சு பொரிக்க முடியும். அவ்வாறு பொரித்த குஞ்சுகளை தாய்க்கோழியானது குறிப்பிட்ட வயது வரை பாதுகாத்து குஞ்சுகள் தன்னிச்சையாக வளரும் வரை முட்டைகள் இடாது. அதனால் ஒரு நாட்டுக்கோழியிடமிருந்து வருடத்திற்கு 50 முதல் 60 முட்டைகள் மட்டுமே கிடைக்கும். எனவே குறைந்த எண்ணிக்கையில் நாட்டுக்கோழிகளை வைத்திருப்போருக்கு மட்டுமே அடைகோழி மூலம் குஞ்சு பொரிக்கும் முறையானது ஏதுவானதாக இருக்கும். ஆனால் தற்பொழுது நாட்டுக்கோழிகளை அதிக எண்ணிக்கையில் வைத்து வளர்க்கும் பொழுது அதிக முட்டைகள் கிடைக்கப்பெறுவதால் அவற்றை நாட்டுக்கோழிகள் கொண்டு இயற்கை முறையில் குஞ்சுகளை பொரிக்கும் பொழுது அதிக கோழிகள் அடைகாக்க பயன்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் நாட்டுக்கோழிகள் மூலம் கிடைக்கக் கூடிய முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து விடும். அதனால் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்கோழிகளை வைத்திருப்போர் தரமான முட்டைகளைச் சேமித்து குஞ்சுப் பொரிப்பான் மூலம் தரமான குஞ்சுகளை உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளை நம் பண்ணையிலே வளர்ப்பதன் மூலமோ அலலது இளங் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலமோ நாட்டுக்கோழிப் பண்ணையில் அதிக இலாபம் பெற முடியும்.

அடைமுட்டைகளை பாதுகாத்தல்:
பெரும்பாலும், கிராமங்களில் அடை முட்டைகளை நெல் அல்லது அரிசி அல்லது தவிட்டுப் பானைகளில் சேமித்து வைப்பர். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 50 சதவிகிதம் தான் இருக்கும். உற்பத்தியாகும் அடை முட்டைகளின் குஞ்சுப் பொரிப்புத் திறன் குறையாமல் இருக்க அடை முட்டைகளை நாம் சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும். சேகரித்த அடை முட்டைகளின் குறுகிய பாகம் கீழ் நோக்கியும், அகலமான பாகம் மேல் நோக்கியும் இருக்குமாறு முட்டை அட்டைகளில் அடுக்கி வைப்பதன் மூலம் முட்டைகளை உடையாமல் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம். அடை முட்டையின் மீது எச்சம் அல்லது கூளப்பொருள் ஒட்டிக் கொண்டிருந்தால் அதனைப் பஞ்சு அல்லது உப்புக் காகிதத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

சிறிதே அழுக்கான முட்டைகளை அரை சதவிகித டெட்டால் அல்லது சேவ்லான்; கரைசலைக் கொணடு தெளிப்பான் மூலம் ஓட்டின் மீது தெளித்தோ அல்லது அந்தக் கரைசலில் முக்கி எடுத்தோ, காய்ந்த பின் சேமித்து வைக்க வேண்டும். அதிக எச்சம், கூளப்பொருள் படிந்த, உடைந்த மற்றும் தோல் முட்டைகளைக் குஞ்சு பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் சேகரித்த முட்டைகளைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் கொண்டு புகைமூட்டம் செய்வது அவசியம். உதாரணமாக, 100 கன அடி கொள்ளளவு கொண்ட பெட்டி போன்றதொரு அமைப்பில் வைக்கப்பட்ட முட்டைகளை 4 கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் 8 மில்லி லிட்டர் பார்மலின் என்ற விகிதத்தில் உபயோதித்துப் புகை மூட்டம் செய்தல் வேண்டும்.

பார்மலின் திரவத்திலிருந்து பார்மால்டிஹைடு வாயு வெளிப்பட்டு முட்டைகளின் ஓட்டுப் பகுதிகளிலுள்ள கிருமிகளை அழித்து விடுவதால் குஞ்சு பொரிக்கும் விகிதம் அதிகரிக்கும். பிறகு முட்டைகளை முட்டை சேமிக்கும் அறையில்; சேமித்து வைக்க வேண்டும். முட்டை அறையின் வெப்பம் 65 டிகிரி பாரன்ஹீட் இருக்க வேண்டும். இதற்குப் பொதுவாகக் குளிர்சாதன அறை போதுமானது. இவ்வாறு அதிகபட்சம் ஏழு நாட்கள் சேமித்த நாட்டுக் கோழி முட்டைகளைக் குஞ்சுகள்; பொரிக்கப் பயன்படுத்தலாம். 7 நாட்களுக்கும் மேலாகச் சேமித்த முட்டைகளின் பொரிக்கும் திறன் குறைய வாய்ப்புண்டு.

குளிர்சாதன அறை இல்லாதவர்கள் வீட்டின் ஒரு மூலையில் மணல் குவித்து அகன்ற வாயுடைய மண் பானையில் உமியைப் போதிய அளவு நிரப்பி முட்டைகளை அடுக்க வேண்டும். பானையின் அகன்ற வாயினை மெல்லிய துணி கொண்டு கட்ட வேண்டும். அவ்வப்பொழுது பானை மீது குளிர்ந்த நீரைத் தெளித்துப் பாதுகாத்து வந்தால் குஞ்சு பொரிக்கும் திறன் அதிகரிக்கும்.

முட்டைகளைக் குஞ்சு பொரிக்கும் இயந்திரத்தில் வைப்பதற்குச் சில மணி நேரம் முன்பாகக் குளிர்பதன அறையிலிருந்து வெளியே எடுத்து சாதாரண அறையில் வைத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். பிறகு அவற்றை அடை வைக்கும் தட்டுக்களில் முட்டையின் அகன்ற பகுதி மேல் மேலே இருக்கும் படி ஒவ்வொரு முட்டையையும் செங்குத்தாக அடுக்கி முட்டைத் தட்டுகளை குஞ்சு பொரிப்பான் இயந்திரத்தில் ஒவ்வொன்றாக அடுக்கி வைக்க வேண்டும். குஞ்சு பொரிப்பானில் குஞ்சுகள் பொரிப்பதற்கும் 21 நாட்களாகும்.

குஞ்சு பொரிப்பான்:
குஞ்சு பொரிப்பானில் சிறிய வகை மற்றும் பெரிய வகை குஞ்சு பொரிப்பான் என்று இரண்டு வகை உள்ளன. குறைந்த எண்ணிக்கையில் 100 நாட்டுக் கோழி முட்டைகள் வரை குஞ்சுகள் பொரிப்பதற்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய வகை குஞ்சுப் பொரிப்பானைப் பயன்படுத்தலாம். வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளைப் பொரிக்க விரும்புவோர் பெரிய வகை குஞ்சுப் பொரிப்பானைப் பயன்படுத்தலாம். பெரிய வகை குஞ்சு பொரிப்பானில் முட்டை அடைப் பிரிவு, குஞ்சு பொரிக்கும் பிரிவு என இரு பிரிவுகள் இருக்கும்.

எந்த வகை குஞ்சு பொரிப்பானாக இருந்தாலும் அடை முட்டையில் உள்ள கரு, இயந்திரத்திலுள்ள ஒரே சீரான வெப்பத்தினாலும் ஈரப்பதத்தினாலும் வளர ஆரம்பிக்கும். கருவின் வளர்ச்சி ஒரே சீராக இருக்க இயந்திரத்தின் உள்ளே வெப்பமானது முட்டைகளை அடை வைத்த நாள் முதல் 18 நாட்கள் வரை 99.5 முதல் 100.5 டிகிரி பாரன்ஹீட், ஈரப்பதம் 65 முதல் 70 சதவிகிதம் இருக்க வேண்டும். 19 முதல் 21 நாட்;கள் வரை வெப்பமானது 98.5 முதல் 99.5 பாரன்ஹீட், ஈரப்பதம் 70 முதல் 75 சதவிகிதம் வரையும் இருக்க வேண்டும்.

குஞ்சுப்பொரிப்பான் இயந்திரத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பத அளவைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். தானியங்கி பொரிப்பான் இயந்திரத்தில் சரியான வெப்பம், ஈரப்பதம், திருப்பி விடுதல் அனைத்தும் தானாகவே இயங்குமாறு அமைக்கப் பெற்றிருக்கும். வெப்பம் குறைந்தால் சூடேற்றும் கருவி தன்னிச்சையாகச் செயல்படத் துவங்கி விடும். கூடினால் அக்கருவி செயலற்று நின்று விடும். இயந்திரம் சரியாக இயங்குகிறதா என அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். குஞ்சுகள் முழுவளர்ச்சி அடைந்தவுடன் முட்டை ஓட்டை கொத்தி முட்டையை உடைத்துக் கொண்டு 21ம் நாள் மாலை முதல் அடுத்த நாள் காலை வரை குஞ்சுகள் பொரித்து வெளிவரத் தொடங்கும்.

குஞ்சுகள் பொரித்து வெளிவந்த பிறகு குஞ்சு பொரிப்பானை கிருமி நாசினி மூலம் புகை மூட்டம் போட்டுச் சுத்தம் செய்த பின்னரே, அடுத்த தொகுதி முட்டைகளை வைக்க வேண்டும். சுகாதாரமான முறையில் முட்டைகளையும், குஞ்சுபொரிப்பானை பராமரித்து வந்தால் அதிகப்படியான குஞ்சு பொரிக்கும் திறன் பெற முடியும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் உலர்ந்து கேசங்கள் சிலிர்த்து சுறுசுறுப்பானவுடன் தாய் கோழியின் அரவணைப்பில் உள்ளது போன்ற வெப்பம் தேவைப்படும். இந்நிலையில் குஞ்சுகளை வெளியில் எடுத்து அடைகாப்ப்பானில் விட்டுக் குஞ்சுத் தீவனம், குடிநீர் மற்றும் தேவையான வெப்பம் ஆகியவற்றை அளித்து குஞ்சுகளை பராமரிக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்