நாட்டுக்கோழிகளுக்கு அலகு ஏன் வெட்ட வேண்டும் ?

நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதால் தற்பொழுது கிராம மக்களும் நகர்ப்புற மக்களும் நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழிலை சிறந்த வருமானம் தரும் சுயதொழிலாக ஆரம்பிக்க முன்வருகின்றனர். புறக்கடை முறையில் நாட்டுக் கோழிகள் சுற்றுப்புறம், கொல்லைப்புறம் மற்றும் குப்பைகளில் கிடைக்கும் புழு, பூச்சிகள், தானியங்கள், வீட்டிலிருந்து வீசியெறியப்படும் கழிவுகளை உண்டு முறையான பராமரிப்பின்றி வளர்க்கப்பட்ட நிலை மாறி முறையாக கொட்டகை அமைத்து சமச்சீர் தீவனங்கள் கொடுத்து தகுந்த நோய்ப் பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு அறிவியல் முறையில் பண்ணைகளில் வைத்து வளர்க்கப்படும் நிலை தற்பொழுது உருவாகி வருகின்றது.

இவ்வாறு பண்ணைகளில் தேவையான இடவசதி மட்டும் கொடுத்து குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதால் நாட்டுக்கோழிகள் ஒன்றை ஒன்று கொத்தும் பழக்கம் ஏற்படும். இதனால் கோழிப் பண்ணையில் இறப்பு ஏற்படுவதுடன் கோழிகளின் வளர்ச்சித் திறன் மற்றும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுப் பண்ணையில் நட்டம் ஏற்படாமல் இருக்க நாட்டுக்கோழிகளுக்கு அலகு வெட்டுதல் மிக அவசியம்.

நாட்டுக்கோழிகளுக்கு அலகு வெட்டுவதன் நோக்கம்:
நாட்டுக் கோழிகள் ஒன்றை ஒன்று கொத்தாமல் இருக்கவும், தீவனம் கீழே சிந்தி விரயம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், கோழிகளின் தீவன மாற்றுத் திறனை அதிகரிக்கவும், கோழிகள் முறையாகத் தீவனமெடுத்து சீராக வளர்ச்சியடையவும், கோழிகளுக்கு அலகு வெட்டப்படுகின்றது. சில நேரங்களில் கோழிக் குஞ்சுகளின் எச்ச வாய்ப்பகுதி ஈரமடைந்து கூளம் ஒட்டிக் கொண்டு விடும். அந்த குஞ்சுகளை மற்ற குஞ்சுகள் எச்ச வாய்ப்பகுதியில் கொத்திக் கிளறிப் புண்ணாக்கி விடும். சில சமயங்களில் பாதிக்கப்பட்ட குஞ்சுகளின் குடற்பகுதி கூட வெளியே வந்து கோழிக்குஞ்சுகள் இறக்க நேரிடும்.

அலகு வெட்டும் வயது:
பெரும்பாலும் நாட்டுக் கோழிக் குஞ்சுகளின் மூன்றாவது வார வயதில் அலகு வெட்டப்படுகிறது. இளம் வயதில் அலகு வெட்டுவதால் வலி குறைவாக இருக்கும். தேவையானால் மட்டுமே 12 முதல் 14 வது வார வயதில் மீண்டும் ஒரு முறை அலகை வெட்டலாம்.

அலகு வெட்டும் முறை:
நாட்டுக்கோழிகளின் அலகை வெட்டுவதற்கு குறைந்த மின்சாரத்தில் சூடாக்கப்படும் தகடு பொருத்திய “டீபீக்கர்” எனப்படும் அலகு வெட்டும் கருவி உபயோகப்படுத்தப்படுகிறது. மேல் அலகில் மூன்றில் இரு பங்கும் கீழ் அலகில் மூன்றில் ஒரு பங்கும் வெட்ட வேண்டும். இந்த கருவியில் இருக்கும் தகட்டினாலான பிளேடு வெப்பமாக இருப்பதினால் அலகு வெட்டும் பொழுது இலேசாக இரத்தம் கசிந்தாலும் உறைந்து விடுவதால் அலகை வெட்டியபின் இரத்தக் கசிவு இருக்காது.

அலகு வெட்டும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள்:
குளிர்ச்சியான நேரத்தில் அல்லது விடியற்காலையில் நாட்டுக்கோழிகளுக்கு அலகு வெட்டுவது அவசியம். கோழிகளை அதிகத் தொந்தரவு இன்றி மென்மையாகக் கையாள வேண்டும். கோழிகளுக்கு மற்ற நோய்களினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது அலகு வெட்டுதல் கூடாது. கோழிகளுக்குத் தடுப்பூசி போட்டுக் குறைந்த பட்சம் ஒரு வாரம் வரை அலகு வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.

அலகு வெட்டிய கோழிகளில் இரத்தக் கசிவு நின்று விட்டதா என்று கவனித்த பிறகே கோழிகளைக் கீழே விட வேண்டும். அலகு வெட்டும் பொழுது ஒரு குறிப்பிட்ட கோழி வீடடில் அல்லது ஒரு பிரிவிலுள்ள கோழிகளுக்கு ஒரே நேரத்தில் அலகு வெட்ட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அலகு வெட்டப்படாத கோழிகள் அலகு வெட்டிய கோழிகளைக் கொத்த முற்படும்.

அலகை வெட்டும் பொழுது ஒரு விரலை கோழிகளின் இரு அலகிற்கும் இடையில் வைத்து நாக்கினை உள்ளே தள்ளிக் கொள்ள வேண்டும். அலகை வெட்டும் பொழுது சரியான அளவில் வெட்டிய பிறகு, மேல் அலகின் வெட்டப்படட்ட பகுதியை வெப்பத் தகட்டின் மீது சில நொடிகள் வைத்து தீய்த்து விட வேண்டும். இதனால் இரத்தப் போக்கு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

எல்லாக் கோழிகளுக்கும் ஒரே சீராக அலகு வெட்டப்பட வேண்டும். இல்லையெனில் சில கோழிகளுக்கு அலகு விரைவில் வளர்ந்து மற்றக் கோழிகளைக் கொத்த ஆரம்பித்து விடும். மிகவும் அதிகமான அளவில் அலகு வெட்டுதல் கூடாது. அவ்வாறு வெட்டினால் கோழிகள் சரியாகத் தீவனம் தின்ன முடியாமல் வளர்ச்சியும் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

அலகு வெட்டியவுடன் கோழிகளுக்கு உடனடியாகக் குளிர்ந்த நீர் அளித்தல் அவசியம். மேலும் அலகை வெட்டுவதால் ஏற்படும் அயர்ச்சியைக் குறைக்க பி காம்ப்ளெக்ஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி என்ற அளவில் தினமும் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து குடிநீரில் கலந்து அளிக்க வேண்டும்.

கோழிகளுக்கு அலகு வெட்டிய ஒரு வாரம் வரை அலகின் நுனிப்பாகம் வலிக்க வாய்ப்பிருப்பதால் தீவனத் தொட்டியில் தீவனம் காலியாகவோ அல்லது பற்றாக்குறையாகவோ இருக்கக் கூடாது. அதே போல் தண்ணீரும் எந்த நேரமும் தேவையான அளவில் இருக்க வேண்டும். நாட்டுக்கோழிகளில் அலகை வெட்டிய பின் அலகு வெட்டும் கருவியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அலகு வெட்டும் பொழுது ஏற்படும் தவறுகள்:
மேல் மற்றும் கீழ் அலகுகளை குறைந்த அளவில் அல்லது அதிக அளவில் வெட்டுதல், அலகு வெட்டுதலின் பொழுது இரத்தம் வருதல், மூக்குத் துவாரம் தீயினால் பாதிக்கப்படுதல், அலகை தவறான கோணத்தில் வெட்டுதல் போன்ற தவறுகள் அலகு வெட்டும் பொழுது நேரிடலாம். அலகு வெட்டும் பொழுது ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க முறையாகப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு கோழிகளுக்கு அலகை வெட்டுதல் வேண்டும்.

நாட்டுக்கோழிகளில் அலகு வெட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள்:
புறக்கடைகளில் நாட்டுக்கோழிகளை வளர்த்தாலும் அவை ஒன்றை ஒன்று கொத்தும். ஆனால் கொத்த வரும் கோழிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் அவை கோழிகள் கொத்துவதிலிருந்து தப்பி விடும். இந்த வாய்ப்பானது பண்ணைகளில் வளர்க்கப்படும் பொழுது கோழிகளுக்கு ஏற்படுவதில்லை. அதனால் கோழிகள் ஒன்றை ஒன்று கொத்திக் கொள்வதைத் தடுக்கவும், கோழிகள் தமது அலகால் தீவனத்தை கிளறி விரயம் செய்வதைத் தடுக்கவும் அலகு வெட்டுவது அவசியமாகிறது.

ஆனால் சில இடைத்தரகர்கள் அலகு வெட்டிய நாட்டுக்கோழிகள் தரம் குறைந்தவை என்றும் இவை சுத்தமான நாட்டுக் கோழிகள் அல்ல என்றும் கூறி செயற்கையாக விற்பனையை முடக்கி விடுகின்றனர். அதனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு தகுந்த விலை கிடைக்காமல் நாட்டுக்கோழிப் பண்ணையாளர்கள் அவதியுறும் பொழுது இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு கோழிகளை வாங்கி அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள்.

இதனால் இலாபமானது பண்ணையாளர்களுக்கு குறைவாகவும் இடைத்தரகர்களுக்கு அதிகமாகவும் கிடைக்கிறது. ஆகவே பொது மக்களும் நாட்டுக்கோழிகளில் அலகு வெட்டுதலின் நோக்கம் பற்றி தெரிந்து கொண்டு பண்ணைக்கோழிகளில் அலகு வெட்டுவதால் நாட்டுக்கோழிகளின் தரம் குறைந்தது என்னும் தவறான கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்