நாட்டுக் கோழிகளின் இளங்குஞ்சுகளை பராமரிக்கும் முறைகள்

புறக்கடைகளில் நாட்டுக்கோழிகளை வளர்க்கும்பொழுது தாய்க்கோழியானது முட்டையிலிருந்து பொரித்த இளங்குஞ்சுகளை தனது இறகுகளினால் மூடி குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தையும், பாதுகாப்பையும் அளித்து வளர்க்கும். ஆனால் செயற்கை முறையில் குஞ்சு பொரிப்பான் மூலம் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை அடை வைத்து பொரிக்கப்பட்ட குஞ்சுகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வணிக ரீதியில் வளர்க்கப்படும் பொழுது தாயிடமிருந்து கிடைக்கக்கூடிய உடல் வெப்பமானது குஞ்சுகளுக்கு கிடைப்பதில்லை.

அதனால் குஞ்சுகளின் உடம்பில் உள்ள இறகுகள் முழு வளர்ச்சி அடையும் வரை செயற்கை வெப்பம் அளித்து வளர்த்தால் தான் இளங்குஞ்சுகளை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும். எனவே நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் இலாபகரமானதாக அமைய இளங்குஞ்சுகள் பராமரிப்பு என்பது மிக முக்கியமானதாகும்.  இளங்குஞ்சுகளுக்கு அடைகாப்பானில் செயற்கை வெப்பம் அளித்தல். கொட்டகையின் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் இளங்குஞ்சுகளை வளர்க்க ஓர் அடி உயரமுள்ள தகடுகள் அல்லது அட்டைகளை வட்ட வடிவில் அமைக்க வேண்டும்.

இந்த வட்ட வடிவ அமைப்பிற்கு அடைகாப்பான் என்று பெயர். அடைகாப்பானில் இளங்குஞ்சுகளை வளர்ப்பதற்கு “ப்ரூடிங்” என்று பெயர். 20 அடி நீளமுள்ள புரூடர் அட்டையைக் கொண்டு அமைக்கப்பட்ட வட்ட வடிவ அடைகாப்பானில் 250 குஞ்சுகளை வளர்க்கலாம். இந்த அடைகாப்பானுக்குள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி, மரத்தூள், கடலைத் தோல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பரப்ப வேண்டும்.

கூளத்தின் மீது சுத்தமான பழைய செய்தித் தாள்களை பரப்பி விட வேண்டும். சிறிய குஞ்சுகளுக்குத் தீவனத்திற்கும், கூளத்திற்கும் உள்ள வித்தியாசம் அறியும் பருவம் வரை தினந்தோறும் பழைய செய்தித்தாள்களை மாற்ற வேண்டும். மழைச்சாரல் அல்லது குளிர்ந்த காற்று கொட்டகைக்குள் புகாமல் இருக்க மெல்லிய கோணித்துணியைக் கொண்டு பக்கவாட்டு சுவரின் மேல் சுமார் 2 அடி உயரத்திற்கு மட்டும் திரையைக் கட்டித் தொங்க விட வேண்டும்.

குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பமானது மின்விளக்குகள் மூலம் அளிக்கப்படுகிறது. ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் என்ற கணக்கில் பல்புகளைக் கொண்டு செயற்கை வெப்பம் அளிக்க வேண்டும். குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செயற்கை வெப்பம் அளிப்பதற்காக மின்விளக்குகளை அடைகாப்பானில் நடுவே ஒன்று முதல் ஒன்றரை அடி உயரத்தில் தொங்கும் படி மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும். முதல் வாரத்தில் அடைகாப்பானில் குஞ்சுகளின் நடவடிக்கைகளுக்குத் தகுந்தாற்போல் மின்விளக்குகளின் உயரத்தை சரி செய்து குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வெப்பம் அதிகமாக இருந்தால் குஞ்சுகள் அடைகாப்பானின் ஓரத்தில் இருக்கும். அப்பொழுது மின்விளக்குகளின் உயரத்தை சிறிது அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வெப்பம் குறைவாக இருந்தால் விளக்குகள் அடியில் குஞ்சுகள் ஒன்றோடு ஒன்று நெருக்கிக் கொண்டிருக்கும். அப்பொழுது மின் விளக்குகளின் உயரத்தை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும்.

குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம் அடைகாப்பானில் இருக்கும் பொழுது குஞ்சுகள் பரவலாக தீவனம் சாப்பிட்டுக் கொண்டும் தண்ணீர் குடித்துக் கொண்டும் சுறுசுறுப்புடன் இருக்கும். மின்சாரம் இல்லாத சமயங்களில் மண்சட்டியில் கரித்துண்டுகளைப் போட்டு செந்தணலாக்கி அடைப்பானுக்குள் செங்கற்;களை அடுக்கி அதன் மேல் வைத்து வெப்பம் கொடுக்கலாம். பொதுவாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் 10 நாட்களுக்கும், கோடை காலங்களில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் அளித்தல் வேண்டும்.

சுற்றுப் புற வெப்பநிலையைப் பொறுத்து 7 அல்லது 10 நாட்களுக்குப் பின் வட்ட வடிவ அடைகாப்பானை நீக்கி விட வேண்டும். உமி அல்லது மரத்தூளை 6 செ.மீ உயரத்திற்கு அதிகப்படுத்த வேண்டும். அடைகாப்பானை நீக்கிய பின் இரு வாரங்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளித்தால் போதுமானது. ஏனெனில் இரவில் தொடர்ந்து வெளிச்சம் அளித்தால் இயற்கையிலேயே சுறுசுறுப்பான நாட்டுக் கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகும்.

கோழிக்குஞ்சுகளுக்கு சுத்தமான கடினத் தன்மையற்ற குடிநீரைத் தேவையான அளவு அளிப்பது அவசியம். முதல் 3 வாரங்களுக்கு 24 செ.மீ விட்டம் 28 செ.மீ உயரமுடைய ஒரு குடிநீர்த் தொட்டியும் 3 வாரங்களுக்குப் பிறகு 30 செ.மீ விட்டம் 55 செ.மீ உயரமுடைய ஒரு குடிநீர்த் தொட்டியும் 50 முதல் 60 கோழிகளுக்குப் போதுமானது. தினமும் குடிநீர்த் தட்டுக்களை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து அடுத்த நாள் உபயோகிக்க வேண்டும்.

அதனால் குடிநீர்த் தட்டுக்களின் எண்ணிக்கை இரு மடங்காக வாங்க வேண்டும். முதல் 5 நாட்களுக்குத் தண்ணீருடன் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்தும் பி காம்ப்ளக்ஸ் மருந்தும் கலந்து கொடுப்பதன் மூலம் குஞ்சுகள் நோய்த்தொற்று இல்லாமலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

முதல் 3 வாரங்களுக்கு 26 செ.மீ விட்டம் 26 செ.மீ உயரமுடைய ஒரு தீவனத்தொட்டியும் அதற்குப் பிறகு 33 செ.மீ விட்டம் 33 செ.மீ உயரமுடைய ஒரு தீவனத்தொட்டியும் 50 முதல் 60 கோழிகளுக்குப் போதுமானது. தீவன விரயத்தைத் தவிர்ப்பதற்காக தீவனத்தொட்டியில் தீவனத்தை பாதிக்கு மேல் நிரப்பி வைக்கக்கூடாது. தீவனத்தை காலை மற்றும் மாலை என இரு வேளையாக தீவனத் தொட்டியில் போட வேண்டும்.

தீவனம் கட்டியாகி விடுவதைத் தவிர்ப்பதற்காக தீவனத்தை அவ்வப்பொழுது கிளறி விட வேண்டும். இவ்வாறு நாட்டுக்கோழிகளின் இளங்குஞ்சுகளை போதுமான செயற்கை வெப்பம், சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனம் கொடுத்து நல்ல முறையில் வளர்க்கும் பொழுது இளங்குஞ்சுகள் ஆரோக்கியத்துடன் நன்கு வளர்ந்து நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் அதிக இலாபத்தை பெற்றுத் தரும்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்