இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும். பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் நலனுக்காக அரும்பாடுபட்டு மறைந்த முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் விவசாயிகள் கடன் தொல்லையாலும், சரியான வருமானம் இல்லாததாலும் விவசாயத்தை கைவிட மனமின்றி தற்கொலை செய்து வருகின்றனர்.
சௌத்ரி சரண்சிங் வரலாறு
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திற்குட்பட்ட நூர்பூரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தார். உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாள் பிரச்சனையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.
1979-ம் ஆண்டு ஜூலை மாதம், பல அரசியல் நெருக்கடிகளுக்கிடையே, நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்றார், சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.
அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.
‘ஜமீன்தாரி முறை ஒழிப்பு’, ‘கூட்டுறவு பண்ணை முறை’, ‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்’, ‘வேலை செய்பவர்களுக்கு நிலம்’ உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.
தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் இன்றைய கோரிக்கை
இன்றைய தினத்தில், விவசாயப் பிரச்னைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாய தொழிலில் 60 சதவிகிதம் பேர் ஈடுபட்டுள்ளனர். பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகளின் தொடர் உழைப்பால் ஆண்டிற்கு 265 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்படி விவசாயத்தில் பல சாதனைகள் தொடர்ந்துகொண்டிருந்தாலும் இன்னும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக நீர் மேலாண்மை இல்லாததால், முப்போக சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தற்போது ஒரு போக சாகுபடிக்கு கூட வழியில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உற்பத்திற்கேற்ற விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வங்கிகளில் கடனும் கிடைப்பதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளின் பிரச்னைகளில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நீர்நிலைகளை சீரமைத்து எப்போதும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள், நீர்மேலாண்மைக்கு தனித்துறை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் அரசு செவி சாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயத்திற்கு மாற்று உண்டா?
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம் ஆனால் ஒருபோதும் அதை உணவிற்கு மாற்றாக இருக்க முடியாது. எனவே, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் நாம் நிலவிலும் எங்கும் கால் பதிக்க முடியும். இதை உணர்ந்துகொண்டு விவசாயிகளின் வியர்வைக்கும், உழைப்புக்கும் மதிப்பு அளித்து எந்நாளும் வந்தனம் செய்வோம் என உறுதியேற்போம்.
தமிழ் விவசாயம்
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. அப்பெருமக்கள் போற்றிய வேளாண்மையை நாம் போற்றுவோம். விவசாயிகள் துயரம் நீக்கவும், தொழில் உயரவும், வருமானம் பெருகவும், வழிகாணவும் மத்தி¢ய மாநில அரசுகள் எடுக்கும் வளர்ச்சி பணிகளுக்கு துணைநின்று விவசாயிகள் வாழ்வு வளம் பெற என்றும் துணை நிற்போம். இந்நாளில் விவசாயிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தமிழ் விவசாயம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறது.