தாய்ப்பால் கிடைக்காத இளங்கால்நடைகளுக்கான மாற்று உணவு

மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் அதன் தாய்ப்பால் போன்ற சிறந்த உணவு வேறொன்றும் இல்லை. சில சமயங்களில் கால்நடைகள் குட்டிகளை ஈனும் பொழுது தாயானது இறக்க நேரிட்டாலோ அல்லது தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்பட்டாலோ புதிதாய் பிறந்த இளம் கால்நடைகளைளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலான சிறந்த மாற்று உணவை கொடுத்து இளங்குட்டிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது. தாய்ப்பாலுக்கு அடுத்த படியாக பசுவின் பாலே இளம் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் மாற்று உணவில் பெரும்பங்கு வகிக்கிறது.

இளங்கன்றுகளுக்கான உணவு

அண்மையில் கன்று ஈன்ற வேறு பசுவின் சீம்பாலை சூடுபடுத்தாமல் தாயில்லாக் கன்றுகளுக்கு அளிக்கலாம். அவ்வாறு அண்மையில் கன்று ஈன்ற பசு இல்லாத பட்சத்தில் கன்றுகளுக்கு “சீம்பால் பதிலி” தயாரித்து கொடுக்க வேண்டும். சீம்பால் பதிலி தயாரிக்க ஒரு கோழி முட்டையை உடைத்து 300 மி.லி கொதிக்க வைத்து ஆற வைத்த நீரில் கலக்க வேண்டும். இதில் அரைத் தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் 500 மிலி கொதிக்க வைத்து ஆற வைத்த 500 மிலி பசும்பாலை கலக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட சீம்பால் பதிலி இளங்கன்றுக்கு ஒரு வேளைக்கு போதுமானது.

ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற வீதத்தில் முதல் 4 நாட்களுக்கு இளங்கன்றுகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும். பிறகு உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் ஒரு நாளைக்கு 3 முறை காய்ச்சி ஆற வைத்த பசும்பாலை கொடுக்கலாம். இரண்டாவது வாரம் முதல் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற அளவில் கொடுக்க வேண்டும். இரண்டாவது மாதம் முதல் அதன் உடல் எடையில் இருபதில் ஒரு பங்கு என்ற அளவில் பசும்பால் இரு வேளையாக பிரித்து அளிக்க வேண்டும். கன்றுகளுக்கு இரண்டு வார வயதில் தரமான அடர்தீவனம் மற்றும் இளம் பசும்புல் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கன்றுகளுக்கு மூன்று மாத வயதில் பாலை நிறுத்தி விட்டு அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுக்க வேண்டும்.

இளம் ஆட்டுக் குட்டிகளுக்கான உணவு

தாயை இழந்த அல்லது பால் பத்தாத இளம் ஆட்டுக்குட்டிகளை குட்டிகளை இழந்த வேறு தாய் ஆட்டிடம் அல்லது பால் அதிகமாக சுரக்கும் வேறு ஆட்டிடம் ஊட்டச் செய்யலாம். அல்லது பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி பாலேடு நீக்கி விட்டு ஆற வைத்து பால் புட்டி மூலமாக இளங்குட்டிகளுக்கு கொடுக்கலாம். முதல் மாதத்தில் உடல் எடையில் ஆறில் ஒரு பங்கு இரண்டாவது மாதத்தில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் பால் கொடுக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு பிறகு பால் உணவு தேவையில்லை. குட்டிகளுக்கு இரண்டாவது வார வயதிலிருந்தே தரமான அடர்தீவனம் மற்றும் பசும்புல் அளிக்க வேண்டும்.

மாற்றுத் தாய் மூலம் பால் ஊட்டச் செய்யும் பொழுது இறந்த ஆட்டுக்குட்டியின் தோலினை தாயை இழந்த ஆட்டுக்குட்டியின் மீது போர்த்தி குட்டியை இழந்த தாயிடம் விட்டு விடலாம். உயிருடன் உள்ள குட்டியுடன், தாயை இழந்த குட்டியையும் சேர்த்து உப்புக்குளியல் கொடுத்து மாற்றுத் தாயுடன் விட்டு விடுவதன் மூலம் மாற்றுத் தாய், தன் சொந்தக்குட்டியையும், தாயை இழந்த குட்டியையும் வாசனை மூலம் வேறுபடுத்த முடியாது.

பன்றிக்குட்டிகள் பராமரிப்பு

மாற்றுத் தாய் இல்லாத பட்சத்தில் பசும் பால் நாள் ஒன்றிற்கு ஒரு குட்டிக்கு 300 முதல் 500 மிலி அளிக்கலாம். இதை முதல் வாரத்தில் 5 முதல் 6 முறை பிரித்து அளிக்க வேண்டும். பின்னர் இதைப் படிப்படியாக குறைத்து நாள் ஒன்றிற்கு இரண்டு முறை என்ற விகிதத்தில் அளிக்கலாம். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி இரும்புச்சத்து ஊசி மருந்தை குட்டிகளுக்கு போட வேண்டும். பன்றிக்குட்டிகள் இருக்கும் இடத்தில் 60 வாட்ஸ் மின்சார விளக்கை எரிய விடுவதன் மூலம் அதற்கு தேவையான வெப்பம் கிடைக்கும்.

குதிரைக்குட்டிகள் பராமரிப்பு

தாயை இழந்த குதிரைக்குட்டிகளுக்கு 250 மிலி பசும் பாலில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து இரண்டு மணி நேர இடைவெளில் முதல் மூன்று நாட்களுக்கு அளிக்க வேண்டும். நான்காம் நாளிலிருந்து பாலின் அளவை அதிகரித்து அளிக்கப்படும் இடைவெளியை குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதம் ஆனவுடன் பாலில் சர்க்கரை சேர்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாய்க்குட்டிகள் பராமரிப்பு

இரண்டு மேஜைக்கரண்டி பால் ஏடு, இரண்டு மேஜைக்கரணடி தூய்மையான நீர் மற்றும் ஒரு தேக்கரண்டி அளவு சாக்கரை கலந்து முதல் ஏழு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு அதனுடன் ஒரு முட்டையும் சேர்த்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அளிக்க வேண்டும். ஒரு மாத வயதிற்கு பிறகு ஒரு நாளைக்கு 5 முறை கொடுத்தால் போதுமானது. 500 கிராம் எடையுள்ள நாய்க்குட்டிக்கு ஒரு நாளைக்கு 90 கிராம் உணவு தேவைப்படும்.

பூனைக்குட்டிகள் பராமரிப்பு

பசும்பாலுடன் நீர் கலந்து கொதிக்க வைத்து ஆற வைத்த பிறகு அதனுடன் வைட்டமின் தாது உப்பு சொட்டு மருந்து 3 துளிகள் கலந்து கொடுக்க வேண்டும். மூன்று மாத வயது வரை நாள் ஒன்றிற்கு 4 முறையும் பிறகு 5 மாத வயது வரை 3 முறையும் 6 மாத வயதிற்கு மேல் நாள் ஒன்றிற்கு 2 முறையும் உணவளிக்க வேண்டும்.

இளங்கால்நடைகளுக்கு மாற்று உணவு கொடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

அளவுக்கு அதிகமான உணவு அளிக்கக்கூடாது. உணவு அளிக்கும் பொழுது சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். பால் பாத்திரங்கள் மற்றும் பால் புட்டிகளை கழுவித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குட்டிகளுக்கு சுத்தமான குடிநீர் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்