பருத்தி இந்தியாவின் மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், நம் நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பருத்தி விளைச்சலில் இந்தியா முதலிடம் வகித்த போதிலும், உற்பத்தியில் ஐந்தாவது இடம் பெறுகிறது. அதிக விளைச்சலுக்கு நல் விதைகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, தரமான விதை உற்பத்திக்கு பின்வரும் விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை கையாள வேண்டும்.
நிலத்தேர்வு
நிலம் தேர்வு செய்யும் போது முந்திய பருவத்தில் வேறு இரக பருத்தி பயிரிடப்படாத நிலத்தை தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு தான்தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பைத் தடுக்கலாம். ஏற்கனவே, பருத்தி பயிர் செய்த நிலமாக இருந்தால், நீர்பாய்ச்சி அதில் புதைந்துள்ள விதைகளை முளைக்க வைத்து பின்னர் ஒரு வாரம் கழித்து உழுது விடுவதால் பிற இரக பருத்தி செடிகளை அழித்து விடலாம். நல்ல வடிகால் வசதி கொண்ட மண் வளம் கொண்ட நிலத்தினை தேர்ந்தெடுப்பதன் மூலமாகவும் வளமான செடிகளைப் பெறலாம்.
பருவம்
பருத்தி விளைவிக்க பல பருவங்கள் இருந்த போதிலும், விதை உற்பத்திக்கேற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். விதைகள் செடியில் முதிரும் போது குளிர்ந்த மற்றும் உலர்ந்த தட்பவெப்பம் இருத்தல் வேண்டும். பருத்தி விதைப்பிற்கு பிப்ரவரி – மார்ச் மற்றும் ஆகஸ்ட்- செப்டம்பர் பருவங்கள் மிகவும் ஏற்றதாகும்.
விதை அளவு
பருத்தியின் விதை அளவு இரகம், பஞ்சுடன் மற்றும் பஞ்சு நீக்கப்பட்ட விதைகள் பொறுத்து கீழ்க்காணும் வகையில் மாறுபடும்.
இடைவெளி
நடவு செய்யும் இடைவெளி கீழ்க்காணும் வகையில் இரகங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
விதை நேர்த்தி
அமில முறையில் பஞ்சு நீக்கம் செய்தல்
ஒரு உலர்ந்த பிளாஸ்டிக் வாளியில் ஒரு கிலோ பஞ்சு விதையை எடுத்து அதில் 100 மி.லி. அடர் கந்தக அமிலத்தை ஒரே சீராக ஊற்ற வேண்டும். பின் ஒரு காய்ந்த குச்சி கொண்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு தொடர்ந்து ஒரே சீராக நன்கு கலக்கும் போது விதைகளின் மேல் உள்ள பஞ்சு நீங்கி விதைகள் நீங்கி விடும். பின்னர் விதைகளை தண்ணிர் விட்டு 5 அல்லது 6 முறை அமிலம் முழுவதும் நீங்கும் படி நன்கு கழுவ வேண்டும். கடைசி முறை கழுவும் போது நீரை நன்கு கலக்கி சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும். பின்பு நீரின் மேலாக மிதக்கும், பொக்கு விதைகள், உடைந்த, பூச்சி தாக்குதலுக்கு ஆளான, மிகச்சிறிய மற்றும் சரியாக முற்றாத விதைகள் முதலானவற்றை பிரித்து எடுத்து விடவும். பின்பு அடியில் தங்கிய தரமான, நன்கு முற்றிய விதைகளை மட்டும் நிழலில் உலர்த்தி பின் வெயிலில் உலர்த்த வேண்டும்.
தரமான விதைகளை தேர்ந்தெடுத்தல்
ஒரு ஆண்டிற்கு மேல் சேமிப்பு செய்த விதைகளை விதைப்பிற்கு உபயோகிப்பதை தவிர்த்தல் நல்லது. ஏனென்றால், விதைகளில் முளைப்புத்திறன் குறைந்து விடுகிறது. மேலும், தேர்ந்தெடுத்த விதைகளின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். பஞ்சு நீக்கிய விதைகளை இரு மடங்கு தண்ணிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, பின் ஊறிய விதைகளை நிழலில் உலர்த்தி முன்பு இருந்த ஈரப்பதத்திற்கு உலர வைக்க வேண்டும். பின் திரும்பவும் உலர வைத்த விதைகளை நீரில் போட்டால் இறந்த விதைகள் மிதக்கும். இவ்வாறு மிதக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும். அடியில் தங்கிய விதைகள் தரமான விதைகள் ஆகும்.
விதைகளைக் கடினப்படுத்துதல்
விதைகளை கடினப்படுத்த, 600 மி.லி. 2 சத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 10 மணி நேரம் ஊற வைத்து பின்பு உலர்த்த வேண்டும். இவ்வகை விதை நேர்த்தி முறை மானாவாரி பயிருக்கு மிகவும் ஏற்றது. இது தவிர பின்வரும் விதை நேர்த்தி முறைகளையும் விதைத் தர மேம்பாட்டிற்கு கையாளலாம். ஊதா நிற பாலிமர் (ஒரு கிலோவிற்கு 3 கிராம்) + கார்பென்டசிம் (ஒரு கிலோவிற்கு 2 கிராம்) + இமிடாகுளோபிரிட் (ஒரு கிலோவிற்கு 1 மி.லி.) + டை அமோனியம் பாஸ்பேட் (ஒரு கிலோவிற்கு 30 கிராம்) + நுண்ணூட்டச் சத்து (ஒரு கிலோவிற்கு 20 கிராம்) மற்றும் அசோஸ்பைரில்லம் (ஒரு கிலோவிற்கு 80 கிராம்) கலந்து விதை நேர்த்தி செய்வதால் நல்ல முளைப்புத் திறனைப் பெறலாம்.
விதைப்பு
பருத்தி வீரிய ஒட்டு இரக விதைப்பு, மற்ற பயிர்களில் உள்ள வீரிய ஒட்டு இரகங்களின் வரிசை விகிதத்தைப் போலில்லாமல் மாறுபட்டது. அதாவது ஒரு ஏக்கர் பயிர் செய்வதாக இருந்தால் பெண் இரக விதைகளை 80 சென்ட்டிலும், ஆண் இரக பஞ்சு நீக்கப்பட்ட விதைகளை 20 சென்ட்டிலும் அதாவது 8க்கு இரண்டு என்ற விகிதத்தில் பெண் மற்றும் ஆண் விதைகளைத் தனித்தனியே விதைக்க வேண்டும். மேலும், ஆண் மற்றும் பெண் இரகங்களுக்கு இடையே 5 மீ. இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.
பயிர் விலகு தூரம்
பருத்தி தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கையுடைய பயிராகும்.
சான்று நிலை : விதை உற்பத்தி செய்யும் போது பயிரிடப்படும் விதைப் பயிர் பிற இரகங்களிலிருந்து குறைந்தது 30 மீட்டர் தூரத்திற்கு பயிரிடப்பட வேண்டும்.
வீரிய ஒட்டுத் தொழில் நுட்பங்கள்
பெண் செடியின் பூவிலிருந்து மகரந்தப் பையை நீக்கி விட்டு பின்பு ஆண் செடி பூவின் மகரந்தத்தைத் தடவுதலே பருத்தியில் கையாளப்படும் வீரிய ஒட்டு விதைத் தொழில்நுட்பமாகும். பெண் செடியில் அடுத்த நாள் மலரும் நிலையில் உள்ள மொட்டுக்களைத் தேர்ந்தெடுத்து அல்லிவட்டம், மகரந்தப்பை போன்றவற்றை, சூல்தண்டிற்கோ அல்லது சூல்முடிக்கோ சேதம் ஏற்படாத வண்ணம் கைகளால் நீக்கி விட வேண்டும். பின் சிகப்பு நிற காகித பைகளைக் கொண்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படாதவாறு மூடி விட வேண்டும்.
இத்தொழில் நுட்பத்தை மாலை 3 மணி முதல் 5 மணி வரை செய்ய வேண்டும். முடிந்த மட்டிலும் அடுத்த நாள் மலரும் நிலையில் உள்ள அனைத்து மொட்டுக்களிலும் இத்தொழில் நுட்பத்தைக் கையாள வேண்டும்.
அடுத்த நாள் காலை சிவப்பு காகிதங்களை ஒன்று விடாமல் அகற்றி, ஆண் செடியிலுள்ள பூக்களைப் பறித்து அப்பூக்களின் மகரந்தத்துளை பெண் செடியில் உள்ள சூல்முடியில்படும்படி தடவியபின் வெள்ளை நிற காகித பைகளை அனைத்து பக்கங்களிலும் தடவவேண்டும்.
ஒரு ஆண் பூவை 5 பெண் பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்ய உபயோகிக்கலாம். இதை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும். இதேபோல் தினமும் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 வாரங்கள் மகரந்தச் சேர்க்கை செய்து வர வேண்டும். இவ்வாறு செயற்கை முறையில் மகரந்தச் சேர்க்கை முடிந்தவுடன் ஆண் செடிகளை உழுதுவிட வேண்டும்.
கலவன் நீக்குதல்
பயிரிடப்பட்ட பருத்தியில் அந்தக் குறிப்பிட்ட இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற செடிகளையும், களைகளையும் நோய் தாக்கப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில், அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்பே நீக்குதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை தடுக்கும் முறை
பருத்தியில் பூ மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தவிர்க்க 40 பி. பி. எம். நாப்தலின் அசிடிக் அமிலம் (40 மில்லி கிராம் நாப்தலின் அசிடிக் அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணிரில் கரைக்க வேண்டும்) என்ற ஊக்கியை இரண்டு முறை தெளிக்க வேண்டும். முதலில் பூ பூக்கும் தருணத்திலும், பின்பு முதல் தெளிப்பிலிருந்து ஒரு மாதம் கழித்தும் தெளிக்க வேண்டும்.
நுனியரும்பு கிள்ளுதல்
நுனியரும்பு கிள்ளுதல் என்பது பருத்தியில் கையாள வேண்டிய ஒரு முக்கிய தொழில் நுட்பம் ஆகும். சில இரகங்களில் பயிர்கள் அதிக உயரம் வளரும்போது பூ பிடிக்கும் திறன் பாதிக்கப்பட்டு, காய்கள் பிடிப்பது வெகுவாக குறைந்து விடும். இத்தகைய இரகங்களில் செடியின் வளரும் நுனியினை கிள்ளி விடுவதால் உயரம் தடைபட்டு பக்க கிளைகள் அதிகம் வளரும். அதனால் பூ மற்றும் காய் பிடிப்பு அதிகரிக்கும்.
அறுவடைக்கு ஏற்ற தருணம்
தக்க தருணத்திற்கு முன்பே அறுவடை செய்வதால் விதைகள் சுருங்கி சிறுத்து முளைப்புத் திறனில் பாதிப்பு ஏற்படும். இதேபோல் கால தாமதமாகி, அதாவது நன்கு வெடித்தவுடன் பறித்தால் சுற்றுப்புற சூழ்நிலையினால் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே, பருத்தி மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற 45 – 55 நாட்களில் விதைகள் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு ஏற்ற தருணத்தில் இருக்கும். வெடித்த காய்களை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.
பறிப்பு முறை அறுவடை
பருத்தி விதைப் பஞ்சுகளை அதிகாலை வேளையில் பறித்தல் நல்லது. ஏனெனில், இலைச்சருகுகள், தூசி, துப்பு முதலியவை ஒட்டாமல் இருக்கும். பறிக்கும் போது பருத்தி விதைப் பஞ்சுகளை மட்டுமே பறிக்க வேண்டும். தவிர்த்து, சிறிது இடைவெளி விட்டு பஞ்சு நீக்கம் செய்யவும். பஞ்சு நீக்கம் செய்யும் போது ஒரு மணி நேரத்திற்கு 4.5 முதல் 5.5 கிலோ பஞ்சு பிரித்தெடுக்கும்படி இயந்திரத்தை இயக்க வேண்டும். இவ்வாறு பிரித்தெடுத்த பின் நிழலில் நன்கு உலர்த்த வேண்டும்.
விதைத் தரம் பராமரிப்பு
விதைகளில் காயங்கள் ஏற்படுவதை வெகுவாகத் தவிர்க்கலாம். மேலும், காய்ந்த மணலைச் சற்று உயரமாக (அதாவது ஒரு அங்குல கனத்திற்கு) கொட்டி அதன் மேல் பருத்தி விதைப் பஞ்சுகளை காய வைப்பது நல்லது. விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த கெட்டுப்போன விதைகளையும், கல், மண், தூசி முதலியவற்றையும் அகற்றி விட வேண்டும். விதை சுத்திகரிப்பின் போது உலர்த்தும் கருவிகள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், மருந்து கலக்கும் இயந்திரங்கள் போன்றவைகளை ஒரு இரகத்திற்கு பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும் பொழுது நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடின் விதைக் கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்துய்மை பாதிக்கப்படும். எனவே, விதை சுத்திகரிப்பு முறைகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
விதை சேமிப்பு
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத் திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 10 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ சேமிக்க வேண்டும். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலிதீன் பைகளில் சேமிக்கலாம்.
விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையன. ஆகையால், காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள இடங்களான கடலோரப்பகுதிகள் மற்றும் நதி ஓரங்களில் விதைகளை சேமிக்க ஈரக்காற்றுப் புகா பைகளை (பாலித்தீன் 700 அடாவு) உபயோகிக்க வேண்டும். மேலும், விதைகளை சேமிக்க எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்த வேண்டும்.