இயற்கை உரம்

செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிக்கும் முறை

Method of preparation of concentrated compost manure

செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம்

செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் மண் வளத்தை அதிகப்படுத்துவதுடன், இடுபொருள் செலவையும் குறைக்கலாம்.

விவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது உரம் ஆகும். நாளுக்கு நாள் உரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் கனிம உரங்களின் பயன்பாடு போதிய அளவில் இருந்த போதும் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இயற்கை உரங்களை நிலத்தில் இடாததும், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்காததுமே ஆகும்.

இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) விவசாயிகள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தொழு உரம் தயாரிப்பு முறைகள்

தேவையான பொருள்கள்

  1. பண்ணைக்கழிவு – 250 கிலோ
  2. மாட்டுச்சாணம் – 250 கிலோ
  3. டிஏபி உரம் – 25 கிலோ
  4. இப்கோ 20:20 உரம் (டிஏபி இல்லை என்றால்) – 40 கிலோ
  5. ராக் பாஸ்பேட் – 140 கிலோ
  6. ஜிப்சம் – 100 கிலோ
  7. யூரியா – 5.5 கிலோ
  8. அசோஸ்பைரில்லம் – 1 கிலோ
  9. பாஸ்போபேக்டிரீயா – 1 கிலோ

தயாரிப்பு முறை

கம்போஸ்ட் தயாரிக்க 10 அடி நீளமும் 5 அடி அகலமும் 3 அடி ஆழமும் உள்ள குழியை, சூரிய வெளிச்சம் படும் மேடான இடத்தில் தேர்வு செய்ய வேண்டும்.

சோகைத்தாள் மற்றும் பண்ணைக்கழிவுகள் 250 கிலோ மற்றும் சாணம் 250 கிலோ சேகரிக்கவேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் ஆகியவற்றை பசும் சாணக்கரைசலுடன் கலக்க வேண்டும்.

குழியில் ஒரு வரிசை பண்ணைக்கழிவுகள் இட்டு அதன்மேல் டிஏபி, யூரியா மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை பரப்பி அதற்கு மேல் பசும் சாணக்கரைசலை ஊற்றி மூடுமளவு மண்ணைப் பரப்ப வேண்டும்.

இதுபோன்று 16 வரிசைகள் இட்டு 3 அடி ஆழ குழியை நிரப்பி மேலாக கெட்டியான சாணக்கரைசல் கொண்டு மூடவேண்டும்.

மழை மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க குழியை பாலித்தீன் தாள் கொண்டு மூட வேண்டும். ஈரத்தன்மையை நீட்டிப்பதற்கு இரண்டு முதல் நான்கு இடங்களில் குழாய் வழியாக தண்ணீர் ஊற்றி ஊறச்செய்யவேண்டும்.

110 நாள்கள் கழிந்து மக்கியுள்ள இந்த உரத்தை எடுத்து வயலுக்கு இடலாம். செறிவூட்டப்பட்ட இந்த தொழு உரத்தில் 1.5 முதல் 2.5 சதவீதம் தழைச்சத்து, 3.4 முதல் 4.2 சதவீதம் மணிச்சத்து மற்றும் சுண்ணாம்பு, கந்தகச் சத்துகள் அடங்கி இருக்கும்.

தொழு உரத்தின் பயன்கள்

தழை, மணி, கந்தகம் மற்றும் சுண்ணாம்பு சத்துகளை கூடுதலாகத் தருகிறது. மண் உள்ள மணிச்சத்தை பயிருக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. மண் வளத்தை அதிகப்படுத்தி அங்கக சத்தைக் கூட்டுகிறது. கனிம வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது. மண்ணின் ஈரத்தன்மையைக் காக்கிறது. மானாவாரி நிலங்களுக்கு மிகவும் ஏற்றது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!