செம்மறி ஆடு கிடாக்குட்டிகள் வளப்பின் மூலம் செழிப்பான வருமானம்

செம்மறி ஆடுகள் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. செம்மறி ஆடுகள் எல்லாவித தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரக் கூடியவை. பயிரிடமுடியாத தரிசு நிலங்களையும் களைகளையும் செம்மறி ஆடுகள் பயன்படுத்தி மனித இனத்திற்குத் தேவையான இறைச்சி, கம்பளி, தோல் மற்றும் உரம் முதலியவற்றை அளிக்கின்றன. கால்நடைப் பண்ணைத் தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விற்பனையில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் ஆடு வளர்ப்பு மட்டும் அதற்கு விதிவிலக்கு என்று மூறலாம். ஆடு வளர்ப்பில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களுக்கும் விற்பனையில் நலல வாய்ப்புள்ளது. மேலும் ஆட்டிறைச்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆடு வளர்;ப்புத் தொழிலில் செம்மறி ஆட்டுக் கிடாகுட்டிகளை இறைச்சிக்காக வளர்த்தல் என்பது குறைந்த காலத்தில் வருமானம் தரக்கூடிய தொழிலாகும். இம்முறையில் செம்மறி ஆட்டுக் கிடாக்குட்டிகளை 3 மாத வயதில் வாங்கி 6-9 மாத வயது வரை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்தால் விரைவில் வருமானம் பெருவதுடன் அதிக இலாபம் பெறமுடியும்.

செம்மறி ஆட்டுக் கிடாக்குட்டிகளை வாங்கும் முறை:
இறைச்சிக்காக செம்மறி ஆட்டுக்குட்டிகளை வளர்க்க வாங்கும் பொழுது கிடாக்குட்டிகளைத் தான் வாங்க வேண்டும். ஏனெனில் பெட்டைக்குட்டிகளைக் காட்டிலும் கிடாக்குட்டிகளின் வளர்ச்சி வேகமாக இருக்கும். மூன்று மாத வயதுடைய தாயிடமிருந்து பிரிந்து புற்கள் கடிக்கும் நிலையில் உள்ள கிடாக்குட்டிகளை தேர்வு செய்து வாங்க வேண்டும். குட்டிகள் நோய்க்கான அறிகுறி இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். குட்டிகள் வயதிற்கேற்ற உடல் எடையுடனும்; குறைபாடுகள் இல்லாத நல்ல உடலமைப்புடனும் இருக்க வேண்டும். தொற்று நோய் இல்லாத மந்தைகளில் கிடாக்குட்டிகளை வாங்க வேண்டும். கிடாக்குட்டிகளை இடைத்தரகர்களிடமிந்தும், சந்தையிலிருந்தும் வாங்காமல் விவசாயிகளிடமிருந்து வாங்குதல் மிகவும் சிறந்தது.

கிடாக்குட்டிகள் வாங்கியவுடன் செய்ய வேண்டியவை:
குட்டிகளை வாங்கியவுடன் சூரிய ஒளி நன்கு இருக்கும் பொழுது குளிப்பாட்டிவிட்டு குட்டிகளுக்கு நாடாப்புழுவிற்கான குடற்புழு நீக்க மருந்தினை கால்நடை மருத்துவர் உதவியுடன் கொடுக்க வேண்டும். பின்பு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்தால் கிடாக்குட்டிகள் நலல ஆரோக்கியத்துடனும் சீரான உடல் எடை கூடியும் வளரும். கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக் கொள்வது கிடாக்குட்டிகளை நோய் வராமல் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். முக்கியமாக, குட்டிகளை நாம் இறைச்சிக்காக கொழுக்கச் செய்வதால் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசியைக் கண்டிப்பாகக் குட்டிகளுக்குப் போட வேண்டும். இவ்வாறு வளர்க்கப்படும் இளம் குட்டிகள் ஒரு மாதத்திற்குள் நாம் அளிக்கும் தீவனம் மற்றும் புற்களை சரிவர உட்கொள்ளாமல் இருந்தால் அக்குட்டிகளை உடனே நாம் பண்ணையை விட்டுக் கழிக்க வேண்டும். ஏனெனில் சில குட்டிகள் தாய்ப்பாலின் ஏக்கத்துடன் மேய்ச்சல் பழக்கம் குறைந்து காணப்படும். இக்குட்டிகளின் மேய்ச்சல் பழக்கம் ஏற்பட காலதாமதம் ஆவதால் உடல் வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்க நீண்ட நாட்கள் பிடிக்கும்.

தீவன மேலாண்மை:
கிடாக்குட்டிகள் விரைவாக நன்கு வளர நல்ல மேய்ச்சல் வசதி மிகவும் அவசியமாகும். அதனால் அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்த கிடாக்குட்டிகள் வாங்குவதற்கு முன்பாக பண்ணையில் கோ-4 போன்ற தீவனப்புற்கள், முயல் மசால், வேலி மசால் போன்ற பயறுவகைத் தீவனங்கள் மற்றும் சூபாபுல், கிளைரிசிடியா, அகத்தி போன்ற மர வகை பசுந்;தீவனங்களையும் வளர்க்க வேண்டும். பசுந்தீவனங்கள் அனைத்தையும் கலந்து பல பகுதிகளாக பிரித்து நான்கு வேளை கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் குறைவாக கிடைக்கும் காலங்களில் பசுந்தீவனம் கிடைக்கும் அளவிற்கு கொடுத்து விட்டு மீதி தேவையை பூர்த்தி செய்ய உலர் தீவனங்களான கடலைக்கொடி, கொள்ளுக்கொடி, நரிப்பயறு, தட்டைக் கொடி, சணப்பு போன்றவற்றைக் கொடுத்தல் அவசியம். இவை தவிர வளரும் குட்டிகளுக்கு புரதம் நிறைந்த கலப்புத் தீவனம் தினமும் 100 கிராம் அளவிற்குக் கொடுக்க வேண்டும். தானியங்கள் 40 சதவிகிதம், பருப்பு நொய் 20 சதவிகிதம் பிண்ணாக்கு வகைகள் 18 சதவிகிதம், தவிடு 20 சதவிகிதம், தாது உப்பு 1 சதவிகிதம், உப்பு 1 சதவிகிதம் கலந்து கலப்புத் தீவனம் தயாரித்து குட்டிகளுக்கு அளிப்பதன் மூலம் கிடாக்குட்டிகள் அதிக உடல் வளர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடன் வளர்வதால் விரைவில் கிடாக்குட்டிகள் விற்பனைக்கு தயாராகி விடும்.

பசுந்தீவனம் கிடைக்காத காலங்களில் உலர்ந்த பயறு வகைத் திவனப்பயிர்கள் 50 சதவிகிதம், கலப்புத் தீவனம் 50 சதவிகிதம் கலந்து முழுத்தீவனமாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதால் குட்டிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கிடாக்குட்டிகளில் 100 கிராம் முதல் 130 கிராம் அளவிற்கு தினசரி வளர்ச்சி இருக்கும.; குட்டிகளில் கொழுப்பு இருக்க வேண்டும் என்றால் 60 சதவிகிதம் பயறுவகைத் தீவனமும் 40 சதவிகிதம் கலப்புத்தீவனம் கலந்து கலந்து முழுத்தீவனமாக குட்டிகளை விற்பதற்கு 1 மாதத்திற்கு முன்பு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு கிடேரிக் குட்டிகளுக்கு நல்ல தீவனமும், பராமரிப்பும் தரப்பட்டால் குட்டிகள் நன்கு வளர்ச்சியடைந்து 9 மாத வயதை அடையும் போது 18 முதல் 20 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும்.

தாது உப்புக் கட்டி:
கிடாக்குட்டிகளின் உடலில் தாது உப்புப் பற்றாக்குறை ஏற்பட்டால் மண்ணை நக்குவது, அடுத்த குட்டிகள் மற்றும் சுவற்றை நக்குவது போன்ற செயலில் ஈடுபடும். இதைத் தவிர்க்க வளரும் குட்டிகளுக்கு தாது உப்புக் கட்டிகள் வாங்கி கொட்டிலில் கட்டித் தொங்க விட வேண்டும். குட்டிகளுக்குத் தேவை ஏற்படும் பொழுது அந்த கட்டிகளிலிருந்து தாது உப்புக்களை நாவால் நக்கி உட்கொண்டு தனது தாது உப்புத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும். தாது உப்புக்களை அடர்தீவனத்திலும் கலந்து கொடுக்கலாம்.

இறைச்சிக்காக கிடாக்குட்டிகள் விற்பனை:
ஆறு மாதத்திற்கு மேல் குட்டிகளின் எடை கூடுவதைப் பொறுத்து இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். குட்டிகள் வளர்க்கும் பொழுது பண்டிகை காலங்களில் விற்பனைக்கு வருமாறு வளர்க்க வேண்டும். அதாவது தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், பொங்கல் விழா போன்ற காலங்களில் வியாபாரத்திற்கு வருமாறு குட்டிகளை வளர்த்து விற்பதன் மூலம் விற்பனை எளிதாவதுடன், கிடாக்குட்டிகளுக்கு அதிக விலை கிடைப்பதால் அதிக இலாபம் பெறலாம்.

கிடாக்குட்டிகள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:
குறைந்த காலத்தில் குறைந்த மூலதனத்தில் அதிக வருவாய் ஈட்ட முடியும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே குட்டிகளை வளர்ப்பதால் நோய் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் மருத்துவ செலவுகள் வெகுவாகக் குறைகின்றது. கொட்டகை அமைப்பதற்கான செலவு மிகவும் குறைகிறது. குறிப்பிட்ட பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும் வகையில் குட்டிகளை வாங்கி வளர்த்து அதிக விலையில் விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாம் கிடைக்கும் செம்மறி ஆடு வளர்ப்பில் அதிக முன் அனுபவம் தேவையில்லை. குட்டிகளை பராமரிப்பது மிகவும் எளிது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்