சினையாக இருக்கும் கறவை மாடுகளைச் சிறப்புக் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். குறிப்பாகச் சினைக்காலத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிகக் கவனம் தேவை. தொடக்கக் காலத்தில் பராமரிப்பில் தவறுகள் ஏற்பட நேர்ந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இறுதி மாதங்களில் கரு வளர்ச்சி மிக வேகமாக நடைபெறுவதால் சத்துத் தேவைகள் அதிகரிக்கின்றன. அதைச் சமாளிக்க தாயின் உடலில் சக்தி தேவை. மேலும் பால் உற்பத்திக்கும் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ந்து விட்ட கருவினால் வயிறு பெரிதாகும் பொழுது தாய் தன் எல்லாச் செயல்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறது. ஆகவே மந்தையிலுள்ள மற்ற மாடுகளுடன் போட்டியிட்டுக் கொண்டு தீவனம் உட்கொள்வதும், மேய்ச்சல் இடங்களில் வேகத்துடன் தேவையான பசுந்தீவனத்தை உட்கொள்வதும் தடைப்படுகின்றன. ஆகவே சினைக்காலங்களில் மாடுகளைச் சரியான முறையில் கவனித்துப் பராமரித்தால் தான் கன்று வீசுதல், குறைமாதக் கன்றை ஈனுதல், பால் உற்பத்திக் குறைதல் போன்ற விளைவுகள் இல்லாமல் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும் நல்ல பால் உற்பத்தியையும் பெறமுடியும்.
சினை மாடுகளில் முக்கிய பராமரிப்பு உத்திகள்
சினை ஊசி போட்ட பசுக்களில் 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனை செய்து சினையை உறுதி செய்து தோராயமாக எப்பொழுது கன்று ஈனும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் இரு மாதச் சினைக்காலததில் குடற்புழு நீக்க மருந்து கொடுக்காமல் இருக்க வேண்டும். சினை மாடுகளை நல்ல சுத்தமான மற்றும் காற்றோட்ட வசதியுள்ள இடத்தில் பராமரிப்பது அவசியம். கொட்டகைகளின் தரை வழுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;. மந்தையிலுள்ள மற்றக் கால்நடைகளோடு சினை மாடுகள் சண்டையிடுவதும், மற்ற மாடுகள் சினை மாடுகளை முட்டித்தள்ள முயற்சிப்பதையும் அனுமதிக்கக்கூடாது. நோய்வாய்ப்பட்ட மற்ற மாடுகளோடு சினை மாடுகளைக் கட்டி வைக்கக் கூடாது.
கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொடுக்க வேண்டியுள்ளதாலும் பால் உற்பத்திக்குத் தேவையான சத்துக்களை தன்னுடைய உடம்பில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதாலும், சினைமாட்டிற்கு சத்தான மற்றும் போதுமான அளவு சரிவிகிதத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். சினைமாடுகளை அடித்துத் துன்புறுத்துவது, மிரட்டுவது, அதிக தூரம் நடக்கவைப்பது கூடாது. ஏழாவது மாத சினை முடிந்தவுடன் சினைப் பசுவைத் தனியாக பிரித்து கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும். குறிப்பாக நாய்களை சினைமாடுகள் பக்கத்தில் அண்டவிடக் கூடாது.
கறவையிலிருக்கும் சினை மாடுகள் கன்று ஈனுவதற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் பால் கற்த்தலை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் அடுத்த கறவையில் கறவைத் திறன் பாதிக்காமல், பாலின் அளவு கூடுதலாகக் கிடைக்கும். சினைக் காலத்தில் ஏழு மாதம் முதல் பாலின் அளவைப் பொறுத்து 1 முதல் 2 வாரத்தில் படிப்படியாகக் கறவையைக் குறைக்க வேண்டும். அதாவது 5 முதல் 7 நாட்களுக்கு இரு வேளைகள் கறக்கும் மாடுகளை ஒரு வேளை மட்டும் கறக்க வேண்டும். அதன் பின் ஒரு வேளைக் கறவையையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கறப்பதன் மூலம் முற்றிலுமாக நிறுத்தி விடாம். ஒரே நாளில் கறவையை நிறுத்தினால் மடி நோய் வந்து அடுத்த கறவையைப் பாதித்து விடக் கூடும். பால் வற்றிய சினைமாட்டின் காம்புகளின் வழியே “ஆன்டிபயாடிக”; எனப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தை கால்நடை மருத்துவர் ஆலோசனையின் படி செலுத்தினால் மடி வீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
சினைமாடுகள் சில சமயங்களில் சினைப்பருவ அறிகுறிகளைக் காண்பிக்கும். இந்தச் சினை அறிகுறிகளினால் கருவிற்கு எந்த வித ஆபத்தும் இல்லை. ஆயினும் சினைக்காலத்தில் 3 மாத இடைவெளியில் மீண்டும் இரண்டாவது முறையாகச் சினைப் பரிசோதனை செய்து மாடுகள் சினையாக உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். சினை மாடுகளை காலைப் பொழுதில் மட்டும் 4 மணி நேரம் மேய்ச்சலுக்கு விடுவது எளிய உடற்பயிற்சியாக இருக்கும். தேவையான அளவு தரமான குடிநீரும், வெப்பம் மற்றும் குளிர் தாக்குதலிலிருந்து நல்ல பாதுகாப்பும் தரப்பட வேண்டும்.
தீவனப் பராமரிப்பு
கன்றின் வளர்ச்சி தாயின் கருவறையில் இருக்கும் பொழுதே தொடங்குவதால், ஆரோக்கியமான கன்றினைப் பெறுவதற்கு சிறந்த தீவன மேலாண்மை இன்றியமையாததாகும். சினை மாடுகளுக்கு முக்கியமாக கடைசி மூன்று மாதங்களுக்கு போதுமான தீவனம் அளிப்பது அவசியமாகும். ஏனெனில் சினைக்காலத்தில், ஏழாவது மாதத்தில் கன்றின் வளர்ச்சி துரிதமடைவதால் கன்றின் வளர்ச்சிக்கும், கறவை காலத்திற்குத் தேவைப்படும் சத்துப் பொருட்களின் தேவைக்கும், தாயின் தீவனத் தேவையும் அதரிகரிக்கிறது. மேலும் இது முந்தைய கறவையில் இழந்த உடல் திசுக்களை புதுப்பித்துக் கொள்ள உதவுவதோடு கிடேரிகளில் எலும்பு வளர்ச்சி மாற்றத்திற்கும் இது மிகவும் அவசியம் ஆகும்.
அவ்வாறு சினைக்காலத்தில் சரி வர தீவனம் கொடுக்கவில்லையென்றால் கன்று வீசுதல் மற்றும் குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல் ஏற்பட வாய்ப்புண்டு. நஞ்சுக் கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித் தள்ளுதல், பால் காய்ச்சல் நோய் ஏற்படுதல் மற்றும் பால் உற்பத்தி குறையும். ஆகவே, சினை மாட்டிற்கு ஏழு மாத சினைக்கு மேல் நாளொன்றுக்கு 2 கிலோ அடர் தீவனமும், 15 முதல் 20 கிலோ பசுந்தீவனமும், 5 கிலோ உலர் தீவனமும், 30 கிராம் தாதுஉப்புக் கலவையும் தினமும் கொடுக்கவேண்டும். மேலும் சினைக் காலங்களில் மாடுகளுக்கு எளிதாகச் செரிக்கக்கூடிய சத்துக்கள் நிறைந்த சரிவிகித தீவனம் கொடுக்க வெண்டும். கன்று ஈனுவதற்கு முன்னால் 1 கிலோ தவிடு கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்ஸம் உப்பு, ஒருதேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுத்தால்; கன்று ஈனும் பொழுது எளிதாக இருக்கும். குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் தேவையான அளவு (40-45 லிட்டர்) கொடுக்க வேண்டும்.
கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள் மற்றும் பிறபராமரிப்புகள்
நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு மற்றும் மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் உள்ளதசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்குஅடியில் குழி உண்டாகும். இதை சட்டம் உடைதல்,தட்டுஉடைதல் அல்லது குழி விழுதல் என கிராமங்களில் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்டவுடன் 24-48 மணி நேரத்திற்குள் கன்று ஈன்று விடும். மாட்டின் வெளிப்புற உறுப்பு தடித்து காணப்படும். சளிபொன்ற திரவம் அதிகமாக வடியும். கன்று ஈனும் நேரம் வரவர இத்திரவம் அதிகமாகவடியும். மாடுகள் அடிக்கடிபடுத்துக் கொண்டும், எழுந்து கொண்டும் தலையைத் தோண்டிக் கொண்டும் இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும். இந்த அறிகுறி ஏற்பட்ட உடனே மாட்டைச் சுத்தமான,சமமான இடத்தில் கட்டிவைக்க வேண்டும்.
கன்று ஈனுவதற்குமுன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடிவரை நீர் கோர்த்துக் காணப்படும். இவற்றினால் எந்த தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் இவை மறைந்துவிடும். பால் மடியும் காம்புகளும் பெரியதாக பளபள வென்றுக் காற்று அடைத்த பலூன் போன்று காணப்படும். சிலமாட்டில் சீம்பால் மடியிலிருந்து தானாக வேகசியும். கன்று ஈனும் நேரம் வந்தவுடன் மாடு முக்க ஆரம்பிக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட கன்றுகள் ஈன்ற மாடு விரைவில் கன்றை ஈன்றுவிடும். சினைக் கிடேரிகள் ஈனுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
பனிக்குடம் உடைந்தஒருமணிநேரத்தில் மாடுகன்றுக்குட்டியைஈன வேணடும். முதலில் முன்னங்கால் இரண்டு மற்றும் தலையும் சேர்ந்து வெளியே வரும். கிடேரிகள் இரண்டு மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளும். அதற்கும் மேல் கன்று ஈனாமல் மாடுமுக்கிக் கொண்டு இருந்தால், உடனே கால்நடை மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும். கன்று ஈனும் சமயத்தில் நாய்களை சினைமாடு பக்கத்தில் அண்டவிடக் கூடாது. நஞ்சுக் கொடியை நாய்கள் இழுத்துக் கொணடு செல்லும் பொழுது பசுவையும் கன்றுக் குட்டியையும் மிரளவைத்து காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கன்று ஈனும் சமயத்தில் நாய்களை அண்டவிடக் கூடாது.
கன்றுஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். கருச்சிதைவுநோய்,கருப்பை அழற்சி,கருப்பை வெளித்தள்ளுதல் போன்றவை ஏற்பட்டால் கால்நடை மருத்துவர் மூலம் உரியசிகிச்சை அளிக்க வேண்டும். மாடு கன்று ஈன்ற தேதி,மீண்டும் பருவத்திற்கு வரும் நாள், கருவூட்டல் செய்தநாள், தடுப்பூசி போடப்பட்ட விவரம் ஆகியவற்றை ஒரு சிறிய பதிவேட்டில் பதிந்துவைத்துக் கொள்ளும் பழக்கத்தை கறவை மாடுகள் வைத்திருப்போர் கடைப்பிடிக்க வேண்டும். மேற் கூறிய பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடித்து வந்தால் சினைமாட்டிலிருந்து ஆரோக்கியமான கன்றைப் பெற முடியும்.