கோழி முட்டையில் தயாரிக்கலாம் இயற்கைப் பூச்சிக்கொல்லி

உண்ணும் உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, மருந்தையே உணவாக உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்கு நிலம், நீர், காற்று உள்ளிட்ட ஐம்பூதங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மாசுபாடும், நெல், காய்கறி, தானியங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் உரங்களும், ஒருவகையில் காரணிகளாக அமைந்துவிடுகின்றன. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கையாள வேண்டுமானால், நம் உணவில் இருந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

அதற்கு, இயற்கை விவசாயமே சிறந்த வழி. ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அந்த வகையில், வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி.

வீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid)என்பது இதன் பெயர். இந்த இயற்கை பூச்சிக்கொல்லி காய்கறிகள் சாகுபடிக்கு சிறந்தது. இந்தப் பூச்சிக்கொல்லியை வீட்டில் மிக எளிய முறையில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
முட்டைகள், எலுமிச்சைப்பழ சாறு, வெல்லம்.

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் 5 எலுமிச்சைப்பழங்களில் இருந்து எடுக்கப்படும் சாற்றை சேர்த்துக் கொள்ளவும். இதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை, வைக்கவும். எலுமிச்சை சாற்றில் முட்டைகள் முழுவதும் மூழ்கியிருக்க வேண்டும். பாத்திரத்தின் மேல்புறத்தை காற்று உட்புகாதவாறு மூடி 10 நாட்கள் அப்படியே வைக்கவும்.

10 நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்துக் கரைசலை உருவாக்க வேண்டும். இந்தக் கலவைக்கு நிகராக வெல்லப்பாகைச் சேர்த்து 10 நாட்கள் அப்படியே வைக்கவும்.5 எலுமிச்சைப்பழக்கசாற்றுக்கு 50 கிராம் வெல்லம் என்ற அளவைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு உருவாகும் முட்டை அமினோ அமிலத்தை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பூச்சிக்கொல்லியாகத் தெளிக்கலாம்.

பயன்கள்:
இந்த கரைசலில், மீனின் சாற்றில் உள்ளதற்கு இணையான, தாவரத்தின் வளர்ச்சியைத் தூண்டும் அத்தனை சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவே இந்த கரைசலின் முக்கியப் பயனாகும். இந்தக் கரைசலில் இருந்து 2 மில்லிகிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறைத் தெளிப்பது நல்ல பலனைத் தரும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்