கோழி வளர்ப்புத் தொழிலானது தற்பொழுது முழுத் தொழிலாகவும் துணைத் தொழிலாகவும் இருந்து வருகிறது. சுய வேலை வாய்ப்புத் திட்டத்திலும் கோழி வளர்ப்புத் தொழிலானது முக்கியப் பங்கு பெற்று வருகிறது. கோழி வளர்ப்புத் தொழில் இலாபகரமாக இருக்க, கோழிகளை நோயின்றி காப்பது மிக முக்கியமானதாகும். கோழிகளைத் தாக்கக்கூடிய நோய்களுள் மிக முக்கியமானது இரத்தக் கழிச்சல் நோயாகும். இந்த நோயானது நாட்டுக்கோழிகள், இறைச்சிக்கோழிகள் மற்றும் முட்டைக் கோழிகளையும் தாக்கும். இரத்தக் கழிச்சல் நோய் ஏற்பட்டால் கோழிப் பண்ணைகளில் அதிக அளவில் கோழிகள் பாதிக்கப்பட்டு அதிக இறப்பு ஏற்பட்டு பெருத்த பொருளாதார சேதத்தை உண்டாக்கக்கூடியது. எனவே கோழிகள் வளர்ப்போர் இரத்தக் கழிச்சல் நோய் பற்றி அறிந்து தகுந்த தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் இந்த நோய் வராமல் தடுத்து கோழி வளர்ப்பின் மூலம் அதிக இலாபம் பெறலாம்.
இரத்தக்கழிச்சல் நோய் பரவும் முறை:
இரத்தக் கழிச்சல் நோய் ஐமீரியா எனப்படும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. இந்நோயானது மூன்று வார வயதிற்கு மேற்பட்ட கோழிகளை அதிக அளவில் தாக்கக்கூடியது. பொதுவாக இந்நோய் கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளை விட ஆழ்கூளப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளைத் தான் அதிகமாகத் தாக்குகின்றன. ஏனெனில் கோழிகள் ஆழ்கூளப்பண்ணை வீடுகளில் எச்சத்துடன் அதிகத் தொடர்பு இருப்பதால் இந்நோய் ஆழ்கூளப் பண்ணை வீடுகளில் அதிகமாக வருகிறது.
கோழிகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டகைகளில் நோய்க் கிருமிகள் வளர்வதற்குத் தகுந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள பொழுது நோய் விரைவில் பரவும். ஆழ்கூள வளர்ப்பு முறை மூலம் கோழிகளை வளர்க்கும் பொழுது அதிக ஈரப்பதம் உள்ள குளிர் மற்றும் மழைக்காலங்களில் இந்நோயானது அதிக அளவில் கோழிகளை பாதிக்கக்கூடும்.
நோயால் பாதிக்கப்பட்ட கோழிகள் எச்சம் மூலமாக நோய்க்கிருமிகளை வெளியேற்றுகின்றன. கோழியின் எச்சம் பட்ட தீவன மற்றும் தண்ணீர் பாத்திரங்கள், ஆழ்;கூளங்கள் போன்றவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் மற்ற கோழிகளுக்கு எளிதில் பரவுகின்றன. ஈரப்பதம் அதிகமுள்ள ஆழ்கூளத்தில் நோய்க்கிருமிகள் வருடக்கணக்கில் உயிருடன் இருக்கும்.
இரத்தக் கழிச்சல் நோய்க்கான அறிகுறிகள்:
1. முதலில் இறக்கைகள் தொங்கியும், இறகுகள் சிலிர்த்துக் கொண்டும், தீனி எடுக்காமலும், தண்ணீர் குடிக்காமலும் இருக்கும்.
2. நோய்க்கிருமிகள் குடலின் உட்பாகத்தையும் அங்குள்ள இரத்த நாளங்களையும் தாக்குவதால் இரத்தப் போக்கு ஏற்படும். எச்சம் முதலில் இரத்தம் கலந்தும் பிறகு இரத்தமாகவும் கழியும். அதனால் தான் இந்த நோய் இரத்தக் கழிச்சல் நோய் என்று வழங்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளின் குதத்தைச் சுற்றிலும் இரத்தம் காணப்படும். இரத்தக்கழிச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்தில் நோயை உண்டாக்கக்கூடிய நோய்க்கிருமிகளை கூட்டுப்பருவத்தில் எச்சத்துடன் வெளியேற்றப்பட்டு மற்றக் கோழிகளால் உட்கொள்ளப்பட்டு இந்நோய் மிக விரைவில் பரவுகிறது.
3. முட்டையிடும் கோழிகளில் முட்டையிடும் அளவு குறையும். இறைச்சிக் கோழிகளில் எடை குறைந்து காணப்படும்.
4. கோழிகள் சோர்ந்தும், உறங்கிக் கொண்டும் காணப்படும்.
5. எச்சம் வழியாக இரத்த இழப்பு ஏற்படுவதால் கோழிகள் செயலிழந்த நிலையுடன் கொண்டை வெளுத்தும், அதிக அளவில் இறப்பும் காணப்படும்.
6. நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கோழிகளை அறுத்துப் பார்க்கும் பொழுது கோழிகளின் குடலில் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தமும் சளியும் கலந்து காணப்படும். குடலின் உட்பாகத்தில் இரத்தம் தோய்ந்து காணப்படும். குடலின் வெளிப்பாகத்தில் இரத்தப் புள்ளிகள் காணப்படும். குடல் வீங்கிப் பெரியதாக இருக்கும்.
சிகிச்சை முறை:
இரத்தக்கழிச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்ட உடனே காலதாமதமின்றி சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு ஆம்ப்ரசால், காட்ரினால், பைபூரான் போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றைக் கால்நடை மருத்துவர் ஆலோசனை பெற்று தகுந்த அளவில் கொடுத்தால் அதிக பாதிப்பில்லாமலும், அதிக இறப்பில்லாமலும் கோழிகளைக் குணப்படுத்தலாம்.
ஆம்ப்ரசால் மருந்தை 1 லிட்டர் குடிக்கும் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து காலை மாலை என இரு வேளையாக 5 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டும். காட்ரினால் என்ற மருந்தை 1 லிட்டர் குடிக்கும் தண்ணீருக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து காலை மாலை என இரு வேளையாக மூன்று முதல் நான்கு நாட்கள் வரை கொடுக்க வேண்டும். பைபூரான் மாத்திரையை கொடுக்கும் பொழுது ஒரு லிட்டர் குடிக்கும் தண்ணீரில் ஒரு மாத்திரை கலந்து ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும்.
தடுப்பு முறைகள்:
இந்நோய் வராமல் தடுக்கக் கோழிப் பண்ணைகளை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆழ்கூளத்தின் ஈரப்பதமும் 25 சதவிகிதத்திற்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மழைக்காலத்தில் மழைச்சாரல் கொட்டகைக்குள்ளும், ஆழ்கூளத்திலும் விழாதவாறு கோணிப் பைகளை கம்பி வலைக்கு வெளியே கட்டி விட வேண்டும்.
கோழிகளுக்கு குடிக்க தண்ணீர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றும் பொழுது ஆழ்கூளத்தில் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆழ்கூளம் ஈரமாகி விட்டால் ஈரமான ஆழ்கூளத்தை உடனே அப்புறப்படுத்தி விட்டு உலர்ந்த ஆழ்கூளத்தினைப் போட வேண்டும். கோழித் தீவனத்தில் இரத்தக்கழிச்சல் நோய் தடுப்பு மருந்தைக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கலந்து கொடுக்க வேண்டும். இந்நோய் பாதிப்படைந்த கோழிப்பண்ணை வீடுகளில் இருந்து நோய் வராத கோழிப்பண்ணை வீடுகளுக்கு ஆட்கள் செல்லக் கூடாது.
ஒரே பண்ணையில் ஒரு பகுதியில் உள்ள கோழிகளுக்கு மட்டும் நோய் பாதிப்பு இருந்தாலும் நோய் வராத கோழிகளுக்கும் நோயைத் தடுக்கும் விகிதத்தில் மருந்தைக் கொடுக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரங்களை எச்சம் விழாதவாறு உயரமாக வைக்க வேண்டும். தினம் ஒரு முறையாவது ஆழ் கூளத்தை நன்கு கிளறி விட வேண்டும். அதனால் ஆழ் கூளமானது நன்கு காய்ந்து நோய்க்கிருமிகள் வளரும் சூழ்நிலை தடுக்கப்படுகிறது. கோழிகளுக்குப் போதுமான இடவசதி கொடுக்கப்பட வேண்டும்.