வெள்ளாடு வளர்ப்புத் தொழிலானது தொன்று தொட்டு வரும் பழமையான தொழில்களில் ஒன்றாகும். வெள்ளாடுகள் இறைச்சி, பால், தோல் மற்றும் எரு போன்ற பயனுள்ள பொருட்களை அளிப்பதோடு பணம் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் எந்தச் சிரமமின்றி வெள்ளாடுகளை எளிதில் விற்றுப் பணம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாலும் ஆடுகள்“ஏழைகளின் பசு” என்றும் “ஏழைகளின் ஏ.டி.எம்” என்றும் அழைக்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்புத் தொழில்களில் மிகச் சிறிய முதலீட்டில் நல்ல இலாபம் தரக்கூடியது வெள்ளாடு வளர்ப்புத் தொழில் என்பதால் கிராமப்புறங்களில் செம்மறியாட்டு மந்தையோடு சேர்த்து ஒன்றிரண்டு வெள்ளாடுகள் வளர்த்து வந்த நிலை சிறிது சிறிதாக மாறி முழுக்க முழுக்க கொட்டிலில் வைத்து,விரைவாக உற்பத்தி செய்யும் முறையைப் பின்பற்றி முழு நேரத் தொழிலாக படித்த இளைஞர்களும், கிராமப்புற விவசாயிகளும் ஆட்டுப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர்.
வெள்ளாடுகள் அதிக உடல் எடை, பால் உற்பத்தி, அதிக குட்டிகளைப் பெறவும்; நோயில்லாமல் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும் தீவனம் மிகவும் அவசியம். ஆடு வளர்ப்பில் தீவனமிடுதலில் சரியான கவனம் செலுத்தத் தவறினால் ஆடுகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டு பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும். ஏனெனில் ஆட்டுப் பண்ணைப் பராமரிப்புச் செலவில் 60 முதல் 70 சதவிகிதம் வரை அவற்றின் தீவனத்திற்கெனச் செலவாகிறது. அதனால் ஆடு வளர்ப்புத் தொழிலானது இலாபகரமான தொழிலாக இருக்க வேண்டுமெனில் ஆடு வளர்ப்போர் தீவன மேலாண்மை முறைகள் பற்றித் தெரிந்து கொண்டு ஆட்டுப் பண்ணைகளில் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.
வெள்ளாடுகளின் தீவனப் பழக்கங்கள்:
வெள்ளாடுகள் கசப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு போன்ற சுவைகளை அறியும் திறன் பெற்றவை. மேலும் மாடுகளை விட வெள்ளாடுகள் கசப்புத் தன்மையை தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றவை. வெள்ளாடுகள் வித்தியாசமான தீவனப் பழக்கம் கொண்டவை. தீவனம் சுத்தமாகவும்,புதியதாகவும் இருப்பதை விரும்பும். விதவிதமான மர இலைகள், செடிகள் மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை உண்ணும்.
ஈரமான மற்றும் மண்ணில் விழுந்த பசுந்தீவனங்களை உண்ணுவதில்லை. ஒரே நேரத்தில் நிறைய தீவனம் அளித்தால் தீவனத்தைக் கொட்டி மிதித்து விரயம் செய்யும் பழக்கம் கொண்டவை. மரஇலைகள், செடிகள் மற்றும் பயறு வகைப் பசுந்தீவனத்தை வெள்ளாடுகள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன. வெள்ளாடுகள் காய்ந்த சோளத்தட்டை போன்ற தீவனங்களை விரும்பி உண்ணுவதில்லை.
வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனங்கள்:
மேய்ச்சல் தரைகள் வெகுவாகக் குறைந்து வரும் இந்த காலக் கட்டங்களிலும் மற்றும் கிராமங்களிலும், காடுகளிலும் வெள்ளாடுகளை மேய்க்கத் தடை இருப்பதாலும் மற்றும் கோடைக் காலங்களில் வறட்சி காணப்படுவதாலும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பில் நாமே பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து ஆடுகளுக்கு கொடுக்கலாம்.
வெள்ளாடுகள் தங்கள் உடல் எடையில் 4-5 சதவீதம் வரை நாள் ஒன்றுக்கு உலர் பொருளாக உண்ணும் திறன் கொண்டவை. அதாவது 20 கிலோ எடையுள்ள ஆடு 800 கிராம் முதல் 1 கிலோ வரை உலர் தீவனம் உண்ணும். சிறந்த உடல் வளர்ச்சிக்கு 10-12 சதவிகிதம் புரதம் மற்றும் 60-65 சதவிகிதம் மொத்த செரிமான சத்துக்கள் கொண்ட தீவனமாக இருப்பது அவசியம். வெள்ளாடுகள் புற்களையும், மர தழைகளையும் விரும்பி உண்ணும்.
வெள்ளாடுகளுக்கான பசுந்தீவனங்கள்:
1. தானியவகை பசுந்தீவனங்கள் : மக்காச்சோளம்,சோளம், கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை.
2. பயிறு வகைகள்: குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு,சங்கு புஸ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ, வேலி மசால், முயல் மசால், கடலை மற்றும் டெஸ்மோடியம்.
3. புல்வகைகள் : கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல், கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத் புல்.
4. மர இலைகள்: அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, முருங்கை, கல்யாண முருங்கை, அரசு, வாகை, வேம்பு, வெண்வேல், கருவேல்,குடைவேல், ஆல், அத்தி, பலா, புளி, இலந்தை, நாவல் மற்றும் நெல்லி.
கோ-3 மற்றும் கோ-4 புற்களும், வேலி மசால் போன்ற மர வகைகளும் பயிரிட்ட 45 வது நாளில் அறுவடை செய்யலாம் என்பதால் அதிகமான அளவில் இவற்றை பயிரிட்டு மற்ற வகை மரவகைகளை வேலி ஓரங்களில் பயிரிடலாம். குறிப்பாக கிளரிசிடியா மரங்களை வேலி ஓரங்களில் நெருக்கமாக நட்டு உயிர் வேலியாக அமைக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்க்கும் பசுந்தீவனங்கள்; 30 ஆடுகளுக்கு போதுமானதாகும்.
பசுந்தீவனங்களை உற்பத்தி செய்வதன் அவசியம்:
1. வெள்ளாடுகள் கிராமங்களிலுள்ள செடி, கொடிகளை அழித்து விடும் என்பதால் கிராமங்களில் வெள்ளாடு வளர்க்கத் தடை உள்ளது.
2. வெள்ளாடுகளை காடுகளில் மேய்க்கவும் தடை உள்ளது.
3. வெள்ளாடுகளை வளர்க்க படித்த இளைஞர்களும், வேலையில்லாப் பட்டதாரிகளும், சுயவேலை தேடும் மகளிரும் விருப்பப்படுவதால் அவர்கள் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
4. மேய்ச்சலுக்குச் செல்லும் வெள்ளாடுகளுக்கு போதுமான அளவில் பசுந்தீவனங்கள் எல்லா நாட்களிலும், எல்லா மாதங்களிலும் கிடைப்பது இல்லை. குறிப்பாக குளிர் மற்றும் கோடை காலங்களில் பசுந்தீவனங்கள் கிடைப்பது இல்லை. எனவே எல்லா நாட்களிலும், எல்லா மாதங்களிலும் சரியான அளவில் பசுந்தீவனங்களை வெள்ளாடுகளுக்குக் கொடுக்க பசுந்தீவனங்களை போதிய அளவு உற்பத்தி செய்ய வேண்டும்.
ஆடுகளுக்கு பசுந்தீவனங்கள் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
•பசுந்தீவனங்கள் ஆடுகளால் விரும்பி உண்ணக்கூடியவை. எளிதில் ஜீரணமாகக் கூடியவை.
•அதிகமான அளவில் பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து வெள்ளாடுகளுக்கு கொடுப்பதன் மூலம் வெள்ளாடுகள் வேகமாக வளர்ந்து விரைவில் நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
•பசுந்தீவனங்களை கொடுப்பதன் மூலம் அடர் தீவனத்தின் அளவை குறைக்கலாம்.
•பசுந்தீவனங்களில் புரதம்; மற்றும் தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
•பசுந்தீவனங்களில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
•பசுந்தீவனங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றன.
•உலர்தீவனங்களுடன் பசுந்தீவனத்தை சேர்த்துக் கொடுக்கும் போது உலர்தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதோடு செரிமானத் தன்மையும் கூடுகிறது.
பசுந்தீவனங்களை அளிக்கும் முறைகள் :
பசுந்தீவனங்களை தரையில் போடாமல், கயிற்றில் கட்டாமல் இரண்டு அடி உயரத்தில் மரப் பெட்டியில் வைத்துக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் வெள்ளாட்டின் சாணமோ, சிறுநீரோ பசுந்தீவனத்தில் பட்டு விட்டால் அவற்றை ஆடுகள் உண்ணாது. ஒரே வகையான மர இலைகளை உண்ணாது. எனவே மர இலைகளை மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும்.
மேலும் பசும் புற்களை சிறுசிறு துண்டுகளாக கத்திரி கொண்டோ அல்லது இயந்திரம் மூலமோ நறுக்கி தீவனதொட்டியில் வைத்துக் கொடுத்தால் பசுந்தீவனங்கள் வீணாவதை தவிர்க்கலாம். புற்களையும் அடர்தீவனத்தையும் தனித்தனியாக தீவனத் தொட்டியில் இடவேண்டும். தினமும் தீவனத்தை 2-3 வேளை கொடுக்க வேண்டும்.
உலர் தீவனத்தை தனியாக கொடுக்காமல் பசுந்தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். வெட்டிய புற்களை பதப்படுத்தி யூரியா. கரும்பு கழிவுச்சாறு மற்றும் தாது உப்புக்களைக் கொண்டு சத்துடையதாக செய்து கொடுத்து அடர்தீவனத்தின் அளவைக் குறைக்கலாம். குறிப்பாக வெள்ளாடுகளுக்கு சோளத்தட்டு, கம்பு தட்டு, கேழ்வரகு தட்டுகளை யூரியா மூலம் பதப்படுத்தி கொடுக்கலாம். ஒரு ஆடு நாளொன்றுக்கு 5 முதல் 6 கிலோ பசுந்தீவனத்தை உட்கொள்ளும்.
அடர்தீவனம்:
வெள்ளாடுகள் விரைவில் உடல் எடையை அதிகரிக்கவும், அதிக எடையுள்ள குட்டிகளைப் பெறவும் பசுந்தீவனத்துடன் அடர் தீவனத்தையும் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தை உள்ளு+ரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நாமே நல்ல தரமான அடர்தீவனத்தை குறைந்த விலையில் தயாரித்து ஆடுகளுக்கு கொடுக்கமுடியும். ஆடர்தீவனத்தில் வெவ்வேறு வகையான தீவனப் பொருட்கள் அடங்கியிருப்பதால் பசுந்தீவனத்தில் கிடைக்காத ஊட்டச் சத்துக்களையும் அடர் தீவனத்தின் மூலம் ஆடுகள் பெறுகின்றன. அடர் தீவனத்தை குருணை வடிவில் கொடுக்க வேண்டும்.
அடர்தீவனப் பொருட்கள்:
1.எரிசக்தி மிக்க தீவனப் பொருட்கள் : மக்காச் சோளம், வெள்ளைச் சோளம், அரிசிக் குருணை, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரை ஆலைக் கழிவு
2.புரதச் சத்து மிக்க தீவனப் பொருட்கள்: கடலைப் பிண்ணாக்கு, எள் பிண்ணாக்கு, சோயாப்; பிண்ணாக்கு, தேங்காய்ப்பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை பிண்ணாக்கு
3.எரிசக்தியும் புரதம் ஓரளவிற்கு அளிக்கும் வேளாண் உபபொருட்கள்: உளுந்து நொய், பாசிப்பயிறு நொய், துவரந்தூசு, சோயா மொச்சைத் தோல், கோதுமைத் தவிடு, அரிசி பாலிஸ், கருவேல மரக்காய்கள், நெற்றுகள், மரவள்ளிக் கிழங்கு திப்பி போன்றவை.
4.தாது உப்புக் கலவை
5.உப்பு
குட்டிகளுக்கான மாதிரி அடர்தீவனம்:
தானியங்கள் – 50 பங்கு
தவிடு வகைகள் – 18 பங்கு
பிண்ணாக்கு வகைகள் – 20 பங்கு
மீன்தூள் – 10 பங்கு
தாது உப்புக் கலவை – 1 பங்கு
உப்பு – 1 பங்கு
மொத்தம் – 100 பங்கு
வளர்ந்த ஆடுகளுக்கான மாதிரி அடர்தீவனம்:
தானியங்கள் – 25 பங்கு
தவிடு வகைகள் – 48 பங்கு
பிண்ணாக்கு வகைகள் – 25 பங்கு
தாது உப்புக் கலவை – 1 பங்கு
உப்பு – 1 பங்கு
மொத்தம் – 100 பங்கு
குட்டிகளுக்குத் தீவனமளித்தல்:
குட்டிகளுக்குப் பிறந்த 15 ம் நாளிலிருந்து சிறிது அடர் தீவனம், பயிறு வகைப் புற்களைத் தீவனமாகக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். 4 முதல் 5 வார வயதில் நாளொன்றுக்கு 50 கிராம் வரை அடர்தீவனம் அளிக்கலாம். 3 முதல் 6 மாத வயதில் கூடுதலாக ½-1 கிலோ பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் அளிக்க வேண்டும்.
சினை மற்றும் பால் கொடுக்கும் பெட்டை ஆடுகளுக்கு தீவனமளித்தல்:
சினை ஆடுகளுக்கு தினசரி 300 கிராம் அடர்தீவனம் அளிக்க வேண்டும். குட்டி ஈன்று பால் கொடுக்கும் ஆடுகளுக்கு நாளொன்றுக்கு 500 கிராம் வரை அடர் தீவனம் கொடுக்க வேண்டும். மேலும் சினை ஆடுகளுக்கு 4 முதல் 5 கிலோ வரையும் ஈன்று பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 5 முதல் 6 கிலோ வரையும் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். வெள்ளாட்டின் பாலில் சோடியம் குளோரைடு உப்பு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே பால்கொடுக்கும் ஆடுகளில் உப்பு தேவை அதிகம் இருக்கும். இதனை ஈடு செய்ய அடர்தீவனத்தில் உப்பைக் கலந்து கொடுக்க வேண்டும்.
செழுமைப்படுத்துதல்&இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்துதல்:
பெட்டை ஆடுகளின் இனவிருத்தி தன்மை, கருத்தரிப்பு தன்மையை மேன்மைப்படுத்தி நல்ல திடகாத்திரமான, ஆரோக்கியமான, தரமான மற்றும் அதிகமான குட்டிகள் பெற பெட்டை ஆடுகளுக்கு இனப்பெருக்க காலங்களில் 15 நாட்களுக்கு முன்பு தரமான சரிவிகித அடர் தீவனத்தை தினமும் 150- 200 கிராம் அளவிற்கு கொடுக்க வேண்டும். இது போலவே குட்டிகள் ஈனும் 15 தினங்களுக்கு முன்பும் குட்டி ஈன்ற பின்பும் 45 – 60 நாட்களுக்குக் கொடுத்தல் அவசியம். இதனால் பால் உற்பத்தி பெருகி திடகாத்திரமான குட்டிகளை உருவாக்கலாம்.
வயதிற்கேற்ப அடர்தீவனத்தின் அளவு:
வயது | உடல் எடை (கிலோ) | அடர் தீவனத்தின் அளவு (கிராம்) |
குட்டி (0-3 மாதம்) | 15 வரை | 50 |
வளரும் ஆடுகள் (4 -12 மாதம்) |
15-20 | 100 |
வளர்ந்த ஆடுகள் (1வருட வயதிற்கு மேல்) |
21-25
26-30 31-40 41-50 50க்கு மேல் |
150
200 250 300 350 |
பொலி கிடா | 400 | |
சினை ஆடு | 300 | |
பால் கொடுக்கும் ஆடு | 500 |
தாது உப்புக் கட்டி:
தாது உப்புக்கட்டியில் முக்கிய தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம் மற்றும் மக்னீசியமும், குறைந்த அளவு தேவைப்படும் தாதுக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் அடங்கி இருக்கின்றன. கொட்டகையில் தாது உப்புக் கட்டியை கட்டித் தொங்க விடுவதன் மூலம் வளரும் ஆடுகள், சினை ஆடுகள், குட்டி ஈன்ற ஆடுகள் தங்களுக்கு தேவையான தாதுக்களை பெற ஏதுவாக இருக்கும். இதன் மூலம் ஆட்டுக்குட்டிகள் மண்ணை உண்ணும் பழக்கத்தையும் தடுக்கலாம்.
முழுத் தீவனம்:
கொட்டில் முறையில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளுக்கு முழுத்தீவனம் அளிப்பது ஒரு சிறந்த தீவனப்பராமரிப்பு முறையாகும். முழுத்தீவனம் என்பது பசுந்தீவனம், அடர்தீவனம் என தனித்தனியே இல்லாமல் அவை இரண்டும் சரிவிகிதமாக கலந்து தயாரிக்கப்படும் தீவனமாகும். முழுத்தீவனத்தை குச்சி வடிவமாகவோ அல்லது பிண்ணாக்கு வடிவிலோ தயாரித்து அளிக்கும் பொழுது தீவன விரயம் தவிர்க்கப்படுவதுடன் எல்லா ஊட்டச் சத்துக்களும் தேவையான அளவுகளில் கிடைத்து விடும்.
முழுத் தீவனத்தில் வேளாண்கழிவுகளையும், உபபொருட்களையும் பெருமளவில் பயன்படுத்தி தீவனச் செலவைக் குறைக்க இயலும். இத்தகைய முழுத்தீவனத்தை வளர்ந்த ஆடுகளுக்கு 2 முதல் 2 2 ½ கிலோவும் வளரும் குட்டிகளுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை நாளொன்றிற்கு அளித்தால் போதுமானது.
மாதிரி முழுத் தீவனம்:
சோளத் தட்டை – 30 பங்கு, சீமைக்கருவேலம் அல்லது கருவேலமரக்காய்கள் – 30 பங்கு,காய்ந்த சூபாபுல் – 20 பங்கு, கோதுமைத் தவிடு – 16.5 பங்கு, யூரியா 0.5 பங்கு, தாது உப்புக்கலவை 2 பங்கு, உப்பு 1 பங்கு.
கோடை காலங்களில் வெள்ளாடுகளின் தீவன பராமரிப்பு முறைகள்:
கோடை காலங்களில் பொதுவாக வெள்ளாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் போக்கவதற்கு தகுந்த பராமரிப்பு உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலங்களில் அதிகமாக விளையும் புற்களை உலர் புற்களாக மாற்றியோ அல்லது ஊறுகாய் புற்களாக மாற்றியோ சேமித்து வைத்து கோடையில் ஏற்படும் தீவன பற்றாக்குறையைப் போக்கலாம். கோடையில் மேய்ச்சல் நிலங்களில் உள்ள புற்களும், மர இலைகளும் பொதுவாக ஊட்டச் சத்துக்களை குறைவாகவே கொண்டிருக்கும். இந்த ஊட்டச் சத்துக்களின் பற்றாக் குறையை போக்குவதற்கு அடர்தீவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.
குடிநீர்:
தண்ணீர் ஒரு சத்துப் பொருளாக இல்லையென்றாலும் மிகவும் அவசியமான ஒரு இடு பொருளாகும். கால்நடைகள் தீவனமில்லாமல் சில காலம் உயிரோடு வாழ முடியும். ஆனால் குடிநீரில்லாமல் சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. தீவனப் பொருட்கள் செரிமானத்திற்கும சத்துப் பொருட்கள் கரைந்து குடல் பகுதியிலிருந்து உறிஞ்சப்படுவதற்கும், கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், உடல் தட்ப வெப்ப நிலையை சீரான நிலையில் வைத்திருக்கவும் தண்ணீர் மிகவும் அவசியமாகிறது.
கொட்டில் முறையில் வளர்க்கப்படும் ஆடுகள் பசுந்தீவனங்களை அதிக அளவில் உட்கொள்வதால் ஆடுகளின் குடிநீர்த் தேவை பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். வெள்ளாடுகள் தினசரி 3 முதல் 5 லிட்டர் வரை நீர் அருந்தும். ஆடுகளுக்கு ஒரு நாளில் 2 அல்லது 3 முறை குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
தகுந்த தீவன பராமரிப்பு முறைகளைக் கையாண்டால் வெள்ளாடுகள் அதிகபட்ச வளர்ச்சி அடைந்து, விரைவில் பருவத்தை அடைந்து, எளிதில் சினைப்படும். சினை ஆடுகள் அதிகமான நல்ல தரமான குட்டிகளை நல்ல முறையில் ஈனும். குட்டிகளை ஈன்ற தாய் ஆடுகளில் பால் அதிகம் சுரந்து குட்டிகளுக்கு பால் அதிக அளவில் கிடைப்பதால் குட்டிகளில் இறப்பு விகிதம் மிக அதிக அளவில் குறையும். குட்டிகளில் உடல் எடை அதிகரித்து 6 முதல் 7 மாதங்களில் விற்பனைக்கு வந்து ஆடு வளர்ப்போருக்கு அதிக இலாபம் கிடைக்கும்.