கிராமங்களில் பெரும்பாலும் நாட்டுக் கோழிகள் முறையான பராமரிப்பு ஏதுமின்றி புறக்கடை முறையிலேயே வளர்க்கப்படுகின்றன. இரவில் கோழிகளை கூடையிலோ, பஞ்சாரத்திலோ, திண்ணைக்கு கீழ் உள்ள இடத்திலோ அல்லது மரத்தாலான சிறிய கூண்டுகளிலோ அடைத்து பின் காலையில் புறக்கடையில் விடுவார்கள். பலரது நாட்டுக்கோழிகள் அவர்களது வீட்டின் கூரை மேல் பகுதியிலும் அருகில் உள்ள மரங்களின் கிளைகளிலும் அடைந்து இரவைக் கழிக்கின்றன.
நாட்டுக்கோழிகள் வீட்டைச் சுற்றிலும் உள்ள குப்பைகளையும் கூளங்களையும் கிளறி கிடைக்கும் சிந்திய தானியங்கள், புழு பூச்சிகள் மற்றும் இலை தழைகளை உண்ணும். சில சமயங்களில் நாட்டுக்கோழிகளை வளர்ப்போர் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, அரிசி குருணை போன்றவற்றை உணவாக அளிப்பர். சில நேரங்களில் பிறரது கொல்லைக்குச் சென்று தானியங்களை உண்ணுவதால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு உண்டாக நேரிடுகிறது.
இளங்குஞ்சுகளைக் காகம், பருந்து, வல்லூறு, நாய் மற்றும் பூனைகள் பிடித்துச் செல்வதால் இழப்பு மற்றும் நாட்டுக்கோழிகளில் அதிக நோய்த் தாக்குதலால் இறப்பு போன்றவற்றால் கோழி வளர்ப்பில் தற்காலிக சுணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிரமங்கள் ஏதுமின்றி கிராமப்புற மகளிர் நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் அதிக இலாபம் பெறுவதற்கான எளிய சிறந்த முறை கூண்டு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதேயாகும்.
கூண்டு அமைக்கும் முறை:
கூண்டு முறையில் நாட்டுக் கோழிகளை வளர்க்க 6 அடி நீளம், 4 அடி அகலம். 2 முதல் 3 அடி உயரம் கொண்ட அரை அங்குல வெல்டு கம்பிகளால் ஆன கூண்டை இரும்பினால் ஆன சட்டத்தில் பூமிக்கு மேல் 3 அடி உயரத்தில் பொருத்தி கூண்டிற்கு அரை அடி கீழே கோழியிடும் எச்சத்தைச் சேகரிக்க எச்ச சேகரிப்புத் தட்டு ஒன்றும் பொருத்தப்பட வேண்டும். நீளத்தின் மத்தியில் 3 அடியிலும், அகலத்தின் மத்தியில் 2 அடியிலும் இதே கம்பி வலை கொண்டு தடுப்பு பொருத்தப்பட வேண்டும். இந்த வடிவமைப்பில் 6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட கூண்டு 4 அறைகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஓவ்வொரு அறைக்கும் மத்தியில் ஒரு அடி அளவில் திறந்து மூட கதவு ஒன்றைப் பொருத்த வேண்டும். இரும்புத் தகடினால் ஆன கூரை ஒன்றைப் பொருத்த வேண்டும். கூரையின் விளிம்பு பக்கவாட்டில் இருபுறமும் முக்கால் அடி நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கூண்டை வராந்தாவிலோ, உபகோயப்படுத்தப்படாத அறையிலோ வைத்து நாட்டுக்கோழிகளை வளாக்கலாம். கொட்டகை தேவையில்லை. கோழிகளுக்குத் தீவனம் மற்றும் தண்ணீரை அதற்கு உண்டான தட்டுகளில் கூண்டின் உள்ளேயே தரலாம்.
கோழிகளைப் பாதுகாக்க கதவில் தாழ்ப்;பாள் பொருத்திப் பூட்டிக் கொள்ளலாம். ஓவ்வொரு அறையிலும் 10 நாட்டுக் கோழிகளை ஒன்றரை கிலோ உடல் எடை அடையும் வரை வளர்க்கலாம். கூண்டின் 4 அறையிலும் சேர்த்து மொத்தமாக 40 கோழிகளை வளர்க்கலாம்.
கூண்டின் கீழேயும் இதேபோல் கம்பி வலை அமைத்து 4 அறைகளாகப் பிரித்து ஒரு கூண்டை 2 அடுக்குகள் மற்றும் 8 அறைகள் கொண்ட கூண்டாக மாற்றினால் மொத்தம் 80 நாட்டுக் கோழிகளை குஞ்சு பொரித்தது முதல் 5 மாதங்கள் வரை வளாக்கலாம். கோழிகள் இடும் எச்சமானது கூண்டுக்கு அடிப்புறம் உள்ள தட்டுகளில் விழுந்து விடுவதால் சுத்தப்படுத்துவது எளிது. மேலும் ஒரே கூண்டில் 2 முதல் 3 அடுக்குகள் வரை வைத்து நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம்.
கூண்டு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:
- காகம், பருந்து, வல்லூறு போன்றவற்றினால் கோழிக்குஞ்சுகளுக்கு ஏற்படும் இறப்பினைத் தவிர்த்து முறையான வளர்ப்பில் 100க்கு 95 குஞ்சுகளுக்கு மேலாக வளர்த்து விற்பனை செய்ய முடியும்.
- கூண்டு முறையில் இறப்பு 4 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
- சுகாதாரமான முறையில் தீவனம் மற்றும் தண்ணீர் அளிக்க முடியும்.
- கோழிகள் நோயின்றி வளரும். தடுப்பூசி போடுவது எளிது.
- உரிய காலத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசிகளை 7வது நாள் மற்றும் 8வது
வாரத்தில் அளித்தால் நோய்த் தாக்காமல் ஆரோக்கியமாக வளர்க்க முடியும். - தேவைப்படும் போது அலகு வெட்டுவது சுலபம்.
- தேவைப்படும் போது வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்குவதும் எளிது.
- நாட்டுக்கோழிகள் குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக உடல் எடை கிடைக்கும். கூண்டில்
வளரும் நாட்டுக்கோழிகள் முறையான பராமரிப்பிலும், தேவையான சத்துக்கள் அடங்கிய
அடர்தீவனம் அளித்தும் சுமார் மூன்று மாதங்களில் சராசரியாக ஒரு கிலோ உடல் எடை
கிடைக்கும். ஒரு கிலோ உடல் எடை வளர 3 முதல் 3½ கிலோ தீவனம் உட்கொள்ளும். - அருகில் வாழும் மக்களுக்கும் தொந்தரவு இல்லாமல் நாட்டுக்கோழிகளை வளர்க்க முடியும்.
- இந்த முறையில் கிராமப்புற மகளிர்,மற்றும் இதர பெண்கள் வீட்டில் இருந்த படியே மாதம்
ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை எளிதில் சம்பாதிக்க முடியும்.